Saturday, March 16, 2013

மாணவர்களின் தனிப்பட்ட முரண்பாடுகளே பிரச்சினைக்கு காரணம். குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றது பாடசாலை நிர்வாகம்.

கடந்த 12.03 அன்று வவுனியா திருச்சபை தமிழ் மகா வித்தியாலய மாணவர் குழுக்களிக்கிடையில் இடம்பெற்ற மோதல் ஒன்று தொடர்பில் செய்திகளை நாம் வெளியிட்டிருந்தோம். அம்மோதலின் பின்னணி மற்றும் சமூகத்தில் நிலவுகின்ற பாடசாலை நிர்வாகம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தோம்.

அக்குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை பாடசாலை நிர்வாகம் மறுக்கின்றது. அவர்கள் இது தொடர்பில் எமக்கு அனுப்பி வைத்துள்ள தங்கள் தரப்பு நியாத்தினை ஊடக தர்மத்தின் பிரகாரம் அப்படியே வாசகர்களுக்கு விட்டு விடுகின்றோம்.


பதிப்பாசிரியர்
இலங்கைநெற்

தங்கள் இணையத்தளத்தில் 12.03.2013 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக பாடசாலை நிர்வாகம் ஆகிய நாங்கள் பொறுப்புக் கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

வவுனியாவில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவரும் எதிர்பார்க்காத விதத்தில் வளர்ச்சியடைந்து வரும் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எங்கள் பாடசாலை பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் ஏனைய பாடசாலைகளிலிருந்து நிராகரிக்கப்பட்ட மாணவர்களை எந்தவித பாரபட்சமும் இன்றி அன்புடனும் பண்புடனும் ஒழுக்கத்துடனும் எமது பாடசாலை மாணவர்களை பாடசாலை நிர்வாகம் முன்மாதிரியாக வழிநடத்திக்கொண்டு வருகின்றது.

பாடசாலையில் அன்றைய தினம் நடைபெற்ற சம்பவம் இரு மாணவர்களுக்கு இடையில் பாடசாலைக்கு வெளியில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முரண்பாட்டின் தொடர்ச்சியே தவிர பாடசாலையில் மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் தொடர் விளைவு அல்ல.

எமது பாடசாலையில் 2013 வகுப்பு மாணவர்கள் தீவிரமாக பரீட்சைக்கு தயாராகிக் கொண்டு வருகின்ற வேளையில் 2014ம் ஆண்டு மாணவர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

எமது பாடசாலை கல்வியில் குறிப்பிட்ட இலக்கை 2013ம் ஆண்டில் அடைவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகையில் இந் நோக்கத்தை அடைவதை தடைசெய்வதனை நோக்கமாகக் கொண்டு வெளியிலுள்ள சில குழுக்கள் மாணவர்களைத் தூண்டியதன் விளைவே இம் முரண்பாடு ஆகும்.

பாடசாலையில் அன்று நடைபெற்ற முரண்பாட்டை பாடசாலை முகாமைத்துவம் மிகச்சிறப்பாக கையாண்டது. குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துரையாடல் மூலம் முரண்பாட்டிற்கு தீர்வு காணப்பட்டதுடன் பெற்றோர்கள் மற்றும் முகாமைத்துவத்தின் தீர்மானத்திற்கு அமைவாக முரண்பாட்டின் தீவிரத்தை குறைக்கும் முகமாகவே மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழாம் மாணவர்களை என்றுமே ஏற்றத் தாழ்வுடன் நடத்துவதில்லை. மாணவர்கள் அனைவருமே சமத்துவத்துடனும் அவர்களுக் குரிய உரிமைகளுடனும் தான் எமது பாடசாலையில் வழிநடத்தப் படுகின்றார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தற்பொழுது 2013 ம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகி வருவதனால் அவர்களை குழப்பும் விதமாகவே இவ்வாறான செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்துவதாக நாம் சந்தேகிக்கின்றோம்.

தாங்கள் எமது பாடசாலையுடன் கலந்துரையாடாமல் தமது சமூக வலைத்தளத்தில் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுள்ளமை எமக்கு கவலை தரும் விடயமாகும். எங்கள் பாடசாலையின் நற் பெயருக்கும் அதன் வளர்ச்சிக்கும் களங்கம் விளைவிப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

ஏனைய பாடசாலையில் வளர்ந்து வரும் வன்முறை கலாசாரம் போன்றதல்ல எமது பாடசாலையில் குறிப்பிட்ட தினத்தில் நடைபெற்ற சிறு சம்பவம். எமது பாடசாலை குறிப்பிட்ட தொகை மாணவர்களையும் வரையறுக்கப்பட்ட வளங்களையும் கொண்டு வளர்ந்து வருவதை பொறுக்க முடியாமல் சிலர் மேற்கொண்ட தூண்டுதல் நடவடிக்கையே இதுவெனக் கருதுவதால் இதற்கு உரமூட்டி வளர்க்க தங்கள் சமூக வலைத்தளம் அனுசரனையாக செயற்பட அனுபதியளிக்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறான தகவல்களை வெளியிட முன்னர் பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடி உண்மையான தகவல்களை வெளியிட்டு சமூகத்தின் மத்தியில் சரியான அபிப்பிராய பேதங்கள் உருவாக வழிசமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பாடசாலை நிர்வாகம்
இலங்கைத் திருச்சபை தமிழ் மகா வித்தியாலயம்.

1 comments :

Anonymous ,  March 16, 2013 at 7:40 PM  

Why not the school administration call for a departmental inquiry and severely punish the groups concern,which could be a good lesson for the barberic group clashes.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com