Saturday, February 15, 2014

அமெரிக்கா விரும்பும் ஜனாதிபதியை இலங்கையில் நியமிப்பதே ஜெனீவா தீர்மானத்தின் நோக்கம்: கோத்தாபய!

அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் தனது பலத்தினை விஸ்தரிப்பதற்காகவும், தனது இராணுவத் தளத்தை இலங்கையில் ஸ்தாபிப்பதற்காகவும், நாட்டிற்குள் சுயாதீனமாக பிரவேசிப்பதற்காகவும், அதனூடாக தாம் நினைத்த அரசாங்கத்தையும், ஜனாதிபதியினையும் நியமிப்பதற்காகவுமே ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கெதிரான தீர்மானங்களை கொண்டுவர முயற்சிப்பதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட குழுத் தலைவரான உதய கம்பன்பில நேற்று வியாழக்கிழமை கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்தியபோது கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இலங்கை அரசுக்கெதிராக ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா தீர்மானங்கள் சிலவற்றை கொண்டுவரவுள்ளது. 

முப்பது வருடம் நடைபெற்ற யுத்தத்தில் இறுதிக்கட்டத்தினை மட்டும் சுட்டிக்காட்டும் வகையில், இலங்கைக்கெதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதடன் இது தொடர்பில் கருத்து வெளியிடும் அரசியல் பிரமுகர்கள் சிலர் இத்தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல அரசாங்கத்துக்கு எதிரானதே எனத் தெரிவிக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

மேலும் யுத்தத்தில் இலங்கையை காப்பாற்றுவதற்காகப் போராடிய இராணுவ வீரர்களை குற்றஞ்சாட்டுவது நாட்டுக்கெதிரான குற்றச்சாட்டு அல்லவா? அமெரிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு சில காரணங்கள் உண்டு அதாவது அமெரிக்கா தனது பலத்தினை இந்து சமுத்திரத்தில் விஸ்தரிப்பதற்காகவும், இலங்கையில் சுயாதீனமாக உட்பிரவேசித்து முகாம்களை அமைப்பதற்காகவும், அதனூடாக தமக்கு ஆதரவான ஜனாதிபதியுடன் கூடிய அரசாங்கத்தை நியமித்துக் கொள்வதற்காகவுமே இலங்கைக்கெதிரான தீர்மானத்தை கொண்டுவர முயற்சிக்கின்றது என்பதுடன் இத் தீர்மானத்தினூடாக ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் வீழ்த்துவதே அமெரிக்காவின் நோக்கமாகும் எனக்குறிப்பிட்டார்.

இதனைவிட அண்மையில் அமெரிக்காவின் செனட் சபையில் இலங்கைக்கெதிரான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது இத் தீர்மானத்தின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை இலங்கை மனதில் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இத் தீர்மானம் அமெரிக்காவின் நோக்கத்தை தெளிவாக பிரதிபலிக்கின்றது ஆகவே, நடைபெறவுள்ள தேர்தலில் அரசாங்கத்திற்கு மக்கள் தமது பூரண ஆதரவினை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com