Tuesday, August 6, 2013

முதுமையால் சிறுபிள்ளை போல் உளறுகிறாராம் சம்பந்தன்-யாழ்.படைகளின் கட்டளைத்தளபதி!

வடக்கில் படைகள் குறைக்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா இராணுவம் கூறுவது பொய் என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினால் கணக்குத் தெரியாமல் உளறுகிறார் என்று யாழ்.படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

“தேர்தலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா இராணுவத்தை அரசியலுக்குள் இழுத்து சுயலாபம் தேட முனைகிறது என தெரிவித்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளது போல் யாழ்ப்பாணத்தில் ஒன்றரை இலட்சம் படையினர் நிலை கொண்டுள்ளது என்பது முதுமையில் விபரம் அறியாது சிறு பிள்ளைபோல் உளறுகின்றார் என்பதை புலப்படுகிறது எனக்குறிப்பிட்டார்.

இது மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் தற்போது சுமார் 13,150 சிறிலங்கா இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என்பதே உண்மை என்பதுடன் 2008 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை அண்டிய பகுதியில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட யாழ்.குடாநாட்டில் ஆகக்கூடுதலாக 43 ஆயிரம் இராணுவத்தினர் தான் நிலை கொண்டிருந்தனர் என்பதுடன் யுத்தம் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு முதல் படையினரன் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது 13,150 படையினரே உள்ளனர் எனக்குறிப்பிட்டார்.

சிறிலங்கா இராணுவத்தின் மொத்த ஆட்பலமே, சுமார் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் தான் இந்தநிலையில், யாழ்.குடாநாட்டில் மட்டும் ஒன்றரை இலட்சம் படையினர் நிலை கொண்டுள்ளதாக சம்பந்தன் கூறுவது, முதுமையால் கணக்கு தெரியாமல் தடுமாறுவதையே காட்டுகிறது என்பதுடன் தற்போதும் யாழ்ப்பாணத்தல் உள்ள இராணுவத்தை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என குறிப்பிட்ட ஹத்துருசிங்க வட மாகாணத்தை விட வடமத்திய மாகாணத்திலேயே அதிகமான படையினர் நிலை கொண்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது நடைபெற உள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்ககூட்டமைப்பு தமது தேர்தல் பரப்புரைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்தி சேறுபூச முனைகின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாகவே, இலங்கை இராணுவமும் புலனாய்வுப் பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன.”என்று குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com