சி.ஐ.ஏ. பெயரைச் சொல்லி, பாகிஸ்தான் ராணுவம் ரகசியமாக ‘போட்டு தள்ளியதா’? கனேடியப் பத்திரிகை சந்தேகம்
“பாகிஸ்தானில், அமெரிக்க உளவு விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை கொல்கிறார்கள் என அனைவரும் நம்பிக் கொண்டிருக்க, இவற்றில் சில தாக்குதல்களை சி.ஐ.ஏ. செய்யவில்லை; சி.ஐ.ஏ. செய்வதுபோல ‘வேறு யாரோ’ செய்திருக்கிறார்கள்” என்று சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது, கனேடிய பத்திரிகை.
பாகிஸ்தானில் கடைசியாக நடைபெற்ற இரு உளவு விமான தாக்குதல்களில், 9 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர், அல்-காய்தாவின் சீனியர் தளபதிகள். இந்த தகவல் வெளியானபோது, “Business as usual by the CIA” என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தனர்.
ஆனால் தமக்கு கிடைத்த தகவல்களின்படி, கடைசியாக நடைபெற்ற இந்த இரு தாக்குதல்களும் சி.ஐ.ஏ.வினால் செய்யப்படவில்லை என்கிறது, கனடாவின் நேஷனல் போஸ்ட் பத்திரிகை. வட அமெரிக்காவின் நம்பகத்தன்மை அதிகமுள்ள பத்திரிகைகளில் இதுவும் ஒன்று.
அமெரிக்காவின் உளவு விமான தாக்குதல் ஆபரேஷனுடன் தொடர்புடைய மூன்று அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டு, உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில், பாகிஸ்தானில் கடைசியாக நடைபெற்ற இரு தாக்குதல்களும் சி.ஐ.ஏ.வினால் செய்யப்படவில்லை என்கிறது, நேஷனல் போஸ்ட்.
இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், கடந்த மாத (பிப்ரவரி) ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் உளவு விமான தாக்குதல் நடந்தது என்ற தகவலை மீடியாவுக்கு கொடுத்ததே, பாகிஸ்தான் உளவுத்துறைதான்.
நியூயார்க் டைம்ஸ் உட்பட அனைத்து மீடியாக்களும், பாக். உளவுத்துறையின் ‘பெயர் தெரிவிக்காத’ அதிகாரியை ஆதாரம் காட்டியே, உளவு விமான தாக்குதல் பற்றிய செய்தியை வெளியிட்டன.
அதையடுத்து, (வழமைபோல) பாகிஸ்தான் அரசும், இஸ்லாமபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தமது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டது. “எமது நாட்டுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறீர்கள்” என்ற இந்த வழமையான குற்றச்சாட்டுக்கு, அமெரிக்க தூதரகமும் தமது வழமையான பதிலையே கொடுத்தது. “அப்படியா? வாஷிங்டனுக்கு தகவல் அனுப்பி விசாரிக்கிறோம்”
இஸ்லாமபாத்தில் பாக். அரசு சி.ஐ.ஏ. தாக்குதல் நடத்தியது என்று புகார் கொடுக்க, அமெரிக்கா லாங்க்லியில் (சி.ஐ.ஏ. தலைமைச் செயலகம்) யார் இந்த தாக்குதல்களை செய்தது என்பது குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
பாகிஸ்தான் ராணுவம்தான் இந்த இரு தாக்குதல்களையும் செய்துவிட்டு, சி.ஐ.ஏ.வின் கணக்கில் வரவு வைத்திருக்கிறது என்பதே, சி.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிந்து கொண்ட உண்மை என்கிறது, நேஷனல் போஸ்ட்.
அதே நேரத்தில், இது பற்றி சி.ஐ.ஏ. வாய்திறக்கப் போவதில்லை. அதற்கு காரணங்கள் இரண்டு.
1) திருடனுக்கு தேள் கொட்டிய நிலை. இதற்குமுன் பாகிஸ்தானில் சி.ஐ.ஏ. உளவு விமானத் தாக்குதல்களை செய்தபோதெல்லாம், “நாம் செய்யவில்லை” என்றே சி.ஐ.ஏ. சொல்லி வந்தது. இப்போது, நிஜமாகவே செய்யாத போதிலும், அதே பல்லவியையே படிக்க வேண்டும். யாரும் நம்ப போவதில்லை.
2) “யார் குத்தினாலும், அரிசி ஆனால் சரி” என்று விட்டுவிடலாம். காரணம், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், அல்-காய்தாவின் இரு முக்கிய தளபதிகளும் அடக்கம்
இந்த விவகாரத்தில் உண்மை அறிவது மிகவும் கஷ்டம். காரணம், இந்த உளவு விமான தாக்குதல்கள் நடைபெறும் இடங்களில் உள்ள செட்டப் அப்படி!
அல்-காய்தா, தலிபான் (பாக்.), மற்றும் இதர தீவிரவாத அமைப்பினர்மீது உளவு விமானத் தாக்குதல்கள் நடத்தப்படும் இடங்கள், பாகிஸ்தானின் சில பழங்குடி இன மக்கள் வசிக்கும் மலைப்பகுதி கிராமங்கள். இந்த கிராமங்கள், தீவிரவாத அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ளன. தவிர, பாக். ராணுவ உளவுப் பிரிவினரும் மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ளார்கள்.
வெளிநாட்டு மீடியாக்காரர்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. லோக்கலில் உள்ள சில செய்தியாளர்கள் நிலைமையும் சுதந்திரமானது அல்ல. தலிபான்களின் அழுத்தம் ஒருபக்கம், பாகிஸ்தான் ராணுவ உளவுப்பிரிவின் (எம்.ஐ.) கண்காணிப்பு மற்றொரு பக்கம். இதனால், இவர்களிடம் இருந்தும் எந்த உண்மையும் வெளிவராது.
சரி. பாகிஸ்தான் ராணுவம் ஏன், சி.ஐ.ஏ. என்ற போர்வையில் தாக்குதல் நடத்த வேண்டும்?
தலிபான், அல்லது அல்-காய்தா தீவிரவாத தளபதிகளை பாக். ராணுவம் தாக்கினால், பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு எழும். இது பாகிஸ்தான் அரசுக்கு பாதகம். எனவே சி.ஐ.ஏ. தாக்குதல் என்று கூறிவிட்டு, தாமே தாக்குதல் நடத்திவிட்டு, சி.ஐ.ஏ.வுக்கு கண்டனமும் தெரிவித்து விடுகிறார்கள் என்கிறார்கள், சி.ஐ.ஏ. அதிகாரிகள்.
தமக்கு இதில் ஆட்சேபணை ஏதுமில்லை என்றும் சொல்கிறார்கள், அவர்கள்.
0 comments :
Post a Comment