வடக்கில் முஸ்லிம்கள் எப்போது மீள்குடியேற முடியும்
வடக்கில் முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அரசாங்கம் குடியேற்றுவதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வவுனியா நகர சபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான அப்துல் பாரி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அப்துல் பாரி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் 35ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற தயாராகவுள்ளன. அதில் 22 ஆயிரம் குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களை மன்னார் மாவட்டத்தில் பதிவும் செய்துள்ளனர். அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தையும் பெறாமல், தமது மண்ணில் மீள்குடியேறியுமுள்ளனர்.
இவ்வாறான நிலையில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி தமிழ் - முஸ்லிம் - சிங்கள மக்களையும் பிளவுபடுத்துவதற்கு பல அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. அரசாங்கத்தின் காணிக் கொள்கையின் பிரகாரம், அவசர தேவைகளுக்கமைய காணிப்பங்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனது நடை முறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டே இந்த காணிகள் வனபரிபாலன திணைக்களத்தாலோ, அல்லது பிரதேச செயலாளர்களாளோ வழங்கப்படுகின்றது. இந்த நடைமுறைகள் மீறப்பட்டிருப்பின் அது குறித்து கவனம் செலுத்தப்படுவது நியாயமானதாகும். ஆனால் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக பெறப்பட்ட காணிகளை அமைச்சர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கும் கருத்து முற்றிலும் அப்பட்டமான பொய்யாகும்.
கொழும்பில் இருந்து கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் படும் அவலத்தை அறிந்து கொள்ள முடியாத அமைப்புக்கள் பொய்யான அறிக்கைகளை விடுவதை இனியும் தவிர்த்து இந்த நாட்டில் முஸ்லிம்களையும் அவர்களது தாயக மண்ணில் மீள்குடியேற்ற உதவி செய்ய முன்வருமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அப்துல் பாரி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment