Thursday, April 25, 2013

பாடசாலை சென்ற 7 வயது மாணவன் கடத்திக் கொலை! சந்தேக நபர் கைது!

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகரடுபன பிரதேசத்தில் பாடசாலை சென்ற 7 வயது மாணவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப் பட்டுள்ளான். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள மாணவனின் சடலம் பாடசாலை சீருடையுடன் கேகாலை நிம்மல்கொட வத்த பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றின் சமையலறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கேகாலை வலகம்பா பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் 7 வயதுடைய வஹம்புரகே புஷ்பகுமார என்ற சிறுவனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந் துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

இந்த மாணவனை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வலகம்பா பாடசாலையில் 2ம் தரத்தில் கல்வி பயிலும் புஷ்பகுமார என்ற 7 வயது மாணவன் வழமை போன்று நேற்று முன்தினம் காலை பாடசாலை வானில் பாடசாலைக்குச் சென்றுள்ளார். இந்த மாணவன் மாலைவரை வீடு திரும்பாததையடுத்து பீதியடைந்த குறித்த மாணவனின் பெற்றோர் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்த பொலிஸார் நில்மல் கொடவத்தை பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றின் சமையலறையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இதன் போது சிறுவன் பாடசாலை சீருடையுடனே கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் 24 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என ஆரம்பகட்டமாக தெரியவந்துள்ளது.

காலையில் பாடசாலை சென்ற மாணவன் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது முச்சக்கர வண்டியில் சந்தேக நபர் சிறுவனை கடத்திச் சென்றுள்ளார். குறித்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ள சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, இம்சைப்படுத்திய நிலையிலே கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com