ஆண்களில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு அல்லது இரத்தக் கொதிப்பு-கடந்தவருட ஆய்வு
கடந்த ஆண்டு இறுதியில் உலக சுகாதார அமைப்பு 194 நாடுகளில் நடத்திய ஆய்வில் ஆண்களில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு அல்லது இரத்தக் கொதிப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. முன்பெல்லாம் மனிதர் வாழ்க்கையில் உழைப்பு அதிகமாக இருந்ததால் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு போன்ற நோயின்றி இருந்தனர். தற்போது 35 வயதைத் தாண்டியவர்களில் பெரும் பாலானோர் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்கிறது ஆய்வு.
அலுவலகத்திலும், வீட்டிலும் அதிக பதற்றமாக காணப்படும் பலருக்கு இரத்தக் கொதிப்பு நோய் ஏற்பட்டுவருகிறது. புரதச் சத்தில்லாத உணவைச் சாப்பிடுபவர்கள் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றிலிருந்து தப்ப அதாவது - நோய் கூடுதலாகாமல் கட்டுப்படுத்த - மருத்துவர்கள் கூறும் அறிவுரை வாழ்நாள் முழுவதும் மருந்தும் நடைப்பயிற்சியும். அன்று நம்மைக் கண்டு நோய் பயந்து ஓடியது. இன்று அப்படியில்லை, நோயைக் கண்டு நாம் பயந்து ஓடிக் கொண்டிருக்கிறோம் - நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி என்று ஏதாவது ஒரு வடிவில்.
நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் உடல் உழைப்புதான் பிரதானமாக இருந்தது. அன்று போக்குவரத்து நடைப் பயணமாகவே இருந்தது. இன்று சிறிது தொலைவு செல்ல வேண்டும் என்றால் இரு சக்கர வாகனங்களையும், பஸ்ஸையும் நம்பியிருப்பதாகி விட்டது. உடலுக்குப் பயிற்சியைத் தரும் சைக்கிள்களும் கூட அரிதாகி வருகிறது. உடலுழைப்பு வேலைகளை மறந்துவிட்டதால் உடல் தளர்ந்து மூட்டுகளில் வலி ஏற்பட்டு கை - கால்களில் வலு இழந்து வருகிறது.
எனக்கு எவ்வித நோயும் கிடையாது, மருந்துகள் உண்பது கிடையாது என்று கூறுபவர்களை இன்று விரல்விட்டு எண்ணி விடலாம். வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பத்துடன் சேர்ந்து 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் அல்லது 10 மணி நேரம் உழைப்பதாகச் சொல்கின்றோம். நாற்காலியில் அமர்ந்தபடி கணனியிலும், மடிக்கணனியிலும், செல்பேசியில் பேசியபடியும் வேலை பார்ப்பது எப்படி உடல் உழைப்பாகும்? நாற்காலியில் அமர்ந்தபடியே பணியில் ஈடுபடும் நம்மால் தினமும் உண்ணும் உணவுகூட சமிபாடடைவதற்கு நேரம் கொடுப்பதில்லை. கதிரையில் இருந்தபடியே அதற்குள் அடுத்த உணவுவேளை வந்து விடுகிறது. மீண்டும் உணவை முடித்து விட்டு கதிரையில் வேலை.
உடல் உழைப்பு என்பது காணாமல் போய்விட்டது. ஒரு மனிதன் 24 மணி நேரத்தில் 6 மணி நேரம் தூக்கத்திற்கும், 8 மணி நேரம் உழைப்புக்கும் 2 மணி நேரம் அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஒதுக்க வேண்டும். மீதியுள்ள நேரத்தில் கவலைகளை மறந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
ஆனால், உழைக்கிறோம் என்ற மாயையை உருவாக்கி, சரியான திட்டமிடல் இன்றி பல மணி நேரத்தை வீணாக்கி விட்டு, தூங்கும் நேரத்தை குறைத்துக் கொள்கிறோம். இதனால் நோய் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
ஆகவே, சரியான முறையில் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, எளிய உடற்பயிற்சியுடன் இயற்கை தரும் சத்தான உணவுகளை உண்பதுடன், திட்டமிட்டு வாழ்க்கையை வாழ்ந் தால் நோய்களை நாமும் வெல்லலாம்.
0 comments :
Post a Comment