கண்டி உயர்பள்ளியொன்றின் அண்ணன்மார் தம்பிமாரிடம் கப்பம் எடுக்கின்ற கதை தெரியுமோ?
கண்டி ஆண்கள் உயர் பாடசாலையொன்றின் உயர் வகுப்பு மாணவர்கள், அப்பாடசாலையில் கல்வி கற்கும் கீழ்வகுப்பு மாணவர்களிடம் கப்பம் பெற்றுவருவது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயர் வகுப்புக்களில் கல்வி கற்கும் இம்மாணவர்கள், அப்பாடசாலையில் கீழ்ப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களை கண்டபடி அடித்து உதைப்பதாகவும், பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்குவதாகவும், அவர்களை அச்சுறுத்துவதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயர் வகுப்பு மாணவர்கள் கப்பம் எடுப்பதற்கு காரணமாக இருப்பவர், அப்பாடசாலையில் கல்வி கற்றுவிட்டு விலகிச் சென்ற ஒரு மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர், கண்டி நகரில் இருந்துகொண்டு ஆங்காங்கே கப்பம் எடுப்பதற்கு இந்த மாணவர்களை அடியாட்களாக கொண்டிருப்பதாகவும், அதனால் கீழ் வகுப்பு மாணவர்கள் உயர் வகுப்பு மாணவர்களுக்கு கப்பம் செலுத்தாதபோது, அவர்களை சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்குவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர்.
இவ்வாறு திரட்டும் கப்பப் பணத்திலிருந்து இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் போதைப் பொருட்களை வாங்குகின்றனர் எனக் கூறப்படுகின்றது. இதுபற்றி அதிபரிடம் பெற்றோர் பலமுறை எடுத்துச் சொல்லியுள்ள போதும், அதிபர் அதனைக் கருத்திற் கொள்ளாமலிருப்பது பெற்றோருக்கு பெரும் கவலையைத் தருவதாகவும்.. அதனாலேயே கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் கூறப்படுகின்றது.
கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment