Friday, November 1, 2013

ஹக்கீம் - சிராஸ் மோதல் உக்கிரம்!! சிராஸ் தொடர்பில் அதிரடி அறிக்கையை சற்று நேரத்திற்கு முன் வெளியிட்டார் ஹக்கீம்!

தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிரதேச வாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் சிராஸ் மீராசாஹிப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனவும் இதன் மூலம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுள் முரண்பாடுகள், தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த அவர் முனைந் துள்ளார். எனவே முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்து வத்தின் தற்துணிவு அதிகாரத்தின் பேரில் கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் என்பவர் இன்று தொடக்கம் பதவி வகிக்க முடியாது என ரவூப் ஹக்கீம் சற்று நேரத்திற்கு முன்னர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுழற்சிமுறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து மேயராக செயற்பட முடியாது எனவும் இதனையும் மீறி அவர் மேயராக செயற்பட முற்பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும ரவூப் ஹக்கீம் சற்று நேரத்திற்கு முன்னர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில தெரிவித்துள்ளார்.

சுழற்சிமுறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் பணித்ததுடன் அதற்கு ஒக்டோபர் 31 வரை காலக்கெடு விதித்திருந்ததாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கல்முனை மாநகர சபையின் எமது கட்சி சார்பான ஏனைய பத்து உறுப்பினர்களும் அவருக்கு எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும் அதனை மீறி அவருடன் ஒத்துழைக்கும் உறுப்பினர்கள் மீது எமது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றும் கண்டிப்பான உத்தரவை விடுக்கின் றேன் என ரவூப் ஹக்கீம் தனது விசேட அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மேயர் பதவியை இரண்டு வருடங்களின் பின்னர் ராஜினாமா செய்வது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துடன் நான் எந்த உடன்படிக்கையையும் செய்து கொள்ளவில்லை என கல்முனை மாநகர மேயர் சிராஸ் புதன்கிழமை இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் அவர் கூட்டிய விசேட மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கூட்டத்தில் கல்முனை மாநகர மேயர் சிராஸ் தெரிவிக்கையில் கடந்த மாநகர சபைத் தேர்தலில் நான் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றதனால் பெரும் இழுபறிக்கு மத்தியில் சாய்ந்தமருது மக்களின் அழுத்தத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்னை மேயராக நியமித்தது.

இது தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்காக தலைமைத்துவம் என்னை அழைத்தது. அங்கு தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர், செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோர் இருந்தனர். அப்போது தலைவர் ஹக்கீம் என்னிடம் சொன்னார் நீங்கள் முதல் இரண்டு வருடங்கள் மேயராக இருங்கள், அடுத்த இரண்டு வருடங்கள் நிசாம் காரியப்பர் மேயராக இருப்பார். இப்போதுள்ள பிரச்சினைக்கு இதுதான் கட்சியின் தீர்வு இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நானும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு அந்த முடிவை ஏற்றுக் கொண்டேன். இதுதான் நடந்தது.

இது தவிர கல்முனை மேயர் பதவியை இரண்டு வருடங்களின் பின்னர் ராஜினாமா செய்வது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துடன் நான் எந்த உடன்படிக்கையையிலும் கைச்சாத்திடவில்லை. அதனால் தான் அன்று சாய்ந்தமருது மக்களாகிய நீங்கள் எனக்கு போராடிப் பெற்றுத் தந்த இந்த அமானிதத்தை உங்கள் அனுமதியில்லாமல் ராஜினாமா செய்ய நான் தயாரில்லை என்ற நிலைப்பாட்டுடன் உங்கள் முன்னிலையில் வந்துள்ளேன்.

மேயர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்யாதவரை என்னை யாரும் பதவி விலக்க முடியாது. ஆனால் கட்சி என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கலாம். அதனை எதிர்த்து நான் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணையாளர் என்னிடம் சுட்டிக்காட்டினார், இந்த சட்டத்தை தெரிந்து கொள்ளும் உரிமை எனக்கு இல்லையா?

மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தலைமைத்துவம் என்னைப் பணித்துள்ளது. நான் இந்த நிமிடம் வரை தலைமைத்துவத்திற்கு விசுவாசமான வனாகவே இருக்கிறேன். ஆனால் கட்சியும் தலைமைத்துவமும் மக்களுக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அதனால் மக்கள் தந்த இந்த ஆணையை கட்சியும் தலைமைத்துவமும் மதித்து செயற்பட வேண்டியுள்ளது. மக்கள் இல்லா விட்டால் கட்சியும் இல்லை. தலைமைத்துவமும் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகையினால் மக்கள் என்னை பதவி விலகுமாறு கூறினால் நான் இந்த நிமிடமே ராஜினாமா செய்யத் தயார் என்று உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன். மக்களே நீங்கள் தீர்மானியுங்கள். நீங்கள் போராடிப் பெற்றுத் தந்த இந்த அமானிதத்தை நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஏகமனதாக முடிவு செய்யுங்கள் அதற்கு நான் என்றும் கட்டுப்பட்டு நடப்பேன் என மேயர் சிராஸ் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com