Friday, March 21, 2014

தெற்கின் வாக்காளர் பெருமக்களே! - கலைமகன் பைரூஸ்

இனிப்புக்களாலான அரசியலுக்கு முற்றுப் புள்ளிவைத்து, மக்களின் பிரச்சினைகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள்…

தெற்கில் மண்ணெய் விளக்கு ஏற்றுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை 43,206
ஓலைக் குடிசைகள் 2,414
தோட்ட தொடர் வீடுகள் (லயின் காமராக்கள்) 6,521

தம்பட்டமடிக்கும் வேட்பாளர்களே இதோ மக்கள் பிரச்சினைகள்…

தெற்கில் இருப்பது வாக்குப் போரன்று! முதலமைச்சருக்கான போரே!

தென் மாகாண சபைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் மிக அண்மையில் இருக்கின்ற போதும், இன்னும் தெற்கிலுள்ளவர்களுக்கு தேர்தல் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றது. அதாவது தெற்கில் தேர்தல் சூடுபிடிக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.

அதி நவீன, புதிதாக வந்திறங்கியுள்ள வாகனங்களில் வேட்பாளர்கள் கிராமங்கள் தோறும் வந்திறங்கினாலும், தெற்கிலுள்ளவர்கள் அவர்களைப் பற்றியோ, தேர்தலைப் பற்றியோ கணக்கிலெடுப்பது மிகக் குறைவாகவே உள்ளது.

தென் மாகாணத்தில் 24 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். தென் மாகாணத்தின் சிறிய அரசைத் தெரிவு செய்யும் நாளாக மார்ச் 29 குறிக்கப்பட்டுள்ளது. இம்முறை என்றும் காணாத முறையில் கட்சிகளுக்கு இடையில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறாதிருக்கின்றது. மாகாண சபை முதலமைச்சராக யார் வருவாரோ என்றே சிலர் தலையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களிடையே யார்தான் முதலமைச்சராக வருவாரோ? என குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அது பனிப்போர் போலும் உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் சான் விஜயலால் மற்றும் முன்னாள் அமைச்சர் யூ.டீ.ஜீ. ஆரியத்திலக்க, கீதா குமாரசிங்க ஆகியோர் இம்முறை காலி மாவட்டத்திலிருந்து தேர்தலில் களம் குதித்துள்ளதன் காரணம் முதலமைச்சருக்கான கனவிலேயே…

அதேபோல, மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற முன்னாள் தென்மாகாண சபையின் கல்வியமைச்சர் சந்திமா ராசபுத்ர, இம்முறை முதலமைச்சர் பதவி தனக்கே கிடைக்க வேண்டும் எனவும், அதற்கான சகல தகுதிகளும் தன்னிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து முதலமைச்சருக்கான போரில் கலந்துகொள்ள களம் குதித்திருப்பவர் தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. ரோஹன பிரிய உபுல் என்பவர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இவ்வாறு முதலமைச்சருக்கான இழுபறி இருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

காலி மாவட்டத்திலிருந்து பந்துலால் பண்டாரிகொட, சஞ்சீவ கருணாத்திலக்க - மாத்தறையிலிருந்து ஜெஸ்டின் கலப்பத்தி, ஸ்ரீ விஜேவிக்கிரம - ஹம்பாந்தோட்டையிலிருந்து தென்னகோன் நிலமே, எம்.பீ. லால்சந்திர போன்றோர் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தேர்தல் போரில் ஈடுபட முன்வந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒரே ஒரு முஸ்லிம் அபேட்சகரே போட்டியிடுகின்றார். இம்திஸான் நவாஸ் எனும் வேட்பாளரே அவர். அவருக்கு ஆதரவு தேடி குக்கிராமங்கள் தோறும் ஐதேகவின் முக்கிய உறுப்பினர்கள் ஏறி இறங்குகின்றனர். அவரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக பிரபல நடிகை நதீஷா ஹேமமாலீ உட்பட ஏனைய வேட்பாளர்களும் அவரது கூட்டங்களுக்கு வந்துபோவதை அவதானிக்க முடிகின்றது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் ஐதேகவின் தேர்தல் கூட்டங்கள் விரல் விட்டெண்ணக் கூடிய அளவிலேயே இருக்கின்றன. என்றாலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐதேகவின் செயற்பாடு மும்முரமாக உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தனது தேர்தல் பிரச்சாரத்தை வழமை போலவே முன்னெடுத்துச் செல்கின்றது. அவர்கள் முன்னர் இருந்த தென் மாகாண சபையில் ஏற்பட்டதாக குறிப்பிடுகின்ற ஊழல் மோசடிகள், பாலியல் வல்லுறவு விடயங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய “தெற்கின் ஒலி” (தகுணே ஹண்ட) என்ற கையேட்டுப் பத்திரிகையொன்றையும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன், ஜேவிபியின் புதிய தலைவர் அநுர குமார திசாநாயக்க தேர்தல் வலயங்கள் தோறும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று (21) இரவு 8.00 மணிக்கு வெலிகம - கொலேதண்டவிலும் அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், இம்முறை மாகாண சபைத் தேர்தலில், மாகாணத்திலுள்ள மக்களின் பிரச்சினைகள் மேடைகளில் பேசப்படுவது மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. இம்முறை தேர்தல் மேடைகளில் பேசப்படும் கருப்பொருளாக இருப்பது தேசிய அரசியலே. அதுமட்டுமன்றி, சிங்களக் கவிதைகள், பாடல்கள், இசைக்கச்சேரிகள் போன்றவை ஏராளம்.. ஏராளம்.. எல்லாவற்றிலும் மேலாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பேருந்துகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளில் இசைக்கச்சேரிகளின் இருவெட்டுக்கள் என்ற பேரில், ஏதேனும் ஒரு கட்சிசார் ஆதரவு தேடுகின்ற இசைக் கச்சேரியே பயணிகள் உள்வாங்குமாறு செய்யப்படுகின்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கைகளுக்கு ஏற்ப, தென் மாகாணத்தில் உள்ள குடிசைகளின் தொகை 2414. தோட்டப்புற தொடர் வீடுகள் (லயின் அறைகள்) 6521. இவர்களுக்கு இன்ன உதவிகள்தான் செய்ய வேண்டும் எனச் சொல்லும் மேடைகள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. தற்போது வெலிகம கொலேதண்டவில் ஜேவிபி தலைவர் அநுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார். முற்று முழுதாக அரசாங்கத்தையும், ஆளும் கட்சி அமைச்சர்களையும் குற்றம் சாட்டுவதும், மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதுமே நடந்துகொண்டிருக்கிறது. (இலங்கை நேரம் இரவு 10.57)

தென் மாகாணத்தினுள்ளே உள்ள வீடுகளின் தொகை 6 இலட்சத்து 27 ஆயிரத்து 657 அளவில் இருக்கின்றது. அவற்றில் தென்னோலை, வைக்கோல் கூரைகளுடன் கூடிய வீடுகளாக 6343. வீட்டுக் கூரைக்கு தகரம் அடித்த வீடுகளின் தொகை 26102. அலுமினியம் தகடு போடப்பட்டள்ள வீடுகள் 2922 எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிடுகின்றது. http://www.gic.gov.lk/gic/index.php?option=com_org&Itemid=4&id=50&task=org&lang=ta

தெற்கில் மண்ணெய்யினால் ஒளியைப் பெறும் வீடுகளின் தொகை 43206. இவ்வாறான நிலையில் தென் மாகாணத்து மக்கள் தென் மாகாண சபைக்கு ஒருவரை நியமிப்பதானது மாகாண மட்டத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கேயாகும்.

என்றாலும், மாகாணத்தில் உள்ள மக்களின் பெரும் பிரச்சினைகள் மேடைகளில் பேசு பொருளாக இல்லாமல் அரசாங்கமும், அதனுடன் தொடர்புடைய அரசியலுமே பேசு பொருளாக உள்ளன. மேடைகளில் இனிப்புப் பண்டங்களும், பொருட்களின் அன்றைய இன்றைய விலைகளுமே பேசப்படுகின்றன.

இம்முறை தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அசம்பாவிதங்கள் விரல் விட்டெண்ணக் கூடிய அளவிலேயே இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தென் மாகாண சபையில் இம்முறை மிகவும் நீதியான தேர்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனக் கூறுவது தப்பன்று.

தென் மாகாணத்தில் சட்டம் மிகவும் உறுதிவாய்ந்ததாக நடைமுறைப்படுத்தப்படுவது காலி மாவட்டத்திலாகும். காலி மாவட்ட பிரபல அரசியல்வாதி ஒருவர் “இங்கு ஒரு சுவரொட்டி கூட ஒட்ட விடுகிறார்கள் இல்லையே.. எப்படி நாம் அரசியல் செய்வது?” எனக் குறிப்பிட்டார்.

எதுஎவ்வாறாயினும், தென் மாகாணத்தில் இம்முறை சட்டம் உறுதிபட இருப்பதனால்தான் மிகக் குறைந்த அளவில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன எனக் குறிப்பிடலாம். இது சந்தோஷிக்கத் தக்க நிகழ்வாகும்.

மேலும், மக்கள் தேர்தல் பற்றி கவனத்திற் கொள்ளாமலிருப்பது மறைக்க முடியாத உண்மையாக உள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை கிஞ்சித்தேனும் இல்லாமலிருப்பதும், அதனைப் பயன்படுத்தி ஜேவிபி வானளாவ முழங்குவதும்…. கைதட்டல்கள் ஜேவிபியை தென்மாகாணம் வெல்லச் செய்யும் என்ற ஒருசாராரின் கூற்றும் இங்கு சுட்டிக் காட்டத் தக்கது.

தோட்டப்புற கூட்டங்களுக்குக் கூட மக்கள் ஆதரவு குறைவாக உள்ளதை அவதானிக்கத் தக்கதாகவுள்ளது. சில வேட்பாளர்கள் அவ்வக் கிராமங்களுக்குச் சென்று அப்பியாசப் புத்தகங்கள் வழங்குவதும், அதனைப் பெற்றுக் கொண்டு சிறுவர்கள் ஓடிவிடுவதும்.. கூட்டத்தில் கலந்துகொள்வோரில் விரல் விட்டெண்ணக் கூடிய அளவிலேயே வாக்காளர்கள் கையொப்பமிடுவதும் நகைக்கத்தக்கதும் சிந்திக்கத் தக்கதுமாகும்.

எதுஎவ்வாறாயினும் தென் மாகாண மக்கள், தென் மாகாண சபைக்காக புத்திசாதுர்யம்மிக்க, கற்ற, நற்குண நல்லொழுக்கங்களுடன் கூடிய ஒரு பகுதியினரைத் தேர்ந்தெடுப்பர் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

இன்று தெற்கிற்குத் தேவையாக இருப்பது உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் மேடைப்பேச்சாளர்கள் அல்ல… சொல்லும் செயலும் ஒன்றாகச் செயற்படும் அரசியல்வாதிகளே.. மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களே… அவர்கள் நிச்சயமாக இயலாமையில் வாடும் மக்களின் துன்பத்தில் பங்குகொண்டு, மக்களின் பணத்தை வீண்விரயம் செய்யாமல் பாதுகாப்பவர்கள் என நம்புகின்றனர் பெறுமதிமிக்க வாக்குச் சொத்துக்கார்ரகளான வாக்காளர்கள்….

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com