Thursday, July 31, 2014

தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் - ஹிஜாப் அணியவே முடியாது.. ! - தேர்தல்கள் ஆணையாளர்

காதுகளை மூடிய அடையாள அட்டையும் செல்லுபடியாகாது!

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுக்கான விசேட தெளிவுறுத்தல் கலந்தாலோசனை நேற்று (30) தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு ஜாத்திக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தேர்தல் ஆணையாளரிடம் பல வினாக்களை கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வருகின்ற முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகமூடி வருவது தொடர்பாகவும், தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது முஸ்லிம் பெண்கள் படம் எடுத்துக் கொள்ளும்போது, காதுகளை மூடும் வண்ணம் ஹிஜாப் அணிவதும் பிரச்சினைக்குரியதாகும் என வினா எழுப்பினார்.

அத்துடன், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் முகமூடியிருப்பது தொடர்பிலும் தேர்தல் ஆணையாளரிடம் வினா எழுப்பியதுடன், அதுதொடர்பில் தேர்தல் ஆணையாளரின் கருத்தையும் குறிப்பிடுமாறு கோரினார்.

அவரது வினாவுக்கு விடையளிக்குமுகமாக தேர்தல் ஆணையாளர், வாக்குச் சாவடிக்கு வருகின்ற எந்தவொரு முஸ்லிம் பெண்ணோ வேறு எவரோ முகத்தை மறைத்து வர முடியாது எனக் குறிப்பிட்டார்.

அதற்கு எந்தவொரு முறையிலும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிகாப் மற்றும் புர்கா அணிந்து வாக்களிக்க முடியாது எனவும் தெளிவுறுத்தியதுடன் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது காதுகளை மறைக்க முடியாது எனவும், ஒவ்வொருவரையும் இனங்காண ஏதுவாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் தெளிவுறுத்தினார்.

இதற்கேற்ப, எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்கும்போது முகத்தை முழுமையாகவோ குறைவாகவோ மறைக்க முடியாது என்பதுடன் அடையாள அட்டையில் காதுகள் மறைக்கப்படக்கூடாது எனவும் தேர்தல் ஆணையாளர் கட்சிச் செயலாளர்களிடம் தெளிவுறுத்தியுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com