Tuesday, March 11, 2014

ஈபிடிபி கமலேந்திரன் வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் : ஈபிடிபியில் இருந்தும் நீக்கப்படுவார்?

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சுசில் பிரேமஜயந்தவினால் கடந்த 6ஆம் திகதி எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கமலேந்திரனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக தேர்தல் திணைக்களத்துடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படுமென அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்ஷசன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் மற்றும் றெக்சியனின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கமலேந்திரனை ஈபிடிபியின் இருந்து நீக்குவதற்கான முயற்சியில் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com