Thursday, April 3, 2014

வில்பத்து காட்டினை அழிக்காதீர்... மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்துக! - ஞானசாரர்

வில்பத்து காட்டினை அழித்து முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்த அரச நிறுவனங்கள் முன்வராவிடின் இவ்விடயத்தில் பொதுபல சேனா நேரடியாகத் தலையிடுமென பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் நிறைந்துள்ள வில்பத்து வனத்தை அழித்து முஸ்லிம் குடியேற்றங்களை அமைக்க அரசாங்கம் அனுமதியளித்தால் எதிர்கால சிங்கள பௌத்த தலைமுறையினர் கள்ளத்தோணிகளாக அடையாளப்படுத்தப் படுவார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கிருலப்பனையிலுள்ள போதி பௌத்த நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

இந்த நாடு யாருடையது ? இந்த நாட்டில் சட்டம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நாட்டின் தலைவர் இலங்கையில் பெரும்பான்மையினர் , சிறுபான்மையினர் என்ற பிரிவுகள் கிடையாதென தெரிவிக்கின்றார். ஆனால் நடைமுறைக் கதை வேறாக இருக்கிறது இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனிச் சட்டம், தனிச்சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய வனாந்திரமான வில்பத்துவை அழித்து புதிய குடியேற்றங்களை அமைப்பதில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆர்வங்காட்டி வருகின்றார். பௌத்த புராதன சின்னங்களால் நிரம்பியுள்ள வில்பத்துக் காட்டில் புதிய குடியேற்றங்களை அமைத்து அதற்கு “ஜாசிம்” , நகரம் என்று பெயர் சூட்டுகின்றனர். கட்டாரிலுள்ள பணக்காரரான ஜாசிம் என்பவரின் பெயரை வைப்பதற்கான காரணம் என்ன?

காட்டினை அழித்து குடியேற்றத்தினை அமைப்பதற்கு வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறப்பட்டதா? வில்பத்து வனப்பகுதியில் புராதன பௌத்த சின்னங்கள் அமைந்திருப்பதால் தொல் பொருட்கள் மற்றும் மரபுரிமை அமைச்சு , பௌத்தசாசன மற்றும் அலுவல்கள் அமைச்சிடம் அனுமதி பெறப்பட்டதா? குறிப்பாக குடியேற்றங்களை அமைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதி தொடர்பில் நிதியமைச்சிடமும் குடியேற்றம் தொடர்பாக வீடமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண அமைச்சு , மீள் குடியேற்ற அமைச்சிடம் அனுமதி பெறப்பட்டதா? வட மாகாண எல்லைப் பகுதிக்குட்பட்ட வில்பத்து வனாந்திரம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்?

நாட்டில் மத உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க ஏன் பௌத்த மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது அதனைப் பற்றிப் பேசுவதில்லை. இலங்கையில் தொடர்ந்து பௌத்த மத உரிமைகள் பாதிப்புக்குள்ளாகி வருவதுடன் , அரசாங்கம் இதனைக் கருத்தில் கொள்வதில்லை இது தொடர்பில் நாம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட முயற்சி செய்த போதும் அதற்கான வாய்ப்பு பொது பலசேனாவுக்கு வழங்கப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது இக் காட்டிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு பதுங்கு குழிகள் அமைக்கப்பயன்பட்டது. ஆனால் அரசாங்கம் யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வந்து விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்பு வில்பத்து தேசிய பூங்காவில் காடழிப்பு அதிகமாகியுள்ளது. வில்பத்து காடழிப்பு மற்றும் சட்ட விரோத குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிடின் பொதுபலசேனா அமைப்பு பௌத்த சின்னங்களை பாதுகாப்பதற்காக நேரடியாகத் தலையிடுமென எச்சரித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com