Sunday, June 8, 2014

நியூசிலாந்து எதிர்கட்சிகள் ஆசிய புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெளிநாட்டவர் விரோத பிரச்சாரம் செய்கின்றன. By Tom Peters

கடந்த மாதத்தில் நியூசிலாந்தின் பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சி, பசுமை கட்சி, மாவோரி தேசியவாத மனா கட்சி (Mana Party) மற்றும் வலதுசாரி NZ First கட்சி ஆகியவை, குறிப்பாக சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளிலிருந்து புலம்பெயர்வைத் தடுக்க, அவற்றின் வெளிநாட்டவர்-விரோத பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்த கட்சிகள் செப்டம்பர் தேர்தல் சமயத்தில் இதையொரு முக்கிய பிரச்சினையாக்க முயற்சித்து வருகின்றன.

2011 தேர்தலில் படுதோல்வியடைந்த தொழிற்கட்சி, கருத்துக்கணிப்புகளில் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில், அதற்கும் பழமைவாத தேசிய கட்சி (National Party) அரசாங்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பரவலாக பார்க்கப்படுகிறது. 2008இல் தேசிய கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அது பூகோள பொருளாதார நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்த, தொடர்ச்சியாக கண்மூடித்தனமான சிக்கன முறைமைகளை நடைமுறைப்படுத்தியது, இது வாழ்க்கை செலவுகளின் உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு இட்டு சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான அரசுத்துறை வேலைகளின் வெட்டுக்கள், மருத்துவ மற்றும் கல்வித்துறை வெட்டுக்கள், மற்றும் பின்தங்கியவர்கள் மீது பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியை உயர்த்தியமை உட்பட அந்த அரசாங்கத்தின் தாக்குதல்களோடு தொழிற்கட்சி உடன்படுகிறது.

இப்போது தொழிற்கட்சியும் அதன் கூட்டாளிகளும் புலம்பெயர்ந்தவர்கள் மீது விரோதத்தைத் தூண்டிவிட்டு வருகின்றன, ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு, குறிப்பாக வீட்டு வாடகை அதிகரித்து வருவதற்கு அவர்களைக் குறை கூறி வருகின்றன. பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பின் -OECD- தகவலின்படி, நியூசிலாந்தில் கட்டுபடியாகும் வாடகையிலான வீடுகள் அரிதாகவே உள்ளதுடன், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கட்டுபடியாகும் விலையிலான வீடுகள் அரிதாக உள்ள நாடுகளின் வரிசையில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 2011 கிறிஸ்ட்சேர்ச் பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டதோடு சேர்ந்து முதலீட்டாளர்களின் கட்டுப்பாடற்ற ஊகவணிகங்களின் விளைவாகும்.

மே 26இல் TV3இல் உரையாடுகையில் தொழிற்கட்சி தலைவர் டேவிட் குன்லிஃப் (David Cunliffe), “எங்கள் வீடு, எங்கள் பாடசாலைகள், எங்கள் மருத்துவமனைகள்" என அழுத்தம் அளிப்பதற்காக புலம்பெயர்ந்தவர்களைக் குறை கூறினார். இந்த ஆண்டு 40,000 மக்களின் மொத்த புலம்பெயர்வு இருக்குமென கருவூலம் எதிர்பார்க்கிறது. மே 19இல் Fairfax Mediaவிடம் குன்லிஃப் கூறுகையில், தொழிற்கட்சியின் கீழ் இது பாதியாக குறைக்கப்படும், மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் முடிந்தளவிற்கு குறைவாக ஆண்டுக்கு 5,000 என்றளவில் "கட்டுப்படுத்தப்படும்" என்றார்.

இந்த கொள்கையின் ஆத்திரமூட்டும் இயல்பு, நியூசிலாந்தில் குடியிருக்கும் 4.5 மில்லியன் மக்களில் ஒரு கால் பங்கினர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்ற உண்மையால் அடிக்கோடிடப்படுகிறது. மிகப் பெரிய நகரமான ஆக்லாந்தில், இந்த எண்ணிக்கை அரை மில்லியனாகும் அல்லது 39.1 சதவீதமாகும். நியூசிலாந்தில் குடியிருக்கும் ஆசிய இன மக்களின் சதவீதம் 2001இல் இருந்து ஏறத்தாழ இரண்டு மடங்காகி 11.8 சதவீதமாக உள்ளது.

புலம்பெயர்ந்தவர் விரோத பிரச்சாரம், முதன்மையாக, கடந்த ஆண்டில் புதிதாக வந்தவர்களில் அதிகபட்சமாக உள்ள சீனாவிலிருந்து வந்தவர்கள் மீதான ஒரு தாக்குதலாக உள்ளது. இந்த பிரச்சாரம், நியூசிலாந்தின் ஏற்றுமதி சந்தையாக முதலிடத்தில் உள்ள சீனாவுடன் அரசாங்கம் கொண்டுள்ள வியாபார தொடர்புகள் மீதான எதிர்கட்சிகளின் சமீபத்திய தாக்குதலோடு பொருந்தி உள்ளது.

இது நியூசிலாந்தின் மிக நெருங்கிய இராணுவ பங்காளியான வாஷிங்டனில் இருந்து, இன்னும் நெருக்கமாக ஒபாமா நிர்வாகத்தின் ஆக்ரோஷமான "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்போடு" அணி சேர அந்நாட்டிற்கு அளிக்கப்படும் அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது. அந்த முன்னெடுப்பு சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கவும் மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கவும் நோக்கம் கொண்டதாகும். ஆஸ்திரேலியா செய்ததைப் போலவே, இன்னும் அதிகமாக வெளிப்படையாக அமெரிக்காவை அரவணைக்க நியூசிலாந்தின் ஆளும் மேற்தட்டிற்குள் அங்கே அதிகளவிலான ஆதரவு உள்ளது.

ஏப்ரல் 27இல் சன்டே ஸ்டார் டைம்ஸில் வெளியான முதல் பக்க கட்டுரை மூலோபாய பகுப்பாய்வாளர் பால் புக்கான்னை மேற்கோளிட்டுக் காட்டியது, அவர் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் சமநிலைப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை "ஏற்கத்தக்கதல்ல" என்று வர்ணித்திருந்தார். “ஏதோவொரு புள்ளியில் நியூசிலாந்து [சீனாவுடனான] அதன் வர்த்தக உறவிற்கும், அமெரிக்கா உடனான அதன் பாதுகாப்பு உறவுக்கும் இடையே ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா உட்பட அப்பிராந்தியத்தின் ஏனைய அமெரிக்க கூட்டாளிகளைப் போலவே நியூசிலாந்தும் சமீபத்திய ஆண்டுகளில் அதன் இராணுவ மற்றும் உளவுத்துறை உறவுகளை அமெரிக்காவுடன் பலப்படுத்தி உள்ளது. 1999-2008 தொழிற்கட்சி அரசாங்கம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு துருப்புகளை அனுப்பியதன் மூலம் முக்கிய பாத்திரம் வகித்தது. தேசிய அரசாங்கத்துடன் சேர்ந்து, தொழிற்கட்சி மற்றும் பசுமை கட்சியினரும் சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, உக்ரேனில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சி கவிழ்ப்பை ஆதரித்தன.

2012இல் மனா, NZ First, தொழிற்கட்சி மற்றும் பசுமை கட்சி அனைத்தும் ஒன்றுசேர்ந்து, அரசு சொத்து விற்பனை மீதான மக்களின் கோபத்தை ஒரு சீன நிறுவனத்திற்கு சில பண்ணைகளை விற்றதற்கு எதிரான ஒரு பேரினவாத பிரச்சாரத்திற்குள் திசைதிருப்பி விட வேலை செய்தன. “நமது நிலங்களை சீனர்கள் வாங்குவதன் மீது கோபம்” கொண்டவர்கள், "ஓடிரோ [நியூசிலாந்து] விற்பனைக்கல்ல" என்ற தேசியவாத முழக்கத்தின் கீழ் நடக்கும் போராட்டங்களில் இணையுமாறு மனா கட்சி தலைவர் ஹோன் ஹராவிரா (Hone Harawira) அழைப்புவிடுத்தார்.

இந்த ஆண்டு அரசாங்க மந்திரிகள் ஜூடித் கொலின்ஸ் மற்றும் மௌரிஸ் வில்லியம்சன் மீது குவிந்திருந்த "ஊழல்" மோசடிகளை எதிர்கட்சிகளும், பெருநிறுவன ஊடகங்களும் எரியூட்டி உள்ளன. மாமிசம் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான ஒர்விடா (Oravida) சீனாவில் அதன் தொழிலில் வளர கொல்லின்ஸ் அவரது பதவியைப் பயன்படுத்தி உதவியதாக குற்றச்சாட்டப்படுகிறார். அவரது கணவர் சீனாவைச் சேர்ந்த நியூசிலாந்துகாரர் டேவிட் வாங்-துங் அந்நிறுவனத்தின் இயக்குனர் ஆவார். உள்நாட்டு வன்முறை குற்றச்சாட்டுகளின் மீது கைது செய்யப்பட்ட ஒரு செல்வந்த சீன வியாபாரியும் தேசிய கட்சியின் நன்கொடையாளருமான டொன்ங்குவா லியு (Donghua Liu) மீதான ஒரு பொலிஸ் புலன்விசாரணையில் வில்லியம்சன் அவரது செல்வாக்கைப் பயன்படுத்த முயன்றது அம்பலமானதும், அவர் அவரது கட்டிட மற்றும் கட்டுமானத்துறை மந்திரி பதவியிலிருந்து மே 1இல் இராஜினாமா செய்தார்.

தொழிற்சங்கத்தின் நிதியுதவி பெற்ற Daily Blogஇல் தொழிற்கட்சி-சார்பு கட்டுரையாளர் கிறிஸ் ட்ரோட்டர் மே 7இல் எழுதுகையில், கொல்லின்ஸ் மற்றும் வில்லியம்சன் மீதான முறைகேடுகள் சீன புலம்பெயர்ந்தவர்களிடம் இருக்கும் "தேசிய அதிகாரம் மற்றும் செல்வாக்கின் விகிதாச்சாரமற்ற அளவை" எடுத்துக்காட்டுவதாக எழுதினார். சில சீன-நியூசிலாந்துகாரர்கள் ஆக்லாந்தை "சீன நிதியியல் வளாகமாக மற்றும் (மற்றும் உலகளவில் விரிவடைந்து வரும்) பாரிய சீன புலம்பெயர்ந்தோரின் உள்ளூர் முகவர்களின் ஆதிக்கம் மிகுந்த பண்டகசாலையாகவும்" ஆக்க விரும்புவதாக அவர் அறிவுறுத்துகிறார்.

இந்த வெளிநாட்டவர் மீதான விரோத வாய்ஜம்பத்தின் தொனி, ஆசிய புலம்பெயர்வை தடுக்கும் அடித்தளத்தில் 1993இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வலதுசாரி வெகுஜனவாத கட்சியான NZ First கட்சியால் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் குற்றம், விபச்சாரம், சூதாட்டம், வேலைவாய்ப்பின்மை, ஓய்வூதியங்கள் வழங்குவதில் உள்ள செலவுகள், போக்குவரத்து நெரிசல், அத்தோடு வீடுகளின் பற்றாக்குறை உட்பட பல சமூக பிரச்சினைகளுக்கு சீன புலம்பெயர்ந்தோரை பலிக்கடாவாக ஆக்கியுள்ளார்.

மே 23இல் மாஸ்டர்டன் நகர பொது கூட்டத்தில், தேசிய கட்சிக்கு நிதியளிக்கும் சீன நன்கொடையாளர்கள் புலம்பெயர்வு கொள்கையில் மாற்றங்களைக் கோரி வருவதாகவும், அந்நாடு சீனா மற்றும் ஆஸ்திரேலியாவின் பொருளாதார காலனி நாடாக மாறி வருவதாகவும் பீட்டர்ஸ் வாதிட்டார். கட்டிட, நில நிறுவனமான பார்புட் & தாம்சனின் முதல் 25 முகவர்களில் 21 நிறுவனங்கள் ஆசிய நிறுவனங்களாகும் என்று கூறியதோடு, ஆக்லாந்தில் சொத்துக்களை விளம்பரப்படுத்தும் சீன மொழி சிறுபிரசுரங்களை நீக்க கோரினார்.

தொழிற்கட்சியும், அதன் கூட்டாளிகளும் பெரும்பாலும் NZ First கட்சியின் நிலைப்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர், அதை கூட்டணி அரசாங்கத்தில் ஒரு முக்கிய கூட்டாளியாக்க தொழிற்கட்சி முயற்சித்து வருகிறது.

மே 6இல் Daily Blogஇல் எழுதுகையில் மனா கட்சியின் முன்னணி அங்கத்தவர் ஜோன் மின்டோ, தொழில் வழங்குனர்கள் "ஐரோப்பா மற்றும் ஆசியா என வெளிநாடுகளில் இருந்து மலிவான, மிகவும் கீழ்ப்படிவான தொழிலாளர்களை" வேலையில் நியமிப்பதைத் தடுக்க அழைப்புவிடுத்தார் (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது). வீடுகள் விற்பனை சந்தையில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதில் நியூசிலாந்துகாரர்கள் "ஆத்திரமடைவார்கள்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். அவர், பொருத்தமற்ற விதத்தில், இந்த நிலைப்பாடுகள் "வெளிநாட்டினர் மீதான விரோதபோக்கோ அல்லது இனவாதமோ" அல்ல மாறாக "வெறுமனே சுய-மரியாதை குறித்ததாகும்" என்று வாதிட்டார்.

மற்றொரு Daily Blog எழுத்தாளரும் மனா கட்சி ஆதரவாளருமான டிம் செல்வென், பிரதம மந்திரி ஜோன் கி "குடியேறியவர்களிடம் அடிபணிந்து கெஞ்சுமளவிற்கு தலைகுப்புற விழுந்துவிட்டார்" மற்றும் அவரது அரசாங்கம் "சீனர்களின் பையில் உள்ளது" என்று Tumeke வலைத்தளத்தில் ஆத்திரத்தோடு எழுதினார்.

மனா கட்சி தரப்பில் சார்ந்துள்ளதும், தேர்தலில் அதற்காக பிரச்சாரம் செய்ய உள்ள மத்திய தட்டு வர்க்க போலி-இடது அமைப்புகள், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, Fightback மற்றும் Socialist Aotearoa ஆகியவை இந்த அறிக்கைகளை விமர்சிக்காததன் மூலமாக அவர்களின் ஆதரவை எடுத்துக்காட்டுகின்றன.

ட்ரோட்டர், செல்வென் மற்றும் NZ First அனைத்துமே யதார்த்தத்தை தலைகீழாக திருப்புகிறார்கள். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சக்திகளால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஒரு நிதியியல் மற்றும் அரசியல் கட்டமைப்பிற்குள் செயல்பட்டு வரும் ஒரு மலிவு தொழிலாளர் தளமாக சீனா உள்ளது. இந்த நாடுகளில் உள்ள பெருநிறுவனங்கள் சீன தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து சுரண்டும் இலாபங்களில் பெரும் பங்கை எடுக்கின்றன.

சீன புலம்பெயர்ந்தோரை, நியூசிலாந்து பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்த நோக்கங்கொண்ட ஒரு புதிய காலனிய சக்தியாக சித்தரிப்பது, சீனாவிற்கு எதிரான யுத்தத்திற்கு அமெரிக்க ஆயுதமயமாக்கலுக்கு ஆதரவளிப்பதற்கான, அல்லது ஒரு நடுநிலை நிலைப்பாட்டை எடுப்பதற்கான காரணத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை விரோதிகளாக பார்க்கும் மனா கட்சியால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் மாவோரி மேற்தட்டு உட்பட பெருநிறுவனங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ அடுக்குகளின் பொருள்வாத நலன்களை இந்த பிரச்சாரம் பிரதிபலிக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எந்தவொரு சவாலையும் தடுக்க தேசிய பேரினவாதம் மற்றும் இனவாத அடையாள அரசியலைப் பயன்படுத்தும் அக்கட்சியின் முன்னே முற்போக்கானது எதுவுமில்லை என்பதற்கு மனாவின் அறிக்கை மேலதிக ஆதாரத்தை வழங்குகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com