Saturday, May 3, 2014

த.தே.கூ வில் சிலரின் செயற்பாடு பல்வைத்தியரிடம் இருதயநோய்கு சிகிச்சை கேட்பதாக உள்ளது. சாடுகின்றார் சுமந்திரன்.

மனித உரிமை பேரவையில் எடுத்த எடுப்பில் தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோர முடியாது என்றும் அவ்வாறு கோருவதானது பல்வைத்தியரிடம் இருதயநோய்க்கு சிகிச்சை கேட்பதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் போது அதனை நாம் கோருவதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் மனித உரிமைப் பேரவையானது மனித உரிமைகளை மட்டும் தான் விசாரணை செய்ய முடியும். அந்தப் பேரவையின் வரைபை வரைந்தவர்கள் அவ்வாறு தான் வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர்.

எனவே ஆணையாளரின் அலுவலகத்தினால் விசாரணை நடத்தப்படும் போது அதனை ஒத்த விடயங்கள் பற்றி ஆராயப்படும். அந்த விசாரணைகளின் போது இங்கு நடந்த வியடங்கள் வெளிப்படும். தமிழினம் அழிக்கப்பட்டதா ? போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமா என்பது தொடர்பாக அந்த விசாரணைகள் மூலம் தெரியவரும்.

இங்குள்ள ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதைப்போன்று எடுத்த எடுப்பில் தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு நாம் கோர முடியாது. அத்தோடு மனித உரிமைப் பேரவையில் அந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவும் முடியாது இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்கின்றனரில்லை.

துரதிஷ்ட வசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களும் தமிழின அழிப்பு சர்வதேச விசாரணை கோரித் தீர்மானம் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறிவருவதனால் சர்வதேச நாடுகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுடைய செயற்பாடானது, பல் வைத்தியரிடம் சென்று இருதய நோய்க்கு வைத்தியம் பார்க்கும் படி கூறுவதைப்போன்றுள்ளது.

மனித உரிமைப்பேரவையும் ஆணையாளர் அலுவலகம் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தும் போது எல்லா உண்மைகள் வெளிவரும் என்பதைப்புரிந்து கொள்ளாமல் சட்ட நுணுக்கம், சட்ட வரைவுகள் குறித்த அறிவற்றவர்கள் இவ்வாறு செயற்படுவது இலங்கை அரசிற்கு சாதமானதாகவுள்ளது.

ஏன் என்றால் ஐ.நா அமர்வில், தீர்மானம் கொண்டு வரப்படுதை இலங்கை அரசாங்கமும் எதிர்க்கின்றது இவர்களும் எதிர்க்கின்றனர். அப்படியானால் இவர்களுக்கும் அரசிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com