Thursday, April 3, 2014

கோலாகலமாக நடைபெற்ற வவுனியா தமிழ் மன்ற “இயல் விழா” (படங்கள் இணைப்பு)

இளம் கலை இலக்கிய ஆர்வலர்களின் இணைவில் உருவாகி, கலை இலக்கிய துறைக்கு தன்னாலான பங்களிப்பை ஆற்றி வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது நிகழ்வான,‘இயல் விழா 2014’ ஐ வெகு சிறப்பாக, ஞாயிற்றுக்கிழமை (30.03.2014), வவுனியா கலாசார மண்டபத்தில் நடாத்தியது.

உலகப் புகழ் பெற்ற பேச்சபளரும், அகில இலங்கை கம்பன் கழக்தின் ஸ்தாபகருமகிய, கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந் நிகழ்வில், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த சிறப்பு பேச்சாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்,கல்விச் சமுகத்தினர் என பலதரப்பட்டோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். பெருந் திரளான மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்த, ஒரு மாபெரும் இலக்கிய நிகழ்வாக வவுனியா மண்ணில் இந் நிகழ்வு தடம் பதித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அமர்வுகளாக இடம் பெற்ற, இந் நிகழ்வில், காலை அமர்வு, காலை 8.45 மணிக்கு, வவுனியா பொது நூலக சரஸ்வதி சிலையிலிருந்து ஆரம்பமான ஊர்வலத்துடன் ஆரம்பமாகி, விருந்தினர்கள் அனைவரும் ஊர்வலத்துடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, அதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், தமிழ் வாழ்த்து என்பன இடம் பெற்றன. தொடர்ந்து, தமிழ் மாமன்றத்தின் தலைவர் இரா.ராஜேஸ்வரன் அவர்களினுடைய தலைமையுரை இடம் பெற்றது. தொடக்கவுரையினை வவுனியா பிரதேச செயலாளர் திரு க.உதயராசா அவர்கள் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழாசிரியர் திரு. என்.கே.கஜரூபன் தலைமையில், பாரதி மகாகவியாய் நின்ற நிலைக்க பெரிதும்; காரணமாவது, என்ற தலைப்பில், தேச விடுதலைப் பாடல்களே என க.மயூரதன் அவர்களும்;, தெய்வ வணக்கப் பாடல்களே என ஆரதி தசாவதரான் அவர்களும், தமிழ் வாழ்த்துப் பாடல்களே என கி.கிஷாந் அவர்களும், பெண் விடுதலைப்பாடல்களே என கு.சிரஞ்சீதன் அவர்களும், சாதி எதிர்ப்பு பாடல்களே என கிரிதரன் அவர்களும், சுய சரிதைப் பாடல்களே என க.கனகேந்திரன் அவர்களும் விவாதம் புரிந்த விவாத அரங்கு சிறப்பாக இடம் பெற்றது. இதில் விவாதம் புரிந்த பாடசாலை மாணவர்கள் மிகவும் சிறப்பாக தங்களுடைய விவாதத்தை முன் வைத்தனர்.

தொடர்ந்து, தமிழ் மாமன்றம், வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய ‘ வன்னியன் வாதச் சமர் 2013’ இற்கான பரிசளிப்பு நிகழ்வு இடம் பெற்றது. தொடர்ந்து, காலை அமர்வினுடைய இறுதி நிகழ்வாக, தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற,ஸ்ரீஜெயவர்த்தன பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், சிறந்த பேச்சாளரும் ஆகிய கலாநிதி ஸ்ரீ.பிராசாந்தன் அவர்களின் தலைமையில் சுழலும் சொற்போர் இடம் பெற்றர். வள்ளுவன் கூறும் பெண்மை ஆற்றலில் பெரிதும் சிறந்தவள், கண்ணகியே என சி.கிருபானந்தகுமாரன் அவர்களும், சீதையே என ச.கஜன் அவர்களும், பாஞ்சாலியே என ஜெசிதா ஆனந்தமூர்த்தி அவர்களும், தாரையே என சி.துஷாரன் அவர்களும், புனிதவதியே என மாதங்கி உலகநாதன் அவர்களும், கைகேயியே என கி.நிக்ஷலன் அவர்களும் விவாதித்தினர்.

மாலை நிகழ்வு மாலை 4.30 க்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடக்கவுரையினை யாழ் மாவட்ட நீதவான் திரு.க.அமலவளன் அவர்கள் நிகழ்த்தினார். தொடந்து, கவிஞர் குரும்பையூர் த.ஐங்கரன் அவர்கள் தலைமையில், இரா.இராஜேஸ்வரன், இந்திரன் சஜீந்திரா, மைதிலி தயாபரன், செ.மதுரகன் ஆகியோர் பங்கேற்ற,‘நால்வர் நற்றமிழ்’என்ற பொருளிலான கவியரங்கம் இடம் பெற்றது. சமகாலப் பிரச்சினைகளை, தம் கவி மூலம் சிறப்பாக முன் வைத்தனர்.

தொடர்ந்து, சிறப்பு நிகழ்வாக, உலகப் புகழ் வாய்ந்த பேச்சாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த பேச்சாளர்களான, திரு இரா.செல்வவடிவேல் , திரு.ந.விஜயசுந்தரம் ஆகியோரும், ஸ்ரீஜெயவர்த்தன பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளளர் கலாநிதி ஸ்ரீ.பிராசாந்தன் அவர்களும், வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர் திரு சிவ கஜன் அவர்களும், தமிழ் மாமன்றத்தை சேர்ந்த வைத்தியகலாநிதி செ.மதுரகன், ஜெ.கார்த்திகேயன் ஆகியோரும் பேச்சாளர்களாக பட்டி மன்றத்தை அலங்கரித்தனர்.

வருகைதந்திருந்த அனைவருடைய பாரட்டை பெற்றதும், அனைவரையும் ஓர் கிராமத்திற்கு அழைத்து செல்கின்ற உணர்வை ஏற்படுத்தியதுமான, இயல் விழாவினுடைய மேடை அமைப்பினை, பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் வே.துவாரகன் அவர்கள் மிகவும் சிறப்பாக அமைத்திருந்தார். இம் மேடை அலங்கரிப்பு, வவுனியா பிரதேச செயலாளர் அவர்களிள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க, வவுனியா பிரதேச செயலகத்தில் தற்போது காட்சிப் படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாமன்றத்தினுடைய கன்னி நிகழ்வான, இந் நிகழ்வு, வவுனியா என்றுமில்லாத வகையில் வரலாறு படைத்த, ஓர் இலக்கிய நிகழ்வாகவும், வவுனியா மண்ணினுடைய கலை இலக்கிய ரசனையையும், இளம் சமுதாயத்தினுடைய கலை இலக்கிய ஆர்வத்ததையும் அடுத்த கட்டத்தை நோக்கி இந் நிகழ்வு நகர்த்தி சென்றுள்ளது என்பதில் ஐயமுமில்லை.

‘தமிழால் வையகத் தலைமை கொள்வோம்’

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com