Sunday, October 6, 2013

விக்கியின் பதவிப் பிரமாணத்தின் பின்னர் வடக்கின் ஆளுநர் வெளியே....!

வட மாகாண சபையின் புதிய முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் நாளை (06) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களாக இருந்த நேர் மறை விவாதத்திற்கும், நேற்று முன்தினம் (04) ஜனாதிபதிக்கும் ஆர். சம்பந்தனுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கும் பின்னர், இரு தரப்பினரிடையேயும் பல ஒருமைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விக்னேஷ்வரன், ஜனாதிபதியிடம் பதவிப் பிரமாணம் செய்வதற்காக இந்திய அரசே ஆவன செய்தது என சில அரசியல் செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் ஒரு உடன்படிக்கையாக இருப்பது வடக்கிலிருந்து ஆளுநரை பதவி நீக்கம் செய்வதாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

வடக்கின் ஆளுநரான ஜீ.ஏ. சந்திரசிரி தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போருக்கு கட்டளைத் தளபதியாக இருந்ததனால் அவர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யாமல் இருக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக நின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து இந்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்திருந்தது. அத்தோடு, நேற்று முன்தினம் (04) இந்தியத் தலைவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இதுதொடர்பில் தெளிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்திய ஊடகங்கள் அறிவிப்பதற்கேற்ப, நாளை மறுதினம் (07) இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மான் குர்ஷித் வட மாகாண சபையின் ஆளுநரான சந்திரசிரியைச் சந்தித்து ஆளுநர் பதிவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளவுள்ளார். மேலும், அந்தப் பதவியை சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவுள்ளார்.

மேலும், எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (07) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டமைச்சர் ஆளுநருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை, தெற்கின் சில பத்திரிகைகள், விக்னேஷ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்வதற்காக வேண்டி முழந்தாளிட்டு நிற்பதாகக் குறிப்பிட்டிருப்பினும், உண்மையில் நடந்திருப்பது என்னவென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உடன்படிக்கைகளுக்கு ஜனாதிபதி தலைசாய்த்திருக்கிறார் என அரசியல் ஆய்வாளர்களிடையே கருத்துத் தெரிவிக்கின்றனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com