Saturday, March 15, 2014

மேர்வின் மீண்டும் வாயைத் திறந்திருக்கிறார் எனவே புகைப்படக் கருவிகள் பறித்தெடுக்கப்படும் அபாயம் மறுபடியும் ஏற்படலாம் - ரவூப்

பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான் எனக்கும் நேரக்கூடு மென அமைச்சர் மேர்வின் சில்வா என்னை எச்சரித்திரு க்கிறார். பிரபாகரனுடைய பிரிவினைப் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால் இந்த நாடு எப்பொழுதோ பிளவுபட்டிருக்கும் என்பதை நான் மேர்வின் சில்வாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தேர்தல் தொகுதியில், கல்லொழுவ கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

பிரபாகரனுடைய போராட்டத்திற்கு ஒத்துழைக்காததனால் தான் வடக்கிலிருந்து முற்றாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதோடு, வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் களனி தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் நண்பர் மேர்வின் சில்வா சில காலம் வாயை மூடிக்கொண்டிருந்தார். இப்பொழுது மீண்டும் வாயைத் திறந்திருக்கிறார். ஆகையால், குறிப்பாக ஊடகவியலாளர்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களது புகைப்படக் கருவிகள் பறித்தெடுக்கப்படும் அபாயம் மறுபடியும் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் மீறப்படும் பொழுது அது பற்றி வெளிப்படையாக கதைப்பதில் என்ன தவறு இருக்கிறது? நாட்டின் மீதான நல்லெண்ணத்துடனேயே அவ்வாறு கூறுகிறோம். அவ்வாறன்றி மனித உரிமை ஆணையாளர் அம்மையாரை மணமுடிக்க விருப்பம் தெரிவித்து, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய இழிவான செயலில் நாங்கள் ஈடுபடுவதில்லை. அதுபோக, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பாங் கீ மூனை பதவி விலகுமாறு கோரி இங்குள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னாள் இறக்கும் வரை உண்ணாவிரதம் எனக் கூறி அமைச்சர் ஒருவர் மல்லாந்து படுத்துறங்கியதாலும் பயனில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்யும் கட்சியல்ல. சோற்றுப் பார்சல்களை கொடுத்து பஸ்களில் கொண்டு வந்து சேர்க்கும் கட்சியும் இதுவல்ல. களனித் தொகுதியில் இருந்து தான் சோற்றுப் பார்சல்கள் கொடுத்து கொழும்புக்கு ஆட்கள் அதிகம் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றனர். சோற்றுப் பார்சல்களை வழங்கி பஸ்களில் ஆட்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் கூறவேண்டியவற்றை ஒழிவு மறைவின்றி வெளிப்படையாகவே கூறி வருகிறோம். நாங்கள் சூழ்ச்சி செய்கிறோம் என்பது அதன் அர்த்தமல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com