இவர்களை நம்பி நடுத்தெரிவில் நிற்கும் தமிழர்!
தமிழ் மக்களாகிய நமது உள்ள உட்கிடக்கை என்ன? எதை நாம் தீர்வு என்று ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறோம்? நமக்கு என்னதான் வேண்டும்? இதையெல்லாம் வெளிப்படை யாக விவாதித்து சாதக பாதகங்களை அலசி நமக்குள் ஒரு முடிவை அடைந்திருக்கிறோமா? அல்லது அப்படி ஒரு முடிவெடுக்கத் தயாராகவேனும் இருக்கிறோமா? நமது விருப்பம், சமஷ்டி? சுயநிர்ணயம்? வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி? தன்னாட்சி அலகு? தமிழீழம்? என்னவாகவும் இருக்கட்டும். அதனதன் நடைமுறைச் சாத்தியம் என்னவாக இருக்கிறது என்று நமக்குள் உரையாடி விளக்கவோ விளங்கிக் கொள்ளவோ முயல மாட்டோமா?
உலக நாடுகள் எதை நமக்கு எடுத்துத் தந்துவிடும் என்று நம்பி நாம் காலத்துக்குக் காலம் சுற்றுலா போகிறவர்களையும் ஒரு சர்வதேச மகாநாடு முடிந்து மற்றொரு சர்வதேச மகாநாடு வருவதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்? எந்தத் திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த நாட்டுக்குள் பேச ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு நாட்களைக் கடத்துகிறோம்? சர்வதேசம் இங்கே எதைச் சாதிக்கப் போகிறது என்று மக்களுக்கு எதிர்பார்ப்பையும் நம்பிக்கைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்? நம் எல்லோர் மனங்களும் ஏதோ ஒரு உரலை இடித்துக் கொண்டிருப்பது எந்த அவலை நினைத்து?
இந்தத் தீவில் சிங்கள மக்களை முழுதாக மறுத்தொதுக்கி விட்டு நமக்கென்றொரு ஆட்சியதிகாரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமா? அது நடைபெறக் கூடியதுதானா? அவர்களையும் பொருட்படுத்தி நமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? பேச வேண்டியது என்ன? உலக அரசியல் விவகாரங்களில் நியாயம், அநியாயம் என்பவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? நம்மைத் தூண்டி விடுகிறவர்கள், அனுதாபம் காட்டி உணர்ச்சியேற்றுபவர்கள், நாம் மட்டுமே ராட்சசர்கள் நடுவே இருப்பதாகச் சொல்லி நாம் போரிட்டழிய ஞாயம் வழங்குபவர்கள் எல்லோரும் உண்மையாக நியாயத்தைக் காப்பாற்றுபவர்களா? நமக்கு வாய்த்திருப்பதுதான் பேசவோ சேர்ந்து வாழவோ முடியாத கொடூர எதிர்த்தரப்பு. அது தான் உண்மையா?
ஹிட்லரை அரக்கன் என்று அவனுக்கு முடிவு கட்டிய ஜனநாயக நாடுகள், தாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன. வாய் ஓயாத மனிதஉரிமை வேஷப் பேச்சுகளின் பின்னால் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகள்தான் எத்தனை? சில மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி ஈராக்கில் உயிரிழப்பு 12 இலட்சங்களுக்கு மேல். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலும் நிலைமை அதற்குச் சளைத்ததல்ல. வியட்நாமில், சிலியில், எல்சல்வடோரில், பாலஸ்தீனத்தில்... பரந்த மனப்பான்மை கொண்டதாகச் சொல்லப்படும் பிரான்சும் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கூட அல்ஜீரியாவில், ருவாண்டாவில் செய்துமுடித்த பாதகங்கள் சிறியவையல்ல. இப்போதும் மாலியில் போய்ச் செய்வதென்ன?
நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் கஷ்டப்படக் கஷ்டப்பட வேறு யாரும் உதவிக்கு வரக்கூடும் என்று பெருங்குரலெடுத்துப் புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாம்தான் பேசியாக வேண்டும். தீர்வு கண்டாக வேண்டும். எங்களை நாங்களே அழித்துக் கொள்ளும் விதமாக, வாழ்வைச் சிதைத்துக் கொள்ளும் விதமாக எதிர்ப்பை வைத்துக் கொள்வது புத்தியில்லை. பழைய கனவுகளும் மாறாத இலட்சியப் பார்வையும், பெறச் சாத்தியமான தீர்வின்பால் நம்மை நகர விடுவதாயில்லை. உலகில் நமக்கு மட்டுமே அநீதிகள் நடந்திருப்பதாக அரற்றி, மக்களுக்கு வதை வாழ்வை அளித்துக் கொண்டிருப்பதாகவே இது முடிகிறது.
1 comments :
We have to get rid of the"illusioned
and dark ages" in which we are still muddled from the time birth of federal party.It is really hard to get rid of illusion,until we go to a psychologist.
Post a Comment