கதிரொளி இல்லத்தின் அரசகட்டட ங்களை ஒப்படைக்க உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள முக்கியமான ஒரு இடம் கொக்கட்டிச்சோலை. அந்தக் கொக்கட்டிச்சோலையிலுள்ள கதிரொளி சிறுவர் இல்லம் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த இல்லத்தின் பாவனையில் இருந்த அரச கட்டங்களிலிருந்து உடனாடியாக வெளியேறுமாறு பட்டிப்பளை பிரதேச செயலாளரால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவ் இல்லத்தின் நிருவாகிகளது தகவல்களிலிருந்து தெரிய வருகிறது. தனது மேலதிகாரிகளின் உத்தரவிற்கமையவே தான் இதனை நிறைவேற்றுவதாக தம்மிடம் பிரதேச செயலாளர் தெரிவித்ததாகவும் நிருவாகிகள் கூறினர்.
இந்தக் கட்டடங்களில் கிராம சேவையாளரின் விடுதியும், மீனவர் சங்கக் கட்டடம் ஒன்றும் அடங்குகின்றன. விடுதலைப்புலிகளின் காலத்தில் சிறுவர் இல்லம் அமைந்திருந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் முன்னாள் பிரதேச செயலாளர் அமலநாதனால் குறிப்பிட்ட கட்டடங்களில் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இருந்த போதும், தற்போது அக்கட்டடங்களிலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது எனவும் நிருவாகத்தினர் தெரிவித்திருந்தனர்.
கதிரொளி இல்லம் 2002ஆம் ஆண்டு முதல் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே போன்று மப்டோ என்ற மகளிர் நிறுவனத்தினரையும் அவர்களுடைய கட்டடத்திலிருந்து வெளியேற்றி அவர்களுடைய நிதியையும் பிரதேச செயலாளர் கைப்பற்றிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அங்கு வைக்கப்பட்டுள்ள தையல் இயந்திரங்கள், அரிசி ஆலை போன்றவற்றை செயற்படுத்த முடியாமல் இருப்பதாக அதன் தலைவி திருமதி துசியந்தினி தெரிவித்தார்.
சிறுவர் இல்லங்களையோ, அரச சார்பற்ற நிறுவனங்களையோ வெளி நாடுகளிலிருந்து வரும் நிதிகளை நம்பி நடத்த முடியாத நிலை உள்ளுர் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கையில், அதிகாரிகளது தவிர்க்கக் கூடியதாக இருக்கும் விடயங்களுக்காக , இவ்வாறான செயற்பாடுகள் மேலும் பின்னடைவுகளைத் தரலாம் என அரச சார்பற்ற நிறுவனங்களின் தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.
0 comments :
Post a Comment