Tuesday, March 11, 2014

பயணிகளுடன் மாயமான விமானத்தின் மர்மம் நீடிப்பு !!

239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்காததால், விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

239 பயணிகளுடன் மாயம்:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய விமானம் ஒன்று கடந்த 7-ந்தேதி நள்ளிரவில் புறப்பட்டது. அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. அது தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே கடலில் நொறுங்கி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகி இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

அந்தமான் கடற்பகுதி:

மாயமான விமானத்தை தேடும் பணியில், சீனா, அமெரிக்கா, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 34 விமானங்களும் 40 கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. விமானத்தை தேடும் பணிகள் கடந்த 2 நாட்களாக இரவும் பகலுமாக நடந்து வருகிறது. ஆனாலும் இதுவரையும் எந்த பலனும் கிடைக்கவில்லை. மலேசியாவின் மேற்கு கடலோரப்பகுதி, தெற்கு வியட்நாம் கடற்பகுதிகளில் நடந்து வந்த இந்த தேடும் பணிகள், அந்தமான் கடற்பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வருகிற நாட்களில் இது மேலும் விரிவுபடுத்தப்படும் என மலேசியா அறிவித்துள்ளது.

திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம்:

இதற்கிடையே அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக டிக்கெட் எடுத்து இருந்த 5 பயணிகள், அந்த விமானத்தில் செல்லவில்லை என்பதும், கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. மேலும் 2 பயணிகள் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆசியாவை சேர்ந்தவர்களைப் போல இருந்ததாக மலேசிய உள்துறை மந்திரி அகமது சாகித் ஹமிதி கூறியுள்ளார். அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை பற்றிய விவரங்களை சேகரித்த போது, மேலும் சிலர் போலி பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச போலீஸ் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

யாருடைய பாஸ்போர்ட்:

திருடப்பட்ட 2 பாஸ்போர்ட்டுகளும் இத்தாலி, ஆஸ்திரியாவை சேர்ந்தவர்களு டையது என்று தெரியவந்துள்ளது. இதில் பயணம் செய்த ஒருவர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மலேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலித் அபுபக்கர் தெரிவித்தார். அவர் மலேசியாவை சேர்ந்தவர் அல்ல என்பதை தெரிவித்த காலித், மர்ம ஆசாமி எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளியிட மறுத்து விட்டார். மேலும் திருட்டு பாஸ்போர்ட்டில் சென்ற 2 பேரும் மலேசியாவுக்குள் முறையாக நுழையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடத்த முயற்சி?

இந்தநிலையில், ரேடார் திரையில் இருந்து விமானம் மறைவதற்கு முன், புறப்பட்ட இடத்துக்கே அது திரும்பியதற்கான சுவடுகள் ரேடாரில் பதிவாகி இருப்பதாவும் தெரியவந்துள்ளது. இந்த காரணங்களால் விமானத்தை யாராவது கடத்த முயற்சி செய்திருக்கலாம் என்ற செய்தியை மறுக்க முடியாது என்று மலேசிய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு விமானம் விபத்துக்குள்ளானதில் நாசவேலை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், விமானம் காணாமல் போனதில் தீவிரவாதிகளின் சதி உள்ளதா? என கண்டறிய, மலேசிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் படலங்கள்:

இந்தநிலையில் தெற்கு சீன கடல் பரப்பில் எண்ணெய் படலங்கள் படர்ந்துள்ளதை மலேசியா கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், அது தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த டோங்காங் என்ற இலகுரக மரப்படகில் உபயோகிப்பது என தெரியவந்தது. முன்னதாக தெற்கு வியட்நாம் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட, எண்ணெய் படலங்கள் படர்ந்திருந்த பகுதியில் அமெரிக்க கடற்படை விமானங்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தின. ஆனாலும் அந்த பகுதியில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. விமானம் அதிக உயரத்தில் (சுமார் 36 ஆயிரம் அடி) பறந்த போது நொறுங்கி விழுந்துள்ளதால்தான் விமான பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று மலேசிய அதிகாரிகள் கூறினர். எனினும் விமானத்தில் வெடிகுண்டு வெடித்தல் அல்லது எந்திர கோளாறால் வெடித்தல் போன்ற ஏதாவது விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

விமானத்தின் கதவு:

இதற்கிடையே வியட்நாம் பகுதி கடலில் செவ்வக வடிவிலான ஒரு பொருள் மிதந்து வந்ததை வியட்நாம் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். இது மாயமான விமானத்தின் ஒரு கதவாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இதை மலேசியா அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது குறித்து மலேசிய விமான போக்குவரத்து தலைவர் அசாருதீன் அப்துல் ரகுமான் கூறுகையில், 'விமானத்தின் உடைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுவதை வியட்நாம் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை' என்றார்.

பயணியின் செல்போன் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவல்:

இந்நிலையில், காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் செல்போன் இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்தனர். அந்த பயணிக்கு டயல் செய்யும் காட்சி பீஜிங் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது. எனவே, செல்போன் சிக்னல்களை வைத்து விமானத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இதற்காக செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பயணிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மர்மம் நீடிப்பு:

மேலும் அவர் கூறும்போது, 'மாயமான விமானம் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது முன் எப்போதும் இல்லாத வகையில் மர்மமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமான கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார். மலேசிய விமானம் மாயமாகி 2 நாட்கள் கடந்து விட்ட நிலையில், விமானம் தொடர்பான எந்தவித தகவலும் கிடைக்காதது மீட்புக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதில் பயணம் செய்த உறவினர்களிடமும் கவலை அதிகரித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com