Wednesday, March 20, 2013

இலங்கையர் இந்தியாவுக்கு சுற்றுலாச் செல்வது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்கிறீரா? - அநுர திசாநாயக்க

தென்னிந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பௌத்த துறவிகள் உள்ளிட்ட இலங்கையருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்காக 23/2 ஆணையின் கீழ் வினாதொடுத்திருக்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர திசாநாயக்கா.அவர் இன்று (20) கீழ்வரும் அறிக்கையை சபையில் முன்வைத்துள்ளார்.

‘தென்னிந்தியாவிற்குச் சுற்றுலா மேற்கொண்ட பிக்கு உட்பட இலங்கையருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பிலான விடயங்களை மரியாதைக்குரிய இந்தச் சபையில் முன்வைப்பதற்கு உத்தேசிக்கிறேன்.

மூன்று நாட்களுக்குள் தென்னிந்தியாவில் பௌத்த துறவி தாக்கப்பட்ட இரண்டாவது நிகழ்வு நேற்று முன்தினம் 18 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றதை ஊடகங்கள் வெளிக்காட்டின. இந்நிகழ்வு தற்செயலாக நடைபெற்ற ஒரு விடயம் அல்ல. மாறாக, தென்னிந்தியாவினுள் மிகவும் சூட்சுமமான முறையில் செய்யப்பட்ட இலங்கைக்கெதிரான சதித்திட்டமாகும்.

நாங்கள் ஓராண்டு காலம் பின்னோக்கிப் பார்த்தோமேயானால், 2012 ஜனவரி மாதம் இந்தச் சபையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணவன் தென்னிந்தியாவில் தாக்குதலுக்குள்ளானார் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி சென்னை நேரு விளையாட்டுத்திடலில் காற்பந்து விளையாட்டுப் போட்டியொன்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காகச் சென்ற இலங்கை மாணவர்களை துன்பத்துக்குள்ளாக்கி அவர்களைத் திருப்பியனுப்பினர். அதற்கு அடுத்த நாளன்று தன்ஜமார் கத்தோலிக்க ஆலயத்திற்கு வழிபாட்டுக்காகச் சென்ற இலங்கையர்கள் தாக்குதலுக்குள்ளாகினர். மீண்டும் 04 ஆம் திகதி வேலக்கன்னி ஆலயத்திற்கு வழிபாட்டிற்காகச் சென்ற இலங்கையர் 180 பேரை ஏற்றிச் சென்ற 07 பேரூந்துகள் தாக்கப்பட்டதுடன் பொலிஸாரினால் திருப்பியனுப்பப்பட்டனர். சென்ற பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி மதுரையிலுள்ள மிஹின் லங்கா விமானச் சேவை அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது. பெப்ரவரி 26 ஆம் திகதி வேலக்கன்னி ஆலயத்திற்கு வழிபாட்டிற்காகச் சென்ற இலங்கையர் 75 பேர் திருப்பியனுப்பப்பட்டனர். மார்ச் மாதம் 16 ஆம் திகதி தில்லிப் பல்கலைக் கழகத்தில் கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்த இலங்கை பௌத்த துறவியொருவர் தஞ்சாவூர் கோவிலில் கல்விசார் விடயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதும், மார்ச் மாதம் 18 ஆம் திகதி சென்னை புகையிரத நிலையத்தில் வைத்து இளம் பௌத்த துறவியொருவர் தாக்கப்பட்டு, யாத்திரையும் செய்யமுடியாமல் திருப்பியனுப்பட்டது போன்ற இன்னோரன்ன செயல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான தாக்குதல்களுக்கு இலங்கையர் இந்திய நாட்டில் உள்ளாகிய போதும் இலங்கை அரசு இதுவரை எந்தவொரு அரசியல் ரீதியான நடவடிக்கையும் எடுக்காதிருப்பதனால் மென்மேலும் இந்நிலை தொடர்கதையாகிக்கொண்டிருக்கின்றமையை இந்நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அதேபோன்று இந்தியாவுக்குச் சுற்றுலா மேற்கொள்வது ஆபத்தானது என்பதை இதுவரையும் எடுத்துச் சொல்வதற்கு அரசாங்கம் முன்நின்றதில்லை. விசேடமாக தென்னிந்திய அரசியல்வாதிகளினால் தொடர்ந்தேர்ச்சியாக இலங்கையருக்கு எதிராக செயற்படுத்தப்பட்டுவருகின்ற செயல்கள் மென்மேலும் உக்கிரமமடையும் தன்மையையும் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேலெழுந்த கீழ்வரும் வினாக்களுக்கு அதற்குப் பொறுப்புடைய அமைச்சர் சபையில் பதிலளிப்பார் என நம்புகிறேன்.

01. இலங்கையர் இந்தியாவில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்காக இதுவரை எடுத்த நடவடிக்கைகள் யாது?

02. மிஹின் லங்கா அலுவலகம் தாக்கப்பட்டதற்காக, அதற்கு ஏற்பட்ட நட்டங்கள் பற்றிய கணிப்பீடு இருக்கிறதா? அவ்வாறாயின் நட்டத் தொகை எவ்வளவு?

03. அவ்வாறான நிகழ்வுகள் மேலும் ஏற்படாதிருக்க எடுக்கவுள்ள இராசதந்திர நடவடிக்கைகள் எவை?

04. இலங்கையர் தென்னிந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வதனால் ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறீரா?

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com