Friday, January 24, 2014

நாங்கள் சவூதியில் நிர்க்கதியாக… தூதரக அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை..!

சவூதிச் சிறையில் இலங்கைக் கைதிகள் அங்கலா ய்ப்பு!

சவுதிக்கு தொழில்வாய்ப்புக்காகச் சென்றுள்ள பலர், தாம் முகவர் நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தங்களுடனான தொழில்வாய்ப்பு கிடைக்காத்தனால், அவர்கள் பணி புரிந்த இடங்களிலிருந்து வெளியேறி பிற இடங்களுக்கு தொழில் நாடிச் செல்கின்றனர். இவ்வாறு திருட்டுத் தனமாக தொழில் தேடிச் செல்லும்போது சவுதி அரசாங் கத்தின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறைக்கைதிகளாக நாளுக்கு நாள் இலங்கைத் தொழிலாளர்கள் மாறிவருவதுடன் சொல்லொணாத் துயரங்களுக்கும் ஆளாகி வருகின்றமை பல ஆண்டு காலமாக நிகழ்ந்து வருகின்ற உண்மை.

அண்மையில் ஸவுதி சிறையில் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையர்களில் பலர் நன்கு கற்றுத் தேர்ந்துள்ளவர்கள் என்பதும், இவர்களும் முகவர் நிலையங்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்பதும் விசனிக்கத் தக்கது.

இவ்விடயம் தொடர்பில் ஸவுதி சிறையில் உள்ள இலங்கைக் கைதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கும்போது, “நாங்கள் இயலாமையின் காரணமாகவும், இல்லா மையின் காரணமாகவுமே முகவர் நிலையங்களுக்கு அதிக பணம் செலுத்தி, கடனாளிகளாக இங்கு வந்திருக்கின்றோம். எம்மில் பலரும் இந்நிலையிலேயே இருக்கின்றோம். இங்கு வந்த்தன் பின்னர் உடன்படிக்கையில் சொல்லப்பட்ட தொழில் எங்களுக்கு வழங்கப்படவில்லை. கடுமையான – கொடுமையான தொழில்கள் எங்களுக்கு வழங்கப்படுகின்றன. எங்களால் அவற்றைச் செய்ய முடிவதில்லை. எனவே, நாங்கள் குறித்த இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு பாய்ந்துவிடுகின்றோம். ஒழிந்து ஒழிந்து தொழில் செய்கின்றோம். எந்நேரமும் நெருப்பாகவே இருக்கின்றது.

இவ்வாறு இருக்கும்போது, இங்கே கூடியிருக்கின்ற இலங்கையர்களாகிய நாங்களும் பொலிஸாரிடம் சிக்கி, இச்சிறையில் தற்போது பல மாதங்களாக, ஆண்டுகளாக நிற்கின்றோம்… இல்லை வாடுகின்றோம். நாட்டுக்குச் செல்ல வழி தெரியவில்லை… எங்களிட் விமானச்சீட்டு வாங்குவதற்கும் பணம் இல்லை… இலங்கை தூதுவரலாயம் எங்களைக் கண்டுகொள்வதில்லை. இலங்கை அரசாங்கமும் எங்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை.

நாங்கள் நிர்க்கதியாக நிற்கின்றோம்… நாங்கள் குறித்த இடங்களிலிருந்து பாய்ந்து சென்றது குற்றம்தான்… என்றாலும் எங்களை நாட்டுக்கு எடுப்பதற்கு அரசாங்கத்திற்கும், அமைச்சர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். இலங்கை தூதுவராலயத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நாளுக்கு நாள் 3, 5, 10 என இலங்கையர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். நேபாளம், வங்களாதேசம், பாகிஸ்தானியர்களும் இவ்வாறு பிடிக்கப்படுகின்றார்கள். என்றாலும், அவர்களின் அரசாங்கம் உடன் அழுத்தம் கொடுத்து அவர்களை விடுதலை செய்யச்செய்து நாட்டுக்கு வருவதற்கான விமானப் பயணச் சீட்டும் வழங்கி, அவர்களுக்கு உதவுகின்றது.

நாங்கள் மீண்டும் சொல்கின்றோம். நாங்கள் கவலையோடு இருக்கின்றோம். எங்களிடம் எங்களது சில உடைமைகள் மட்டுமே இருக்கின்றன. பயணச் சீட்டு பெறக்கூடிய அளவு பணம் எங்களிடம் இல்லை. இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் நாங்கள் தாய்நாட்டுக்கு வந்து கால்பதிக்க எங்களுக்கு உதவ வேண்டும். அமைச்சர்களும், சமூக ஆர்வலர்களும் எங்களது இந்தக் கோரிக்கையை கருத்திற்கொண்டு ஆவன செய்ய வேண்டும்.. எனக் கேட்டுக் கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com