Sunday, June 8, 2014

கிழக்கு மாகாண முதலமைச்சர் சுழற்சியில் இழுபறி. அமீர் அலி , நஜீப் போட்டி தொடர்கின்றபோது பிள்ளையான் மீது பார்வை திரும்புகின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படும் என்ற வாய்மூல உறுதிமொழியின் அடிப்படையிலேயே இன்றைய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பதவியேற்றிருந்தார். காலக்கெடு முடியும் தறுவாயில் எவ்விதமான முன்னேற்றமும் நஜீப் ஏ மஜீதின் காலத்தில் இடம்பெறவில்லை என்ற எண்ணற்ற குற்றச்சாட்டுக்களுடன் அமீர் அலி தரப்பினர் பதவியை கைப்பற்ற முனைவதாக அறியக்கிடைக்கின்றது.

கிழக்கு அரசியல் வட்டாரங்களில் உருவெடுத்திருக்கின்ற முதலமைச்சருக்கு எதிரான அலை தொடர்பில் அரச தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபற்றான தகவல்களும் வெளிவராதபோதும் மாற்றம் ஒன்றுக்கு இடமில்லை என அரசாங்கத்தின் உயர்மட்ட உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றமொன்றுக்கான முன்மொழிவுகள் தொடர்பில் பரிசீலனை செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில பங்காளிக் கட்சிகள் பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இந்நிலைமை தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை தொடர்பு கொண்டு கேட்டபோது, நஜீப் அமீர் அலி ஆகியோரிடையேயான போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளமையை உறுதி செய்த அவர் இந்நிலையால் சபை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேநேரம் தனது கட்சிக்கு சபையில் பலமில்லாத நிலையில் தான் முதலமைச்சராக மீண்டும் ஆசனத்தில் அமர்வதால் மக்களுக்கு எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விளக்குகையில் : முதலாவது தேர்தலில் பெரு வெற்றியை பெற்று தாம் ஆட்சி அமைத்ததாகவும் அதன் பலத்தை கொண்டு தனது மக்களுக்கு செய்யக்கூடிய சேவையினை செய்ததாகவும் , ஆனால் இன்று அந்த பலம் இல்லாதபோது முதலமைச்சராக ஆசனத்தில் அமர்வதால் எந்த ஒரு விடயத்தையும் நிறைவேற்ற முடியாதாக முதலமைச்சாராவே ஆசனத்தில் இருக்கவேண்டி வரும் என்றும் அதை தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com