Wednesday, April 2, 2014

அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் பிரசாரங்கள் தோல்வி! பிள்ளை பிரேரணையை நடைமுறைப்படுத்தினால் அது மாபெரும் தவறு!

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையை இலங்கை முழுமையாக நிராகரித்துள்ளதுடன் மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை பிரேரணையை பிடிவாதமான முறையில் நடைமுறைப்படுத்த முடியாது எனவும், பல்வேறு எதிர்ப்புக்களை சந்தித்துள்ள குறித்த பிரேரணையை நவநீதம் பிள்ளை நடைமுறைப்படுத்து வாரானால் அது தவறான விடயமாகும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது ஐக்கிய நாடுகள் சபையின் பாரம்பரியங்களையும் விதிமுறைமைகளையும் மீறியுள்ளது. 41 நாடுகளுடன் இணைந்து பிரேரணையை கொண்டுவருவதாக அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்திருந்தன. ஆனால் பிரேரணைக்கு 23 நாடுகளே ஆதரவளித்தன. 12 நாடுகள் அதனை எதிர்த்ததுடன் 12 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன. அந்தவகையில் அமெரிக்காவும் பிரிட்டனும் பிரேரணை விடயத்தில் செய்த பிரசாரங்கள் தோல்வியடைந்துள்ளன.

வாக்கெடுப்பின் போது இந்தியா நடந்துகொண்ட விதமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதாவது குறித்த பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது மிகவும் முக்கியமான கூற்றாகும். இந்த முடிவை எடுத்தமை தொடர்பில் இந்தியாவை பாராட்டுகின்றோம்.

இந்நிலையில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையை இலங்கை நிராகரித்துள்ளது. இதனை அரசாங்கம் தெளிவான முறையில் தெரிவித்துவிட்டது. மேலும் இலங்கை குறித்த பிரேரணை ஐ.நா. விதிமுறைகளை மீறியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் 12 நாடுகள் பிரேரணையை எதிர்த்ததுடன் மேலும் 12 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. 23 ஆதரவளித்திருந்தாலும் 24 நாடுகள் அதனை ஆதரிக்கவில்லை.

இவ்வாறு பிரேரணைக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை பிரேரணையை பிடிவாதமான முறையில் நடைமுறைப்படுத்த முடியாது. அவ்வாறு பிடிவாதமான முறையில் அவர் பிரேரணையை நிறைவேற்ற முயன்றால் அது தவறானதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com