தீர்வு வழங்க அரசு தயார்!!.. மக்களை குழப்பும் எதிர்க்கட்சிகள்
வடபகுதி காணி விவகாரம் தொடர்பில் மக்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு என்றும் தயாராகவிருப்பதாகக் கூறியிருக்கும் அரசாங்கம் 2014 ஆம் ஆண்டுக்குள் வடபகுதி மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. வடபகுதியிலுள்ள பெரும்பாலான காணிகள் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் அரசு இவ்வாறு கூறியுள்ளது. மக்களை வீணாகக் குழப்பும் வகையில் எதிர்க்கட்சிகளால் இது விடயம் தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறுகிறார் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன்.
யாழ். மாவட்டத்திலுள்ள மக்களின் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2010 ஆம் ஆண்டே அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பில் சுற்று நிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இச்சுற்றுநிருபத்தை ஆழமாக ஆராய்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவும் அதனை வரவேற்றது. இத்துடன் நின்று விடாமல் இறுதியாக முன்வைத்த அறிக்கையில் வடபகுதி காணிப்பிரச்சினை குறித்த பரிந்துரைகளிலும் அமைச்சின் சுற்றுநிருபத்திலிருந்த விடயங்களை வரவேற்று தனது பரிந்துரைகளிலும் இதனை உள்ளடக்கியிருந்தது.
இதற்கமைய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்ததும், அதனைக் குழப்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் பரிந்துரையை நிறைவேற்றும் நடவடிக்கை தடைப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சியை முடக்கியவர்கள் தற்பொழுது ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்துகொண்டு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அரசாங்கத்தின் முயற்சியை முடக்கிவிட்டு தற்பொழுது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்துமாறு கூறுவது வேடிக்கையான விடயம் எனறும் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
காணி விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விம்பத்தை சர்வதேச ரீதியில் காண்பிப்பதற்கே எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டும் அமைச்சர் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களுக்கே அவர்கள் தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறுகின்றார்.சுமுகமான தீர்வுக்குத் தயார் வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுகமான முறையில் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. மக்கள் தமக்கு காணப்படும் காணிப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் நேரடியாக வந்து கலந்துரையாட முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகின்றார்.
வடபகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அம்மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது தொடர்பில் உரிமை உள்ளது. அதற்காக அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு மாத்திரம் இருக்கக்கூடாது. காணிப் பிரச்சினை பற்றி பேசுவதற்கு அவர்கள் வரலாம் அல்லது அவர்கள் கூறும் இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்த நாம் தயாராகவே இருப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மேலும் குறிப்பிடுகிறார்.
யாழ். குடாநாட்டு மக்களின் காணிப்பிரச்சினை குறித்து முப்படை அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. யாழ். குடாநாட்டில் 5,600 ஏக்கர் தனியார் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைத்திருப்பதாக இராணுவத்தினர் எமக்கு அறிவித்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பினரால் தனியார் காணிகள் பயன்படுத்தப்பட்டால் அவற்றுக்கு காணி அமைச்சின் ஊடாக நஷ்ட ஈடு வழங்கப்படும் இதனைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.
அதேநேரம் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ் இருந்த 11,284 ஏக்கர் காணிகளில் 5,282 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டிருப்பதுடன் மிகுதியாகவிருக்கும் 6,000 ஏக்கர் காணிகள் விரைவில் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க கூறியுள்ளார்.இவற்றில் தனியார் மற்றும் அரச காணிகளும் உள்ளடங்குவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை இராணுவம் சுவீகரிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார்.
காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு யாழ். மாவட்டத்தில் தற்போது காணி விற்பனை செய்யும் விலையினை நஷ்டஈடாக வழங்குதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இராணுவத்தால் சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு பதிலாக வேறு இடங்களில் காணியுடன் வீடுகளும் வழங்கப்படும் என்றும் அவர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
காணிப் பிரச்சினை குறித்து உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட காலமாக பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட பல காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அண்மையில் காரைநகர் பிரதேசத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணியொன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டதுடன் அவருக்கு நஷ்டஈடும் வழங்கப்பட்டது.
அக்காணியைப் பெற்றுக்கொள்ள வந்த உரிமையாளர் தற்போது வயதுபோன நிலையில் மேடையில் ஏறக்கூட முடியாத நிலையில் காணப்பட்டிருந்தார். எனினும் தனது காணி மீண்டும் கிடைத்தமை குறித்து அவரிடம் மகிழ்ச்சி காணப்பட்டது. இவ்வாறு யாழ். குடாநாட்டில் மக்களின் காணிகளை அரசாங்கம் உரிமையாளர்களிடம் கையளித்து வருகிறது. அவ்வாறு கையளிக்க முடியாத நிலையிலுள்ள காணிகளுக்கு உரிய நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் காணி அமைச்சர் கூறுகின்றார்.
அதேநேரம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு காணி விடயம் தொடர்பில் முன்மொழிந்திருக்கும் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் முழுமையான முயற்சிகளை எடுத்துள்ளது.
வடக்கு கிழக்கின் காணிப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு காணி ஆணையாளர் நாயகத்தினால் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபமொன்றும் அவரினால் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாக காணி அமைச்சுக் கூறுகிறது. இச்சுற்று நிருபத்துக்கு அமைய வடக்கு கிழக்கில் காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மாகாணங்களில் காணப்படும் அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கிராம உத்தியோகத்தர்கள் மட்டத்தில் காணிப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பு வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களின் தலைமையில் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டுகிறது.
0 comments :
Post a Comment