Saturday, September 28, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தேய் பிறைக் காலம் தென்படத் தொடங்குகிறது....! -எஸ். ஹமீத்

தீ நிகர்த்த தேர்தல் மேடைகளில் அனல் பறக்கும் ஆவேசப் பேச்சுக்கள் அரங்கேறி முடிந்து விட்டன. வாய்க்கு வந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கலக்க விடப்பட்டு, வாக்காளப் பெருமக்களின் நெஞ்சங்களுக்குள் நிரப்பப்பட்டு விட்டன. தேர்தல் விஞ்ஞாபனங்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை அறிக்கைகள்,பதாகை வசனங்கள் என்று அள்ளி வீசிய கொள்கை விளக்கங்கள் மூலம் மக்களின் மூளையைச் சலவை செய்தாகிவிட்டது. இவற்றின் பெறுபேறாக,சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலிலே வரலாற்று முக்கியத்துவமிக்க பெரும் வெற்றியையும் பெற்றாகிவிட்டது.

இனி அடுத்தது என்ன...?

வட மாகாண ஆட்சி பீடத்தில் அமரப் போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தக் கேள்விக்குரிய சரியான-தெளிவான பதில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

"முதலில் பழத்தைப் பறி எப்படித் தின்னலாம் என்பதை அப்புறம் யோசிக்கலாம்" என்பது போல, இப்போது வெற்றிப் பழத்தைப் பறித்து வைத்திருக்கும் கூட்டமைப்பு, அதை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்று இனித்தான் யோசிக்கப் போகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றல்ல, பல்வேறு உள்ளகச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கப் போகிறார்கள். புதிதாகத் தோன்றப் போகும் உள்வீட்டுப் பிரச்சினை களுக்கு சுமுக முடிவு கண்டு அவர்கள் தெளிவுக்கு வந்த பின்னர்தான் மக்களுக்கான தமது ஆட்சியைக் கொண்டு செல்வது எவ்விதம் என்பது பற்றி அவர்களினால் சிந்திக்கத் தொடங்க முடியும்.

எதிர்கொள்ளப் போகும் அக முரண்பாடுகளை இணக்கமான முறையில் கூட்டமைப் பினால் தீர்த்துக் கொள்ள முடியுமா என்பது ஐயம்தான்...!

பல்வேறு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் இணைந்து பெற்றிருக்கும் வட மாகாண சபையின் ஆட்சிக் காலம் முழுதும் அக் கட்சிகள் ஒரே கொள்கையுடன் செயலாற்றுவதில் பாரிய சவால் களைச் சந்திக்கப் போகின்றன என்பது மட்டும் பேருண்மை.

முதலில், வட மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களினால் அந்தப் பதவியில் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதே பாரிய வினாவாக எழுந்து நிற்கிறது. முதலமைச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனின் பதவியின் தொடர்ச்சியான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவது, அவர் கொழும்பு வாசியாக இருப்பதும்தான்.

கொழும்பிலிருந்து அடிக்கடி வந்து போய் அல்லது கொழும்பிலிருந்து கொண்டே அவர் வட மாகாண சபையை ஆட்சி செய்வதென்பது அத்துணை எளிதான விடயமல்ல் அவ்வாறு அவர் செய்ய முற்படுவாராயின் தமிழ்த் தலைவர்களினது மட்டுமல்ல, வட மாகாண மக்களினதும் அதிருப்திக்குள்ளாகி விடுவார். அதற்காக, அவர் தனதும் தான் சார்ந்த குடும்பத்தினரதும் தலைநகர சுகபோகங்களை விட்டு விட்டு ஒரேயடியாக யாழ்ப்பாணத்தில் மக்களோடு மக்களாகத் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு வாழத் தொடங்கி விடுவார் என்றும் கற்பனை பண்ணிவிட முடியாது.

சுபாவத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் மென்மையானவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிடம் காணப்படும் 'கடும் போக்கு' விக்னேஸ்வரனிடம் கிடையாது. விடயங்களையும் பிரச்சினைகளையும் அவர் உணர்ச்சி ரீதியாகவன்றி, அறிவு ரீதியாகவே சிந்திப்பவர். நடந்து முடிந்த தேர்தலுக்காக அவர் 'புலித் தோலை' அரைகுறையாகப் போர்த்திக் கொண்டிருந்தாரே தவிர, அவருக்கும் 'புலி'யின் குணங்களுக்கும் சம்பந்தமே கிடையாது. இத்தகு அவரது இயல்பை 'போராட்ட குணம்' கொண்ட தமிழ்த் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றும் மக்களும் பொருந்திக் கொள்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.

ஒரு வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்தவிற்கு உறவினர். இதனை ஜனாதிபதியே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இந்த உறவைத் தாண்டி, ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக விக்னேஸ்வரன் அவர்களினால் செயற்பட முடியுமென்று தோன்றவில்லை. ஒரு பிரபாகரன் போல், ஒரு அமிர்தலிங்கம் போல், ஒரு சம்பந்தன் போல் இன்னும் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சிறிதரன், ஆனந்தசங்கரி போல் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வன்மையாக விமர்சனம் செய்து தன் 'அரசியல் இருப்பை' விக்னேஸ்வரன் தக்க வைத்துக் கொள்ளக் கூடியவராகவும் தெரியவில்லை.

எடுத்ததெற்கெல்லாம் 'இந்தியா...தமிழ் நாடு' என்றும் புலம் பெயர்ந்த புலிப் பினாமிகள் என்றும் (இந்தியாவினதும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினதும் இரட்டை விளையாட்டைத் தெரிந்திருந்தும்) ஆலாய்ப் பறந்து, தமிழ் மக்களை இத்தனை காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பினரைப் போலல்லாது, விக்னேஸ்வரன் தனித்துவமாகச் சிந்திக்கக் கூடியவர். அவர் இந்தியாவினது அல்லது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினது அல்லது புலம்பெயர் புலிப் பினாமிகளினது அழுத்தங்கள் தன்மீது திணிபடுவதை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார். ஆனால், இன்னும் இந்திய, தமிழ்நாட்டு, புலத்துப் புலிகளின் மாயைகளை நம்பியிருக்கும் கூட்டமைப்பினர், விக்னேஸ்வரன் அவர்களின் 'தனித்துவத்தை'ப் பொறுத்துக் கொள்வார்களா என்பதும் யோசிக்க வேண்டிய விடயம்தான்.

இவ்வாறான விடயங்களினால் விக்னேஸ்வரன் அவர்களுக்கெதிரான தமிழ் கடும் போக்குவாத சக்திகளின் செயற்பாடுகள் வட மாகாணத்தில் விரைவிலேயே அரங்கேறும் என்பதே பெரும்பாலோனோரின் கணிப்பாக இருக்கிறது.

விக்னேஸ்வரன் அவர்களை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தால், அப்போதும் கூட்டமைப்புக்குள் இந்த வட மாகாண சபை பெரும் பிளவுகளையும் வெடிப்பு களையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகமாகவே தென்படுகின்றன. வட மாகாண சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் அமைச்சுப் பதவிகளைப் பெறப் போகும் அந்த சொற்ப உறுப்பினர்களை ஏனையோர் மனதார ஏற்றுக் கொள்வார்களா என்பதும் இயல்பாகவே எழக் கூடிய பிரச்சினைதான். வவுனியா மாவட்டத்திற்கென்று ஒரு அமைச்சுப் பதவி வேண்டும் அது வைத்தியக் கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் இப்போதே எழத் தொடங்கி விட்டன. இது போன்று தமது கட்சியைச் சார்ந்தவருக்கு-தொகுதியைச் சார்ந்தவருக்கு-ஊரைச் சார்ந்தவருக்கு-உறவைச் சார்ந்தவருக்கென்று இன்னும் எத்தனை எத்தனை கோரிக்கைகள் எழப் போகின்றனவோ தெரியவில்லை.

தமது அதிகார வரம்பிற்குள்ளே நியமனங்கள்-இடமாற்றங்கள்-கொந்தராத்துகள்-கொடுப்பனவுகள்-அபிவிருத்திகள்-ஏனைய உதவிகள் என்று எத்தனை பேரைத்தான் திருப்திப்படுத்த முடியும்...? எத்தனை கிராமங்களைத்தான் சந்தோஷப்படுத்த முடியும்...?ஆக, மாகாண சபையின் தொடக்கப் புள்ளியிலிருந்தே, வட மாகாண சபையின் ஆட்சியாளர்கள் மக்களின் அதிருப்திக்கு ஆளாக ஆரம்பித்து விடுவார்கள்.

13ம் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே, காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திற் கேயன்றி, மாகாண சபைக்கல்ல என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. காணி அதிகாரமே இல்லையென்றான பிறகு, காவல்துறை அதிகாரங்களைப் பெறுவதென்பது வெறும் கற்பனையாகத்தான் இருக்கப் போகிறது.

இராணுவத்தை முற்று முழுதாக வட மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதோ அல்லது முகாம்களுக்குள் முடக்குவதோ நடந்து முடிந்த தேர்தலின் போதான கூட்டமைப்பினரின் வீராவேசப் பிரசாரத்துக்குப் பயன்பட்டிருக்கலாமே தவிர, ஒரு போதும் நடைமுறைச் சாத்தியமாகப் போவதில்லை.

ஆக, தம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றங்களை மட்டுமே வட மாகாண சபை மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கப் போகிறதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தாங்க முடியாத துக்க அனுபவங்களையும் வலிகளையும் சுமந்த படியே, தவிர்க்க முடியாத தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி நிற்கும் வட மாகாண மக்கள், அவை பூர்த்தியடையாத பட்சத்தில் தம்மால் பெரும் கனவுடனும் பிரயத்தனத்துடனும் தேர்வு செய்யப்பட்டவர்களின் மீது தமது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கோபத்தையும் கொந்தளிப்புகளையும் கொட்டித் தீர்க்காமல் விட மாட்டார்கள்.

எனவே, எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப் பினருக்கு வட மாகாண சபை என்பது நிச்சயம் ஒரு தேய்பிறைக் காலமாகத்தான் இருக்கப் போகிறது.

1 comments :

S. Hameeth September 28, 2013 at 12:08 PM  

வட மாகாண சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 30 உறுப்பினர்கள் என்பதற்குப் பதிலாக 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு வருந்துகிறேன்; வாசகர்கள் மன்னிப்பார்களாக.

எஸ்.ஹமீத்.
(கட்டுரையாளர்)

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com