மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை 23ல் ஜனாதிபதி திறக்கிறார்.
மட்டக்களப்பு கல்லடிப்பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் எதிர்வரும் 23ஆம்திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதனையொட்டி மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும், மாநகர அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்பினைடுத்து மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றுவரும் வேலைத்திட்டங்கள் பார்வையிடப்பட்டன.
இம்மாதம் 23ஆம்திகதி அம்பாறையில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை ஒட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாகவும் முக்கியமானதாகவும் உள்ள மட்டக்களப்பு மாநகர அழகுபடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் நீதிமன்றம் அருகிலுள்ள முதியோர் பூங்கா, காந்திப் பூங்கா, இருதயபுரம் சந்திக்கு அருகிலுள்ள லீனியர் பார்க், திருமலை வீதியின் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகளை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதுடன் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருபவர்களுக்கும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியில் உள்ள காந்தி சதுக்கம் காந்தி பூங்காவாக மாற்றம்பெறுகிறது. தேசத்தின் மகுடம் (தயட்ட கிருள) வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அபிவிருத்தி த்திட்டத்துக்கென 38.301 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.
0 comments :
Post a Comment