Thursday, February 7, 2013

உலக கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த ரகசியத் திட்டம் !!

உலக கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானை தனிமைபடுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், ஜாஹா அஷரப் குற்றம் சாட்டியுள்ளார்.2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் இலங்கை வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இந்த தாக்குதலுக்குப் பிறகு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற எந்த கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. பல போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் கொண்டுவர அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் அங்கு நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு நாடும், அங்கு சென்று விளையாட விரும்பாமல் மறுப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட விரும்பாமல் சில வீரர்கள் சம்மதித்தாலும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

குறிப்பாக இந்தியா வங்காள தேச கிரிக்கெட் வாரியங்கள் தங்களுக்கு ஆதரவாக இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜாஹா அஷரப் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில், "உலக கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த ரகசியமாக திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதை நான் அறிவேன். இதனால் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. குறிப்பிட்ட காலத்தில் சூப்பர் லீக் போட்டியை எங்களால் நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.

இந்த போட்டி மீண்டும் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடக்க வழிவகுக்கும் என்று நம்புகிறோம். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடப்பது குறித்தும், மீண்டும் சர்வதேச போட்டி நடத்துவது குறித்தும் தீமை நடைபெறும் என்று நம்பும் மக்கள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது, எனக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கையுடன் இருக்கிறது. டெஸ்ட் அணிகள் தொடர்ந்து பாகிஸ்தான் வந்து விளையாட மறுப்பது எங்களுக்கு கஷ்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் சர்வதேச போட்டியை பாதுகாப்பாக நடத்த முடியும் என்கிற உணர்ச்சி எங்களிடம் நிறைய உள்ளது" என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com