பெனசிர் புட்டோ படுகொலை வழக்கில் முஷாரப் கைதாகும் நிலை. இடைக்கால ஜாமின் இரத்து!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பின் இடைக்கால ஜாமின் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இந்த வழக்கில் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2008ல்,தேர்தல் பிரசாரத்தின் போது, தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அப்போது ஜனாதிபதியாக இருந்த பெர்வேஸ் முஷாரப், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை, என குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில், கைதாவதை தவிர்க்க, முஷாரப் இடைக்கால ஜாமின் பெற்றிருந்தார்.
அடுத்த மாதம், 11ம்தேதி, பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெறுகிறது. லண்டன் மற்றும் துபாயில் நான்காண்டுகளாக தங்கியிருந்த முஷாரப், தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பினார். ஆனால், அவரது நான்கு வேட்பு மனுக்களையும், தேர்தல் தீர்பாயம் தள்ளுபடி செய்து விட்டது.
முஷாரப் அதிபராக இருந்த போது, 2007ல், அவசர சட்டத்தின் மூலம், 60 நீதிபதிகளை சிறையில் அடைத்தார். அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவரது ஜாமினை நீட்டிக்க இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து அவர், கடந்த வாரம் கைது செய்யப்பட்டு, அவருடைய பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பெனசிர் புட்டோ கொலை வழக்கு, லாகூர் உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில், முஷாரப்பின் இடைக்கால ஜாமினை, இந்த நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், முஷாரப், இவ்வழக்கில் கைதாகும் நிலை உள்ளதாக, சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment