Tuesday, August 13, 2013

இந்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்கள் அதிகம்.... இன்னும் வேண்டாம்...!

தற்போது இந்நாட்டில் பௌத்த, இந்து கோவில்களும் பள்ளிவாசல்களும் அதிகமாக உள்ளன என்பது பிரத மருக்குத் தெரியாததனால், இனியும் இந்நாட்டில் எந்த வொரு பள்ளிவாசலும், பௌத்த, இந்து கோயில்களும், மதம்சார் ஏனைய நிறுவனங்களும் நிறுவுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என ஜனாதிபதியிடம் தான் கேட்டுக்கொள்வதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் கூறியுள்ளார்.

கிராண்ட்பாஸில் நடைபெற்ற நிகழ்வுக்கு அடிப்படையான 'தௌஹீத் ஜமாஅத்' எனும் அடிப்படைவாத முஸ்லிம்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்ததும் அவர்களை இந்நாட்டிலிருந்து அடித்துவிரட்டுமாறு பாதுகாப்புப் பிரிவினரைக் கேட்டுக் கொள்வதாக, குருணாகலையில் நடைபெற்ற பொதுபல சேனாவின் குருணாகலை மாவட்டப் பொதுக் கூட்டத்தின் போது தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

'நாங்கள் எப்போதும் முஸ்லிம் அடிப்படைவாதிகளைப் பற்றியே கதைக்கிறோம். நாங்கள் இப்போது உரையாற்றுகின்ற நேரத்திலும் கூட முஸ்லிம் அடிப்படைவாதிகள் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வது மிகவும் கடினமான காரியம். தலிபான்களின் கருத்துக்களுடன் ஒட்டிய, அல்கைதா, ஜிஹாத் கருத்துக்களுடன் ஒட்டிய, அடிப்படைவாத அரசியல் குழுக்களுடன் ஒட்டிய தொடர்புள்ள அநேக அடிப்படைவாதிகள் இந்நாட்டுக்குள் புகுந்துள்ளார்கள்.

எங்களது சம்பிரதாயபூர்வ அப்பாவி முஸ்லிம் சகோதர சகோதரிகளை இந்த அடிப்படைவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவ்வாறான விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றோம். இனவாத ஒருமைப்பாட்டின் கீழிருந்துகொண்டு பெரும்பான்மையினரைக் கத்தியால் குத்துகின்ற அடிப்படைவாதிகள் பற்றியே நாங்கள் பேசுகின்றோம். இவ்வாறு அவர்களின் முகமூடிகளை நாங்கள் கிழிப்பதால் முஸ்லிம்கள் சந்தோசப்பட வேண்டும்.

கிராண்பாஸ் பள்ளிவாசல் தொடர்பில் பாரிய பிரச்சினை மேலெழுந்தது. நாங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் கூறுகின்றோம். கிராண்ட்பாஸில் இரண்டு பள்ளிவாசல்கள் இருந்தன. கோயிலின் (பன்சாலை) தேரரும், சுற்றியிருந்த மக்களும் பள்ளிவாசல்கள் இரண்டு அவசியமில்லை என்றனர். சத்தியமாக இந்நாட்டுக்கு பள்ளிவாசல்கள் அதிகம் தேவையில்லை. தற்போதைய நிலையில் இந்நாட்டுக்கு கோயில்களும் அதிகம். இந்துக் கோயில்களும் அதிகம். அந்த அமைச்சருக்கு இதுபற்றித் தெரியாததனால் நாங்கள் ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். இதன்பின்னர் இந்நாட்டில் எந்தவொரு மதவழிபாட்டுத் தலமும் கட்டுதற்கு அனுமதியளிக்கக் கூடாது. இப்போது இருப்பவை போதும்... போதும்... போதும்...!' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றும் போது,

'வடமேல் மாகாணத்தில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மூடப்படுகின்றன. அதனால் இந்நாட்டுக்கு புதிதாக மதவழிபாட்டுத் தலங்கள் எதுவும் தேவையில்லை. முஸ்லிம்களில் சிலர் ஊருக்கு வருகின்றார்கள். கொஞ்சம் நாட்களில் அவர்கள் 40 பேர் ஆகின்றார்கள். பள்ளிவாசல் ஒன்று கட்டுகிறார்கள். 40 பேருக்கு ஒரு பள்ளிவாசலாக இந்நாட்டில் கட்டத் தொடங்கினால் இந்நாடு என்னாகும்? அவர்கள் பள்ளிவாசல்கள் கட்டி வழிபாட்டில் ஈடுபடுவதல்ல இங்கு பிரச்சினை. அவர்கள் இந்நாட்டில் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. முஸ்லிம்கள் எந்த வியாபாரத்தில் முன்னணி வகித்தாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஒன்று சொல்கிறேன். அந்த அறாபிகளின் சட்டத்தை இலங்கைக்குக் கொண்டுவரக் கூடாது. இதனையே நாங்கள் விரும்புகிறோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்கமுவையில் முஸ்லிம் யுவதியொருத்தி சிங்கள வாலிபன் ஒருவனுடன் காதல் கொண்டாள். அதற்கு இலங்கைச் சட்டம் செயற்படுத்தப்படவில்லை. அந்த யுவதியை பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று சுற்றிவளைத்து மட்டைத் தலைகளால் அடித்து உதைத்தார்கள். எங்கே அந்த நிமல்கா பிரனாந்து போன்றவர்களின் மனித உரிமைப் பேச்சுக்கள்...? நீங்கள் இதற்காகப் பேசினீர்களா? பெண்களின் வதை பற்றி பேசும் கொழும்பு 7 இல் உள்ள 'பெரிய பொம்பிளைங்க' அந்த அப்பாவி யுவதி பற்றிப் பேசினார்களா? இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்தன' என்றும் அவர் தெரிவித்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com