Monday, March 17, 2014

கோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை - வடபுலத்தான்

ஊர்கள் தோறும் கோவில்கள் பிரமாண்டமாக கட்டப்படுகின்றன. கோவில்க Hindutemple-1 ளைக் கட்டுவதற்காக புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் இருப்போர் தாராளமாக அள்ளியள்ளிக் கொடுக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்ளூரிலும் கோடி கோடியாகச் சேருது.

இப்பிடிக் காசு சேர்ந்தால் என்ன நடக்கும்?

ஏட்டிக்கு போட்டியாக ஒவ்வொரு கோவில்களும் வானுயர எழுகின்றன.

ஊரில் பலருடைய வீடுகள் இன்னும் கொட்டிலாகவம் குடிசையாகவும் இருக்கும்போது, பலருக்கு குடியிருப்பதற்கே காணி இல்லாதபோது, பல பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளே சீரில்லாமல் இருக்கும்போது, ஆஸ்பத்திரிகளில் கட்டில் இல்லாமல் விறாந்தைகளில் நோயாளிகள் படுத்திருக்கும்போது இப்படி கோவில்களுக்காக தமிழ்ப்பெருங்குடி மக்கள் தாராளமாகச் செலவழிக்கிறார்கள்.

தமிழ்ப்பெருங்குடி தன்னுடைய உழைப்பில் அதிகமாகச் செலவழிப்பது கோயில்களுக்காகத்தான். இதில் அவர்களுடைய வரலாற்றுப் பெருமையை எந்த விண்ணனும் மிஞ்ச முடியாது.

இதைவிடப் போரினால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உதவிகள் இல்லாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன.

இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் உடல் உறுப்புகளை இழந்து அந்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பல ஆயிரக்கணக்கான சிறார்கள் பெற்றோரை இழந்த நிலையில் உதவிக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் இடை விலகிக்கொண்டிருக்கின்றார்கள் பல மாணவர்கள். லட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறார்கள்.

இதைப்பற்றி மானமுள்ள தமிழர்கள் எழுதிக் கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். மனச்சாட்சியும் மனமும் இல்லாத தமிழர்கள் இதையெல்லாம் படித்துக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி தமிழ்சமூகம் துன்பத்தில் உழன்றுகொண்டு இருக்கும்போது இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கோவில்களுக்கு கொட்டிக்கொண்டே இருக்கின்றார்கள் நம் வரலாற்றுப் பெருமைமிகு தமிழர்கள்.

யுத்தத்திற்குப் பிறகு உருவாகியுள்ள புதிய சூழலிலும் தமிழர் அதிமாகச் செலவழித்திருப்பது கோவில்களுக்குத்தான்.

கோபுரங்களுக்காகவும், திருமண மண்டபங்களுக்காகவும், வர்ணப்பூச்சுகளுக்காகவும், தேர், தீர்த்தக்கேணி. வாகனம் என்றெல்லாம் இந்தச் செலவு நீண்டுகொண்டு போகிறது.

சமூகம் செழிப்பாக இருந்தால் இப்படி மேலதிகமாக செலவழிப்பதில் பிரச்சினை இல்லை.

ஆனால், இங்கோ மக்கள் பிச்சை எடுக்கிறார்கள். கோபுரங்களோ உயர்கின்றன.

இதற்காகத்தான் சொல்வார்கள், 'தாய் பிச்சை எடுக்கும்போது மகன் அன்னதானம் கொடுக்கிறார்' என்று.

சொந்தச் சோதரரை துன்பத்தில் உழல விட்டு விட்டு தெய்வத்தொண்டு செய்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.

உண்மையாக ஆன்மீக நாட்டம் யாருக்காவது இருந்தால் அவர்கள் துன்பத்திலும், துயரத்திலும் வாடும் சக மனிதரைக் கண்டு அவர்களுக்கு உதவ முன்வருவர். அது மனிதநேய உணர்வு மட்டுமல்ல தெய்வ பக்திக்கு நிகரானதுமாகும். அதுதான் மெய்யான ஆன்மீகமுமாகும்.

பசித்தவனுக்கு ஒருவேளை உணவு கொடுப்பதென்பது தெய்வத்துக்குச் செய்யும் தொண்டுக்குச் சமம் என்பது பெரியோர் வாக்கு.

கோவிலுக்கும், கோபுரங்களுக்குமாக செலவழிக்கும் இந்த கோடிக்கணக்கான காசை ஒவ்வொரு ஊர்களிலும் ஏதாவது தொழிற்துறைகளை உருவாக்குவதற்குச் செலவழிக்கலாம்.

அப்படி தொழில்த்துறைகளுக்குச் செலவழிக்கும் போது அதனால் பலருக்கும் தொழில்வாய்ப்புகள் கிட்டும். தொழிலும், உழைப்பும் பெருகும்போது ஊரும், உறவுகளும் செழிக்கும். ஊரும் உறவும் செழிக்கும்போது நாடும் வாழ்வும் வளம் பெறும்.

இப்படிப் சிந்திப்பது ஒன்றும் ஆன்மீகத்திற்கு எதிரானதோ பக்தி மார்க்கத்திற்கு மாறானதோ அல்ல. ஒரு நாத்திகவாதியின் கண்ணோட்டத்தில் இதைப்பார்க்கவும் இல்லை.

ஒரு மனிதநேயவாதியாக, மக்களோடு மக்களாக வாழ்பவராக, உண்மையான ஆன்மீகவாதியாக சிந்திக்கும் போது இப்படித்தான் சொல்லத்தோன்றுது.

தொழில்த்துறைகளை விருத்தி செய்வதற்காக நாம் செலவு செய்யும்போது அல்லது முதலீடு செய்யும்போது நமது மக்கள் கையேந்தும் நிலையிலிருந்து விடுபடுவர். அது மட்டுமல்ல அடிமை வாழ்விலிருந்தும் மக்கள் மீள்வர்.

அரசாங்கம் கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகச் செய்கிறது.

அதற்காக அது எல்லாவற்றையும் எல்லோருக்கும் தானம் போல வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாதே. ஆனால் எம்மில் பலர் அப்படித்தான் எண்ணுகிறார்கள். எனவேதான் எல்லாவற்றையும் அரசிடமே எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத போது அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள்.

இந்தப் பணம் படைத்தவர்கள், கோவில்களுக்கு செலவழிப்பதுபோல தங்கள் பிரதேசங்களில் தொழில் மையங்களுக்காகச் செலவழிக்கலாம். கலை வளர்ச்சி, சமூகப்பணி, அறிவு மையங்கள் போன்ற பிற துறைகளுக்கும், மக்கள் வாழ்வுக்கும் செலவழிக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.

சமூகத்தைப் பிச்சை எடுக்க விட்டுக்கொண்டு வானுயரும் கோபுரங்களை எழுப்புவதால் எந்தப் பயனும் கிட்டாது.

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இப்படி கட்டப்படும் பென்னாம்பெரிய கோவில்களைக் கும்பிடுவதற்குக் கூட இப்போது பல ஊர்களில் ஆட்களே இல்லை. அது மட்டுமில்லை. உற்சவ காலங்களில் சுவாமி தூக்குவதற்குப் பெடியளும் இல்லை. இதைப்பற்றி டி.பி.எஸ். ஜெயராஜ் தன்னுடைய இலங்கைப் பயணத்துக்கு (ஊருலாவுக்கு) ப் பிந்திய பேட்டியொன்றிலும் சொல்லியிருந்தார்.

“கோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை“

இதையெல்லாம் சொல்லி இந்தச் சனங்களையும் சமூகத்தையும் வழிப்படுத்துவது யார்?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com