Saturday, March 15, 2014

விமான தொழில்நுட்பத்தை அத்துப்படியாகத் தெரிந்த விமானிகளால் தான் விமானம் கடத்தப்பட்டள்ளது!

விமானத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு இன்னும் செயல் நிலையில் உள்ளது!

மாயமான விமானத்தின் தகவல் தொடர்பு வேண்டுமென்றே செயலிழக்க வைக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாக மலேசிய பிரதமர் நஜிம் ரஸாக் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், மாயமான விமானத்தை தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் பணிக்கு உதவி செய்யும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூர் நேரப்படி 8ஆம் தேதி காலை 8.11 மணிக்கு தகவல் தொடர்பை விமானம் இழந்தது என்று தெரிவித்த நஜிம், தகவல் தொடர்பு சாதனங்கள் வேண்டுமென்றே செயலிழக்க வைக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார். தென் சீன கடல் பகுதியில் முதலில் விமானத்தை தேடும் பணியை மேற்கொண்டோம் என்றும், பலன் இல்லாததால் தேடும் பணியை அந்தமான் கடல் பகுதி வரை விரிவுபடுத்தினோம் என்றும், விமானத்தை தேடும் பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்றும் நஜிம்ரஸாக் கூறினார்.

மேலும் விமானம் காணாமல் போன அன்றிலிருந்து உலக நாடுகள் பலவும் தங்களிடமுள்ள அதி உயர் தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் இருக்கட்டுமே என்று சூனியக்காரர்கள், ஜோசியர்களைக் கூட கேட்டுப் பார்த்துவிட்டார்கள். இதுவரை உறுதியான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தென் சீனக் கடல், வியட்நாம் கடல் என கடல் பகுதிகளில் முழுவதுமாக தேடிப் பார்த்துவிட்டார்கள்.

இப்போது இந்தியப் பெருங்கடலின் வட பகுதியில் இந்திய கப்பல்களும், தென் பகுதியில் அமெரிக்கக் கப்பல்களும் தேடிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு 1000 கிமீ தொலைவில் இந்த விமானம் வந்ததற்கான தடயங்கள் ஆஸ்திரேலிய ரேடாரில் பதிவாகி இருப்பதாகக் கூறப்பட்டது. கடத்தல்தான் இந்த நிலையில், விமானத்தைக் கண்டுபிடிக்கும் விசாரணைக் குழு அதிகாரிகள் இந்த விமானம் எங்கும் விழுந்து நொறுங்கவில்லை. கடத்தப்பட்டதுதான் உண்மை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த விசாரணக்குழுவின் அதிகாரி ஒருவர் இதனை செய்தியாளர்களிடமும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதை இனியும் யூகமாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. காரணம், கடத்தப்பட்டது என்பதுதான் உண்மை. விமான ஓட்டிகளில் ஒருவர் அல்லது விமானத்தில் பயணித்த வேறு யாரோ ஒரு தேர்ந்த விமானி இந்த கடத்தலை நிகழ்த்தியிருக்கலாம். இனி இந்தக் கோணத்தில் விசாரணையைத் தொடரப் போகிறோம், என்றார்.

விசாரணைக் குழு அதிகாரப்பூர்வமாக இந்த முடிவை இன்று அறிவிக்கவிருக்கிறதாம். எங்கே தரையிறங்கி இருக்கும்? இந்த விமானம் கடத்தப்பட்டது என்பதை எதை வைத்து இத்தனை உறுதியாகச் சொல்கிறார்கள்? அமெரிக்கா அளித்த தெளிவான தகவல்கள் அடிப்படையில்தான். அந்தத் தகவலின்படி, கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய விமானத்தின் டிரான்ஸ்பான்டரை யாரோ வேண்டுமென்றே துண்டித்திருக்கிறார்கள். ரிபோர்டிங் சிஸ்டம் மற்றும் ட்ரான்ஸ்பாண்டர் இரண்டையும் அதிகாலை 1:07 மற்றும் 1:21-க்கு தனித்தனியாகத் துண்டித்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது 12 நிமிடங்கள் வித்தியாசத்தில் இந்த இரு தகவல் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலையை ஒரு தொழில்முறை கடத்தல்காரனால் கூட செய்ய முடியாதாம். விமானி அல்லது விமானத் தொழில்நுட்பம் அத்துப்படியாகத் தெரிந்த ஒருவர்தான் இப்படிச் செய்ய முடியும். ஏற்கெனவே இருமுறை கடந்த காலங்களில் இப்படி நடந்திருப்பதாக சர்வதேச விமானிகள் அமைப்பின் உறுப்பினர் மைக் க்ளைன் தெரிவித்துள்ளார். இன்னும் சிக்னல் இருக்கு... தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் அத்தனைத் தொடர்புகளும் அறுந்து போய்விட்டாலும், விமானத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மட்டும் இன்னும் செயல் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விமானத்தின் இந்த சேட்டிலைட் கம்யூனிகேஷன் லிங்கிலிருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கிறது. இதனை 'ஹேன்ட்ஷேக்' என்று சொல்வார்கள். அதாவது செல்போன் ஆன்டெனா சிக்னல் தேடும்போது வருகிற சமிக்ஞை மாதிரி இது. அந்த 'ஹேன்ட் ஷேக்' இருப்பதை வைத்துதான் விமானம் எங்கோ பத்திரமாக தரை இறங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறது அமெரிக்கா.

கடத்தல்காரர்கள் விமானத்தை மலேசிய தீபகற்பத்து நேர் மேற்கில் திருப்பியுள்ளதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரைப் பகுதிகள், அந்தமான் தீவுகள் மற்றும் மடகாஸ்கர் வரையிலான ஏதோ ஒரு பகுதியில் விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com