ஜெனீவாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் —இலங்கை அரசு
ஒரு தனி மனிதனுக்கு அல்லது ஒரு நாட்டுக்கு துன்பம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் போது அந்த மனிதன் அல்லது அந்த நாடு தன்னுடைய உண்மையான நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை இலகுவில் இனம்கண்டு கொள்ள முடியும்.இலங்கைக்கு எதிராக யுத்தம் முடிவடையவிருந்த கடைசி சில தினங்களின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றன என்ற முறைப்பாட்டினை தற்போது சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா அமைப்பின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்காவும் அதன் மேற்குலக நேசநாடுகளும் வலியுறுத்தக்கூடிய பிரேரணை ஒன்றை கொண்டுவரப் போவதாக அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன.
இலங்கையின் நட்பு நாடுகளான சீனா, இந்தியா எமது நாட்டின் இயற்கை வளங்களையோ, பொருளாதாரத்தையோ சூறையாடும் எண்ணமின்றி நட்புக்கு முக்கியத்துவம் அளித்து இலங்கைக்காக இன்று சர்வதேச அரங்கில் உதவுமென்ற நம்பிக்கை எமக்கு உண்டு.இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் எங்கள் நாட்டின் வரலாற்றை பின்னோக்கி பார்த்தல் அவசியமாகும். 1505ம் ஆண்டு முதல் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அதையடுத்து ஆங்கிலேயர் எங்கள் நாட்டை ஆக்கிரமித்து எமது பொருளாதாரத்தை சூறையாடியதுடன் நின்றுவிடாமல், நம்நாட்டு மக்களை அடிமைகளைப் போல் வழிநடத்தி வந்தார்கள். குறிப்பாக மலையகத்தின் பெருந்தோட்டங்களுக்கு இந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தென்னிந்தியாவில் இருந்து அடிமைகளாக பலவந்தப்படுத்தி கொண்டுவந்த தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் இன்றும் அதே நிலையில் லயன் வாழ்க்கையில் முடங்கிக் கிடக்கக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளது.
பிரிட்டிஷார் தொடர்ந்தும் எமது நாட்டின் செல்வத்தை சூறையாட முடியாது என்று தெரிந்து கொண்டவுடன் வேறு வழியின்றி இலங்கைக்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு கம்பி நீட்டினார்கள். அதையடுத்து எங்கள் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஐக் கிய தேசியக்கட்சியின் கோர்ட் சூட் அணிந்திருந்த தலைவர்கள் வெள்ளையர்களின் பாணியிலேயே மலையக மக்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
1956ம் ஆண்டுக்குப் பின்னர் பதவிக்கு வந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி கூட்டமைப்பின் அரசாங்கமே மலையக மக்களின் நல்வாழ்வுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்தது. இது விடயத்தில் மலையக மக்களுக்காக பெருந்தொண்டாற்றிய மலையகத்தின் தந்தை என்று பாராட்டப்படும் செளமியமூர்த்தி தொண்டமான் என்ற பெரியவரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியதாக இருந்தது.
1505ம் ஆண்டின் போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு முன்னரே நம்நாட்டுக்கு சீன வியாபாரிகளும், அரபு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளும் 13ம் நூற்றாண்டில் இருந்தே இலங்கைக்கு வந்து எமது விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களையும் வாசனைத்திரவியங் களையும் வாங்கிச் சென்றார்கள். அதற்கு பதிலாக அவர்கள் எமது நாட்டுக்கு விலை உயர்ந்த கம்பளங்கள் மற்றும் பட்டுப் புடவைகள் ஆகியவற்றையும் வேறு பல பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இந்த சீன மாலுமிகளுக்கோ அரபு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளுக்கோ இலங்கையை ஆக்கிரமிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கவில்லை. அவர்கள் அன்று முதல் இன்று வரை இலங்கையின் நண்பர்களாகவே இருந்து எங்களுக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதவி செய்யவும் தயங்குவதில்லை.
இன்று கூட உலகின் பொருளாதார வல்லரசாக வளர்ந்து வரும் சீனா மற்றும் அரபுலக நாடுகள் இலங்கைக்கு பல வகையிலும் பொருளாதார உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. இலங்கையை தொடர்ந்தும் பொருளாதார ரீதியில் சூறையாட முடியாது என்பதை புரிந்து கொண்டதனாலோ என்னவோ இந்த மேற்குலக நாடுகள் இலங்கையை சின்னாபின்னமாக்குவதற்காக இத்தகைய சர்வதேச சதிமுயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாரம்பரியமாக மத ரீதியிலான சம்பிரதாயபூர்வமான உறவுகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. இந்தியாவின் சில குறுகிய நோக்கத்தையுடைய சுயலாபத்திற்காக அரசியல் நடத்தும் சில அரசியல் தலைவர்கள் இலங்கையை கண்டித்து, கோசமெழுப்பி, ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள மேற்குலக நாடுகளின் பிரேரணையை ஆதரிக்க வேண்டுமென்று இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இப்போது பாரிய அழுத்தங்களை கொண்டு வருகின்றனர்.
இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் மீள்வாழ்வு திட்டங்களுக்கு தமது அரசாங்கம் கோடானு கோடி ரூபாவை உதவியாக வழங்குகிறது என்றும் ஏற்கனவே 50ஆயிரம் வீடுகளை வடபகுதியில் நிர்மாணித்து யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுக்கு அவற்றை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும், தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவும் இலங்கை மக்களுக்காக எவ்வளவுதான் முதலைக் கண்ணீர் வடித்தாலும், நம் நாட்டு மக்கள் தங்களுக்கு புதுவாழ்வை அளிப்பதற்கு ஏற்கனவே நல்ல பல நடவடிக்கைகளை எடுத்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தங்கள் பூரண ஆதரவை அளிப்பதை எந்தவொரு சக்தியினாலும் தடுத்துவிட முடியாது.
0 comments :
Post a Comment