Sunday, December 29, 2013

வடமராட்சியில் கடத்தப்பட்டதாக நாடகமாடிய இளைஞன் முல்லைத்தீவில் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு இன்பருட்டியில் வானில் வந்த இனந்தெரியாத குழுவொன்றினால் தான் கடத்தப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களை வழங்கிவிட்டு, மறைந்திருந்த இளைஞன் ஒருவரை முல்லைத்தீவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.


வடமராட்சி கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் சூரியகுமாரனின், மகனான கலையமுதன் (வயது 23) என்கிற இளைஞனே கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அந்த முறைப்பாட்டில், ‘4 பேர் கொண்ட குழுவொன்று தன்னை கடத்தி செல்வதாக’ கலையமுதன் குறுஞ்செய்தியில் தந்தையாருக்கு தகவல் அனுப்பிய விடயமும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று(28.12.2013)முல்லைத்தீவில் தன்னுடைய நண்பரொருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வர்த்தக நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட கடன் தொல்லையினைச் சமாளிப்பதற்காக கடத்தல் நாடகத்தை ஆடியதாகவும், தன்னுடைய தந்தையாரைக் கொண்டு பொலிஸில் முறைப்பாடு செய்து அவுஸ்திரேலியாவுக்கான விசா அனுமதிக்கான பத்திரங்களை தயார் செய்ய முயன்றதாகவும் கலையமுதன் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.


இதனிடையே, பொலிஸாரையும், ஊடகங்களையும் தவறாக வழிநடத்தியமை மற்றும் பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் கலையமுதன் மற்றும் தந்தையார் சூரியகுமாரன் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com