Thursday, February 21, 2013

பாகிஸ்தானின் மூத்த தலிபான் தளபதியை கைது செய்தது ஆப்கானிஸ்தான் !!

மூத்த பாகிஸ்தானிய தலிபான் தளபதி ஒருவரை தாம் பிடித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.பாகிஸ்தானின் கைபெர் பக்துன்க்வா எல்லைக்கு அண்மையில் உள்ள ஆப்கானின் மொஹ்மான்ட் டாரா மாவட்டத்தில் மௌல்வி ஃபாகிர் மொஹம்மட் எனப்படும் இம்முக்கிய பாகிஸ்தானி தலிபான் தளபதி பிடிபட்டுள்ளார்.

இந்த ஆப்பரேஷன் ஆப்கானின் புலனாய்வுத் துறை, NDS எனப்படும் தேசிய இயக்குனர் குழும பாதுகாப்புப் பிரிவு மற்றும் ஆப்கான் போலிஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆப்பரேஷன் பதுங்கி நின்று மிகவும் சாதுரியமாக நிகழ்த்தப் பட்டது எனவும் கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கை தன் கைவசம் வைத்திருந்த தலிபான்களுக்கு எதிராக மிகப் பெரிய படை நடவடிக்கை ஒன்றை பாகிஸ்தான் மேற்கொண்டது.

இதன் போது இடம்பெற்ற பல முக்கிய தாக்குதல்களைக் கூட தற்போது பிடிபட்ட தலிபான் தளபதியான ஃபாகிர் மொஹம்மட் தான் வழிநடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்குள் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆப்கானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இரு நாடுகளையும் சேர்ந்த இராணுவமும், புலனாய்வு அமைப்புக்களும் கூட தமக்கிடையே பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

கடந்த காலத்தில் இவ்விரு நாடுகளும் எல்லைகளுக்கு குறுக்கே போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஸ்வாட் பள்ளத்தாக்கைக் கைவசப் படுத்தியிருக்கும் முல்லாஹ் ஃபஸ்லுல்லாவை தன்னிடம் கையளிக்குமாறும் ஆப்கானை பாகிஸ்தான் கோரியுள்ளது. இவர் தற்போது ஆப்கான் எல்லையிலுள்ள மாநிலங்களான குனார் மற்றும் நுரிஷ்டானில் மறைந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com