Saturday, March 22, 2014

தமிழனா முஸ்லிமா எனப் பாராமல் எங்கள் கதவு எவ்வேளையும் திறக்கும்! - றிஷாத் பதியுத்தீன்

கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கும் பேரீனவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் தீர்ப்பானது சாட்டையாக அமைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கிராண்ட்பாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவவாறு தெரிவித்தார். இப் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்பாறுக் மற்றும் வேட்பாடளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

இன்று தலைநகர முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியானது மிகவும் தொய்வு நிலையிலே உள்ளது. வளர்ச்சி குறைந்த ஏனைய பிரதேச மக்கள் கல்வியில் முன்னேறும்போது ஏன் தலைநகர முஸ்லிம்கள் கல்வியில் வளர்ச்சி காணாமல் இருக்கின்றார்கள்.

நாம் கல்விச் செயற்பாட்டில் வீழ்சியில் இருப்பதானது எமது இருப்புக்கு ஆபத்தாகும். இதனை மாற்றியமைக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. இதனால் தான் எமது கட்சியானது கல்வி வளர்சிக்கு உதவுதல் எனும் திட்டத்தை உருவாக்கி இன்று பரவலாக கல்விச் செயற்பாட்டுக்கு உதவி செய்து வருகின்றோம்.

இன்று வறிய மக்களுக்கு எம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஏனைய கட்சிகளைப்போன்று தேர்தலுக்கு மாத்திரம் வந்து பொருட்களைக் கொடுத்தும் இனவாதம் பேசியும் வாக்குகளை அபகரித்துச் செல்பவர்கள் நாங்கள் அல்ல. என்றும் மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கமாகும்.

கல்வியலாளர்கள் எங்களிடம் வந்து பாடசாலைகளுக்கு உதவி கேட்ட போது நாங்கள் எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு உதவினோம். முஸ்லிமா தமிழா சிங்களமா என்று பாராமல் யார் எந்த நேரத்தில் எங்கள் கதவைத் தட்டினாலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதேபோன்று தலைநகரில் எமது வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்ட போது அதற்காக நாங்கள் குரல் கொடுத்தோம். அன்று தெஹிவளை பள்ளிவாயல் விடயத்தில் நான் தலையிட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த போது நீங்கள் ஏன் கொழும்பு விடயத்தில் தலையிடுகின்றீர்கள் மன்னாரை கவனித்துக் கொள்ளுங்கள் என்று என்னை அதட்டினார்கள்.

இவர்களின் அதட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரும் போது பதவியை பாதுகாப்பதற்காக ஒதிங்கிவிட முடியாது. அந்த துரோகத்தை நாம் ஒருபோதும் முஸ்லிம் உம்மத்திற்கு செய்யமாட்டோம். கொழும்பு முஸ்லிம்களுக்காகவும் தேசிய ரீதியில் அனைத்து முஸ்லிம்களுக்கும் குரல் கொடுக்க எமது கட்சிக்கு உமது ஆணையை தாருங்கள்.

நீங்கள் எமக்கு வழங்கும் ஆணைதான் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படும் பேரீனவாதிகளுக்கு சாட்டையாக அமைவதுடன் நாங்கள் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

வழமை போன்று நீங்கள் உமது வாக்குகளை தெரிந்தவர் அறிந்தவர் என்று இட்டு வாக்குகளை வீண்விரயம் செய்து விடாதீர்கள். கொள்கைகளை பாருங்கள். யார் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என்பதையும் சேவை செய்பவர்கள் என்பதையும் சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய முக்கிய தருணம் இது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(இப்னு ஜமால்தீன்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com