பிரபல தமிழ் நடிகை காலமானார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரும் தமிழகத்தின் பெருமைமிக்க கலைஞர்களான மறைந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என சாதனையாளர்களுடன் நடித்த நடிகை ராஜசுலோசனா வயது 77 நேற்று சென்னை மடிப்பாக்கத்தில் காலமானார்.
1935-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த பெஜவாடாவில் பிறந்தவர் ராஜீவலோசனா. சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார். 1953-ல் அவர் நடித்த முதல் படம் குணசாகரி வெளியானது. தொடர்ந்து அவர் நடித்த ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்த ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்ததுடன் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்ததுடன் புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா, ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜசுலோசனா நேற்று அதிகாலை மரணமடைந்தார். இவரது கணவர் பெயர் சிஎஸ் ராவ். இவர்களுக்கு தேவி, ஸ்ரீ என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டை குழந்தைகள். ஷாம்சுந்தர் என்ற மகனும் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார்.
மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment