Saturday, October 5, 2013

மன்னாருக்கு அமைச்சுப் பதவி வேண்டும்: கூட்டமைப்புக்கு மகஜர் அனுப்பி வைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப்பதவி யாழ். மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அதில் தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விதலை இயக்கம் டெலோ சார்பாக வழங்கப்பட்ட ஆசனம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும் குறித்த ஆசனம் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக போட்டியிட்டு மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி பா.டெனிஸ்வரனின் ஆதரவாளர்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே குறித்த ஆசனத்தை மன்னார் மாவட்டத்தில் டெலோ சார்பாக போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளை பெற்ற சட்டத்தரணி பா.டெனிஸ்வரனுக்கு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு அந்த மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த அமைச்சுப் பதவியை சட்டத்தரணி டெனிஸ்வரனுக்கு வழங்க வேண்டும் என கோரி தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் மன்னார் எருக்கலம் பிட்டி முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளி வாசல் ஆகியவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com