அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்தால் கடும் நடவடிக்கை
முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி சீர்குலைய இடமளிக்க முடியாது நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது. அவர்கள் எந்த இனமாக இருப்பினும் எமது தாய் நாட்டில் வாழுகின்ற அனைவருமே இலங்கையர்களே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து பொறுப்புக்களும் எள்ளளவேனும் குறைவின்றி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை உள்ளூராட்சி சபைகளிலுள்ள அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களை ஜனாதிபதி அவர்கள் அலரிமாளிகையில் சந்தித்து உரையாடினார். இச்சந்தர்ப்பத்தின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.அந்தந்த உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்.
பிறந்த தாய் நாட்டுக்காக தமது கடமைகளை நிறைவேற்ற தாம் எந்நேரமும் ஆயத்தமாக இருப்பதாக முஸ்லிம் உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர். ஜனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் அதற்கான சந்தர்ப்பம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.சகல இனமக்களையும் சமமாக மதிக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்பாக இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இப்போது இந்த நாட்டில் அனைவரும் அச்சமின்றி நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டினுள் தற்போதுள்ள அமைதி நிலைமையை தேவையற்ற பிரச்சினைகளால் சீர்குலைவதற்கு இடமளிக்க முடியாது நாட்டில் வாழுகின்ற அனைவரும் இந்நாட்டின் பிரஜைகள். அனைத்து மக்களுக்கும் தலைவராக நானே இருக்கிறேன். மக்களின் எந்தப் பிரச்சினைகளுக்கும் செவி மடுக்க ஆயத்தமாகவே இருக்கிறேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
இச்சந்திப்பின் போது சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி. சில்வா, பிரதி அமைச்சர்களான பைசர் முஸ்தபா, அப்துல் காதர், கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. ஆகியோர் உட்பட முஸ்லிம் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
1 comments :
அப்படி என்றால் முதலில் TNA மீது தான் மிகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Post a Comment