Monday, March 31, 2014

பிரஜைகள் குழு காப்பாளர் சண் அவுட்: உறுதிப்படுத்திய ஆனந்தன் எம்.பி

சிவசக்தி ஆனந்தனின் நகர்வுகளுக்கு துணையாக இருந்த வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு காப்பாளர் சண் மாஸ்டர் தேர்தல் காலங்களில் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

சண் மாஸ்டரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்த போதும் சிவசக்தி ஆனந்தனின் கைப்பிள்ளையாக சுற்றி வந்தார்.

குறித்த காலப்பகுதியில் இவர்களுக்கிடையில் முறுகல் நிலை முற்றியுள்ளது. நிதி கொடுங்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையே இவர்களது முரண்பாட்டுக்கு காரணம் என அறியமுடிகிறது.

அன்றிலிருந்து இருவருக்குமிடையே வாய் மோதல் ஏற்பட்டுள்ளது. சண்ணுடன் நின்றவர்கள் பலரை தன்வசப்படுத்தியுள்ள சிவசக்தி ஆனந்தன் சண்ணை தாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த 27 ஆம் திகதி பண்டாரிக்குளம் ஜுனியர் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட சிவசக்தி ஆனந்தன் சண் மாஸ்டரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் தரப்பால் அச்சிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால நிர்வாகத்தின் கீழான சீரற்ற கல்வி நடவடிக்கைகள், மனக்கசப்பான கற்பித்தல் செயல்பாடுகள், பண்பற்ற நடத்தைகள், அணுகுமுறைகள் தொடர்பில் இக்குழந்தைகளின் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் பல்வேறு மன உளைச்சல்களுக்கு உள்ளாகி பலவித முறைப்பாடுகள், குற்றம் குறைகளை தெரிவித்திருந்த படியால் இப்பாலர் பாடசாலை மீது எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி, மக்கள் மத்தியில் அவநம்பிக்கைகளே உருவாகியிருந்தன.

ஒரு கட்டத்தில் இப்பாலர் பாடசாலை இயங்காது இழுத்து மூடப்படும் சூழல்நிலை உருவாகியிருந்ததையும் நாம் அறிந்திருந்தோம். ஆனால் புதிய நிர்வாகத்தின் கீழ் தற்போது இப் பாடசாலை மிகவும் சிறப்பாக இயங்குகிறது எனத் தெரிவித்ததாக அவர்களது செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் இக்கல்வி நிலையத்தை சண் மாஸ்டரே நடாத்தி வந்துள்ளார் என்பதும் அவரையே சிவசக்தி ஆனந்தன் விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com