பாடசாலைகளில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்! - டாக்டர் சிசிர லியனகே
நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் தரம் 10 - 11 இல் கற்கும் மாணவர்களுக்கான விஞ்ஞான பாடத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்கும் விதத்தில் பாடத்திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு கல்வியமைச்சரைக் கோரியுள்ளதாக அப்பிரிவின் தேசியப் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் -
தற்போது இளவயதினரிடையே கர்ப்பம் தரித்தல், பாலியல் நோய்கள் என்பன அதிகரித்துள்ளன. இதனைப் பாடசாலை மட்டத்தில் குறித்த பருவத்தினரிடையே பாலியல் கல்வியைப் புகட்டுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். பாடசாலையில் கல்வி கற்கும் க.பொ.த. சா.த மாணவர்களில் நாற்பது வீதமானோர் மாத்திரம் சுகாதார விஞ்ஞானத்தை கற்கின்றனர். இதன் காரணமாக மனித விருத்தி, எச்.ஐ.வி தாக்கம் என்பன பற்றி அநேகமானோர் அறிந்துள்ளனர்.
இதனை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டுமாயின் சகல மாணவர்களுக்கும் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ள விஞ்ஞான பாடத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க வேண்டும்.
தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு பாலியல் கல்வி தொடர்பான கருத்தரங்குகளை கல்வியமைச்சின் அநுசரணையுடன் நாடளாவிய ரீதியில் பாடசாலையில் சுகாதாரக் கழகங்களினூடாக நடத்தவும் திட்டமிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பிரிவின் அறிக்கையின்படி வருடாந்தம் 20000 இளவயது கர்ப்பம் தரிப்போர் நாட்டில் காணப்படுவதாகவும், இவர்கள் 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment