Saturday, April 19, 2014

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், எல்ரிரிஈ செயற்பாடுகளுக்கு நிதி உதவியளிக்கின்றது. சமரசிங்க.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் எல்ரிரிஈ செயற்பாடுகளுக்கு நிதி உதவியளிப்பதாக சாடியுள்ள அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத்தூதர் சமரசிங்க இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் பேச்சுவாhத்தை நடாத்தி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி. செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், இலங்கையில் எல்ரிரிஈ அமைப்பை தோல்வியடையச்செய்த போதிலும், அதனுடன் இணைந்த முன்னணி அமைப்புகள், அவர்களது தேசிய எல்லையை மீறி, ஈழ ராச்சியமொன்றை உருவாக்கும் நோக்கத்தில் செயற்படுகின்றன. அவர்கள் தொடர்ந்தும் பிரிவினைவாத பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி, பிளவுபட்ட ஒரு ராச்சியத்தை உருவாக்கும் கனவை நனவாக்குவதற்கு, முயற்சித்து வருகின்றனர். இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படும் அமைப்புகளின் செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது. எல்ரிரிஈ அமைப்புடன் தொடர்புடைய குழுக்கள், பிரிவினைவாத கொடிகளை ஏந்தி, பிரிவினைவாத வரைபடங்களை காட்சிப்படுத்தி, அவுஸ்திரேலியாவிலும், உலகின் ஏனைய நாடுகளிலும் நிதி திரட்டும் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம், தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சிக்கும் இவர்கள் வாரமொன்றுக்கு ஒரு டொலர் வீதம், ஆண்டொன்றுக்கு 52 டொலரை திரட்டி வருகின்றனர். இவ்வாறான எந்தவொரு அமைப்பிற்கும், எல்ரிரிஈ அமைப்பின் மீட்பாளர்களாக மாற முடியாது. நாம் இது தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளோம். அத்துடன் மேலும் பல தகவல்கள், எமக்கு கிடைத்த வண்ணமுள்ளன. எதிர்காலத்தில் நாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, இது குறித்து செயற்படவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com