Wednesday, February 20, 2013

தமிழர்களின் உரிமைகள் குத்தகைக்கு!!!

தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று இத்தனை காலமாகத் தமிழரின் அரசியலைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள், தமிழ்மக்களின் அரசியலுரிமைகள் தொடர்பாக எந்த புத்திசாலித்தன முடிவையோ, திட்டமிட்ட நகர்வையோ காண்பித்ததாய் வரலாற்றில் தடயம் இல்லை.

இப்போதும், சர்வதேசம் எதையாவது செய்யும் தானே என்ற காத்திருப்பும், ஆட்சி மாறினால் ஐ.தே.க. அரசில் தங்களுக்கான சொந்த சலுகைகளை அதிகமாய்ப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புமே மிச்சமாக இருக்கிறது. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை இவர்கள் மட்டுமல்லாது அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளும் ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து விரும்புகின்றன.

இதையே தமிழ் மக்களும் விரும்புகின்ற அரசியலாக இவர்களும் இவர்களது ஊடகப் பலமும் கட்டமைத்துக் காட்டுகின்றன. ஆட்சியை மாற்றிவிட்டால், தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும், எதைப் பெற்றுத் தரமுடியும், அப்படித் தரக்கூடியவர்கள் யார், அவர்கள் அதுபற்றி ஏதேனும் உறுதியளிக்கிறார்களா என்பது பற்றியெல்லாம் யாரும் எதுவும் பேசுவதில்லை. அக்கரைப் பச்சையைக் காட்டியபடியே காலத்தை ஓட்டுவதுதான் இவர்களது அரசியல் வேலைத்திட்டம்!

சரி, இப்போதைக்கு இலங்கையில் ஆட்சி மாற்றம் நடக்கக்கூடிய வாய்ப்பு ஏதாவது இருக்கிறதா என்றால், குறைந்தது ஐந்து வருடங்களுக்கு இல்லை என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கும் விளங்கும். அத்தகைய நப்பாசைகளைப் பரவவிட்டுவிட்டுக் காத்திருப்பதென்பது, காலமறிந்து தமிழ்மக்களுக்குத் தேவையான அரசியலைச் செய்யவோ சொல்லவோ முடியாமல் இதுகாலவரை செய்துவந்த ஏமாற்று சுயநல அரசியலின் தொடர்ச்சிதான்.

இப்போதைக்கு எந்தத் தேர்தல் நடந்தாலும் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய நிலையில் எதிர்க்கட்சி இல்லை. தொடர்ந்து முப்பதுக்கு மேற்பட்ட தேர்தல்களில் தோல்வியைத் தவிர வேறெதுவும் காணாத கின்னஸ் சாதனையுடனேயே எதிர்க்கட்சித் தலைமை இருக்கிறது. அந்தக் கட்சியில் வேறு நம்பிக்கைக்குரிய, கவர்ச்சிமிக்க தலைமைகளாகவும் யாருமில்லை. ஆளும் கட்சியில் இருப்போரை விட மென்போக்குடையவர் என்றோ, தமிழ் மக்களுக்கு தீர்வுதர இசையக்கூடியவர் என்றோ கூட அங்கே எந்தத் தலைமையும் இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட அத்தகைய உறுதிமொழிகளையோ, இதுதான் நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குத் தரப்போகும் தீர்வு என்றெதையுமோ சொல்ல அவர்கள் தயாரில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புதுடெல்லியிலும் ஐரோப்பாவிலும் பேசிவரும் பேச்சுக்களை வைத்து, ஆட்சிமாற்றம் அவர் வடிவிலாவது வர வாய்ப்பிருக்குமா என்றும் சிலருக்கு அங்கலாய்ப்பிருக்கிறது. இலங்கையில் இன்றிருக்கும் யதார்த்தத்தை ஜீரணிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திணறும் கற்பனாவாதிகளால் எப்படி நடைமுறைச் சாத்தியமான திட்டங்களையும் தீர்வையும் பற்றி யோசிக்க முடியும்? இனத்தனித்துவச் சிந்தனையிலிருந்து இன்றும் இறங்கிவர முடியாத் தத்தளிப்பு இது. தமிழர்கள் இன்றும் புலிக்காலச் சவாலுடனேயே இருக்கிறார்கள் என்ற மனப்பதிவே நம் தரப்பிலிருந்து சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதுதான் இன்றைய ஆட்சியின் ஸ்திர நிலைமைக்குக் காரணம். அப்படியிருக்கையில் சந்திரிகா போன்ற மென்போக்குடைய ஒருவர் ஆட்சிமாற்றத்திற்கு வழிவகுக்க முடியும் என்று யோசிப்பது பவளக்கொடிக் கனவல்லாமல் வேறென்ன?

தமிழர்களாகிய நாம் சிங்கள மக்களுடனான நேய உரையாடலைத் திறக்காமல் இங்கு எந்த மாற்றமுமில்லை. அவர்களிடம் நம்மைப் பற்றி இருக்கும் சந்தேகங்கள் அகன்றால்தான் எந்த ஆட்சியாளரும் இங்கு தீர்வைக் கொண்டுவர முடியும். ஆட்சியாளர்களும் தமிழ்த் தலைமையும் இனமுரணை வளர்த்து தங்கள் அரசியலிருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது நம் விமர்சனமாக இருந்தால், அவர்களைக் கடந்து, நாம் சிங்கள மக்களிடம் செல்ல வேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com