Monday, August 19, 2013

வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது- சுசில்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று(18.08.2013) வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் கால தலைமை அலுவலகத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் எவரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டால் அது குறித்து எனக்கு அறிவித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் அமைதியான தேர்தலை நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களிடம் கேட்டிருக்கிறோம். அதன் மூலம் தான் சிறந்த வெற்றியைப் பெறமுடியும். எமது நாட்டில் உள்ள எட்டு மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையாளரை கொழும்பில் சந்தித்துத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. உட்பட்ட கட்சிகள் பாரதூரமான தேர்தல் வன்முறை எதுவும் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட வில்லை. தேர்தல் வன்முறைகள் நடை பெற்றால் நடவடிக்கை எடுப்பதற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண அரசினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலையும் விட வடக்கு மாகாணசபைத் தேர்தலே முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கு வடக்கில் கடந்த 25 வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் தற்சமயம் நடைபெறவுள்ளமையே ஆகும்.

வலி. வடக்கில் 50 வீதமான மக்களின் வாழ்விடங்கள் விடு விக்கப்பட்டுவிட்டன. மிகுதியானவை படிப்படியாக திட்டமிடப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேற்கொள்வது போன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் மக்கள் நலன்கருதி பெற்றுச் செயற்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com