Thursday, April 25, 2013

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற மாநாடுகள் மூலம் இலங்கைக்கு பாரிய அனுகூலம் - அமைச்சர் அமுனுகம

சர்வதேச ரீதியாக இடம்பெற்ற இரண்டு மாநாடுகள் மூலம் இலங்கைக்கு பல்வேறு அனுகூலங்கள் கிடைத்துள்ளது என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். உகண்டாவில் இடம்பெற்ற முதலீட்டு மாநாட்டிலும், வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தொடரிலும் இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் நிதியமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது மகாஓய வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவது தொடர்பிலும் தேயிலை வர்த்தகம் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதன்போது இலங்கைக்கு அபிவிருத்தி கடனுதவிகளை வழங்க ஈரான் நிதியமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் முன்னெடுக்கவுள்ள பாரிய நீர் விநியோக செயற்த்திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இந்திய நிதியமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதன்போது இந்திய அரசாங்கத்தால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனவும் அமைச்சர் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நிதியமைச்சர்களுடனான சந்திப்பின் போது பல்வேறு நன்மைகள் ஏற்படக்கூடிய விடயங்கள் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com