Friday, March 15, 2013

91 சிபார்சுகளை நிராகரிக்கின்றோம், 110 ஏற்கின்றோம் ஐ.நா வில் சமரசிங்க.

ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இன்று (15) உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை தொடர்பில் ஐ.நா வில் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள சிபார்சுகளில் 91 இலங்கையின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை ஆகையால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என நிராகரித்துள்ள அதே நேரம், பரிந்துரைக்கப்பட்டுள்ள 110 சிபாரிசுகள் ஏற்றுக்கொள்வதாகவும் அவை ஏலவே நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சபையில் உரையாற்றிய அமைச்சர் : 3 தசாப்த காலமாக பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்து வந்த இலங்கை மக்கள் இன்று சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் மகிழ்ச்சியினை அனுபவிக்கின்றனர். அபிவிருத்தியின் ஊடாக தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போலி பிரச்சாரங்களுக்கு ஏமாற்றமடையாது இலங்கையின் முன்னேற்றங்களை நெகிழ்வு தன்மையுடன் நோக்கிய நாடுகளுக்கு எமது இலங்கை அரசின் நன்றி உரித்தாகுவதாக தெரிவித்தார்.;

2008 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கம் பல்வேறுப்பட்ட நெருக்கடிகளை தாண்டி நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டது. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த பொது மக்களை மீட்டெடுப்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்தது. ஒரு வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் மக்களை மீட்டெடுக்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

வன்னி மனிதாபிமான நடவடிக்கை ஊடாக பெற்ற வெற்றிகளுடன் சுதந்திரமிக்க யுகத்தினை மக்களுக்கு உருவாக்க அரசிற்கு முடிந்தது. தற்போது மக்களுக்கு சுபிட்சம் மற்றும் உண்மையான சுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் சிவில் நிருவாகம் அமுல்படுத்தப்பட்டது. மீள்குடியேற்றம், கண்ணிவெடிகளை அகற்றுதல் புனர்வாழ்வு செயல்பாடுகள் போன்றனவும் வெற்றிகரமாக பூர்த்தி செய்ததாகவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.

இனங்களுக்கு இடையே நல்லுறவினை விருத்தி செய்வதும் சமாதானத்தை நிலை நாட்டுவதுமே எமது நோக்கமாகும். கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சபையின் 12 பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த ஆண்டில் முன்னேற்ற மீளாய்வு அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் 110 யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சமரசிங்க அதற்கு பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட 3 யோசனைகளை ஏற்றுக் கொண்டதாக மாநாட்டில் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கும் பாராட்டு தெரிவித்த அமைச்சர் கடந்த நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பல நாடுகள் எமது வெற்றியை அங்கீகரித்தன. ஒரு சில நாடுகள் நாம் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களை புரிந்து கொண்டதுடன் மேலும் ஒரு சில நாடுகள் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மை நிராகரித்ததாகவும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

இருப்பினும் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு பல பொறுப்புக்களை நிறைவேற்ற எமக்கு முடிந்தது. தலைவர் அவர்களே, எமக்கு ஆதரவு தெரிவிக்க முடிhயத 91 பரிந்துரைகள் தொடர்பாக நாம் தெளிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுடன் சுயமான மேலும் 19 பரிந்துரைகளை சமர்ப்பித்ததாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் நெருக்கடி மிக்க பயணத்தினை உணர்ந்து முன்னேற்றங்களை குறைவாக மதிப்பீடு செய்ய வேண்டாமென்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு சகல நாடுகளினதும் ஒத்துழைப்பையும் ஆசிர்வாதத்தையும் எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

1 comments :

Anonymous ,  March 15, 2013 at 9:04 PM  

Srilanka is not a "Head shaking Toy"

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com