Saturday, January 12, 2013

சவூதி சட்டத்தை கேள்வி கேட்க வந்த ரிசானா!

டெல்லிக் கொடூரத்தின்பின் மரணதண்டனையின் அவசியம் உணரப்படலாயிற்று என்பது உண்மைதான். ஆனால் அது சவூதியின் ஷரியச்சட்டத்தின்படியான மரணதண்டனை அல்ல! இந்த யதார்த்தத்தை பலர் புரிந்திலர். ஆனால் இலங்கை மக்கள் ரிசானா என்னும் புனிதவதியூடாக நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.

‘சிறப்பான சிகிச்சை வேண்டும்’’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். பலன் இல்லை.சிறப்பான தீர்ப்பு வேண்டும்’ என்று பாதிக்க வைத்த கொடியவர்களை சவூதிக்கு அனுப்புங்கள்; பலன் இருக்கும்’’ என்கிறார்கள் நீதி கேட்கும் நியாய உள்ளங்கள். - முஸ்லிம் லீக் எம்.பி., எம்.அப்துல் ரஹ்மான்

அருமை! சவூதிக்கு அனுப்பலாம்! ரிசானா என்னும் இலங்கை இஸ்லாமியச் சிறுமிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையின் யோக்கியத்தை அறிந்திருந்தால் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரான முஸ்லிம் லீக் எம்.பி., எம்.அப்துல் ரஹ்மான் இப்படி பறதட்டமாட்டார்.

இந்தியப் பண்பாட்டிலும் மரணதண்டனைகள் தொன்றுதொட்டு இருந்துவந்தே உள்ளன. ஆனால் பழிக்குப்பழி என்னும் இழிவான தரத்தில் அவை அமைந்திருக்கவில்லை. மரணதண்டனைகள் தேவைதான். அவை பழிக்குப்பழி என்னும் பாழான சிந்தனையில் இல்லாமல், நாட்டில் குற்றங்களைக் குறைக்கும்நோக்கில் அமைந்திருக்க வேண்டும்.

ஒருவரின் கை தற்செயலாக வெட்டப்பட்டு விட்டதென்று வைப்போம். இப்போது பழிக்குப்பழி என்னும் சட்டத்தின் முன்னிலையில், பாதிக்கப்பட்டவர் தன்கையை வெட்டியவரின் கையை வெட்டவேண்டுமென்று வேண்டுகின்றார் எனின், அவர் கொடூரமான குரோதசிந்தனை உடையவர் என்றாகிறது. , எந்தவிதமான குரோதசிந்தனையும் இல்லாது நடைபெற்ற தவறுதலுக்கு கொடூரகுரோத சிந்தனையால் தண்டனை வழங்கப்படுமானால், அந்தச்சட்டம் எந்தளவுக்கு வினைத்திறன் உடையதென்பதை அறிவுடையோர் சிந்திப்பாராக.

இந்தியப் பண்பாட்டில் உலாவிய மனுதர்மத்தை அடியோடு எதிர்ப்பவர்கள் நாத்தீகர் மட்டுமல்ல! இந்தியப் பண்பாட்டுச் சமயங்களை ஒழுகும் பெரும்பான்மையோரும் அதனை எதிர்த்தே வந்துள்ளனர். மனுதர்மமே இந்தியப் பண்பாட்டுச் சட்டம் என்று பெரும்பான்மை மக்கள் நம்பியிருந்தால், அம்பேக்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எத்தனிக்கக்கூட வாய்ப்புக் கிடைத்திருக்காது. ஆக; சமயங்களை ஒழுகும் அதேவேளை, அவை கடந்தும் சிந்திக்கும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ரிசானா என்னும் இலங்கைப் பெண் பதினெட்டுவயது தாண்டாத சிறுமி. அவளது குடும்பம் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பம். வறுமையின் கோரப்பிடியில் தவிக்கும் குடும்பம். இலங்கையிலிருந்து வெளிநாட்டு முகவர்கள் மூலமாக சவூதிக்கு வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள், வீடுகளுக்கு பணம் அனுப்பி, தமது வீடுகளைப் பொருளாதாரரீதியில் வலுப்படுத்துவதை நன்குணர்ந்த ரிசானா, தனது குடும்பத்தையும் வளப்படுத்த வேண்டுமென்ற சிந்தையோடு வெளிநாட்டுமுகவர் நிறுவனமொன்றை நாடினாள். பதினெட்டு வயது கடந்திராத அவளுக்கு, பதினெட்டு வயது கடந்தவளாகக் கடவுச்சீட்டில் பொய்யான பிறந்ததிகதியை வழங்கி, மோசடிசெய்து அந்தமுகவர் நிலையமும் அவளை சவூதிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஒருவீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். ஆடைகளை தோய்த்துக் கொடுத்தல், வீட்டு வேலைகளைச் செய்தல் இவளுக்கு வழங்கப்பட்ட பணிகளாகும். 2005 மே 04ம் திகதி சவூதிக்குச் சென்றவளுக்கு,2005ஆம் ஆண்டு மே 22ம் திகதியே எதிர்காலம் சூனியமாகும் எதிர்பார்த்திருக்கமாட்டாள்.

சம்பவநாளன்று, அவளிடம் தமது 4 மாதக் குழந்தைக்கு புட்டிப்பாலை வழங்கும் பணியைக் கொடுத்துவிட்டு முதலாளியான கணவனும் மனைவியும் வெளியே சென்றுவிட்டனர். குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும்போது, பால் புறையேறி குழந்தை மூச்சுத்திணறி மயங்கிவிடுகின்றது. இவளோ முன்பின் பால் கொடுத்து பழக்கமில்லாதவள். சிறுமி வேறு. என்ன செய்வதென்று தெரியாது கழுத்தை தடவிப்பார்த்து தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு அவ்வேளை வந்த முதலாளியின் மனைவி, குழந்தையைக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோதுதான் தெரியவந்தது குழந்தை இறந்துவிட்டதென்று.

ஷரியாச் சட்டம் சும்மாவிடுமா? பழிக்குப்பழிதானே........கடந்த புதன்கிழமையன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10க்கு கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டாள்!!! ஏழு ஆண்டுகள் கழித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொடூரம்!!!!

பாலினை ஒழுங்காகப் பருக்கத் தெரியாது தாய்மாரின் கவலையீனத்தால் குழந்தைகள் இறக்கும் செய்தி சர்வசாதரணமாக அனைவரும் அறிந்ததொன்றே! இது இப்படியிருக்கையில், எந்த முன் அனுபவமும் இல்லாத ரிசானா மூச்சுத்திணறும் வகையில் தவறாக பாலைப் பருக்கியிருக்கவும் வாய்ப்புண்டு.
congenital esophageal stenosis,atresia போன்ற உணவுக்கால்வாய்த் தொகுதியில் களத்தில் ஏற்படும் பிறப்புக்குறைபாடுகள் போன்ற மருத்துவப் பிரச்சினைகள்கூட உடனடியாக வெளிக்காட்டப்படாமல் ஒருசில மாதங்களின்பின் வெளிக்காட்டப்படலாம். இவ்வாறான மருத்துவப்பிரச்சினைகள் குழந்தைகள் பால்குடிக்கும்போது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் தன்மையுடையவை.

ஆனால் மருத்துவப் பரிசோதனைகள் எதுவுமின்றி,குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவே நீதிமன்றம் கருத்தில் எடுத்து இத்தண்டனையை வழங்கியது. பிணச்சோதனை(postmorterm) நடைபெற்றிருந்தால், மரணத்திற்கான விஞ்ஞானபூர்வமான காரணியைக் கண்டுபிடித்திருக்கலாம். பிணச்சோதனை உண்மையான மரணத்துக்குரிய காரணியை தெளிவுபடுத்தியிருக்கும். ஷரியாச்சட்டம் அதற்கு அனுமதிக்கவில்லை!

எனவே அவளது மரணதண்டைக்குரிய தீர்ப்புக்கு விஞ்ஞானபூர்வ ஆதாரம் தேவைப்படவில்லை. அப்படியானதொரு சட்டம் இன்றைய உலகிற்குத் தேவைதானா?

பிணத்தை அறுத்து சோதனை செய்வதை இரண்டு காரணங்களுக்காக மட்டும் மதச்சட்டம் அனுமதிக்கின்றது. ஒன்று தாய் கருப்பகாலத்தில் இறந்துவிட்டால், கருப்பையில் இருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதற்கு. மற்றையது, இன்னொருவருக்கு உடமையான தங்கம் போன்ற ஏதாவது விலையுயர்மிக்க பொருளை ஒருவர் விழுங்கி, இறந்துவிட்டால் அவரது உடலை அறுத்து உடமையை உரியவரிடம் வழங்குவதன் நிமித்தம்.

ஆக; இறந்தபின் நம்மோடு வராத சடப்பொருளுக்கு முன்னுரிமை வழங்கும் அரபுச்சட்டம், ஒருவரின் நீதித்தன்மையை வெளிக்கொண்டுவருவதற்கு பின்னடிக்கின்றது! இது எவ்வகையில் நியாயம்? இவ்வாறான சட்டமும் மனுநீதியும் மதத்தால் மக்களை ஆளுமென்றால், மனிதம் எப்படி வாழும்?

கழுத்தை வெட்டி கொன்றபின்னும் அவளது சடலத்தை இலங்கைக்கு அனுப்பிவைத்து அவளது பெற்றோரின் துயரை கொஞ்சமேனும் தணிக்க முனைந்திருக்கலாம். ஆனால் அதுவும் அரபுச்சட்டத்தால் தடைசெய்யப்பட்டுவிட்டது. பாவம் பிள்ளையின் உடலை பார்க்கும் யோக்கியதைகூட இல்லாத பெற்றோர்.

ஒருசில மைலுக்குள்ளேயே புதைக்கப்பட வேண்டுமென்ற அரபுச்சட்டத்தின் கொடூரம் யாருக்கும் புரியாது. ரிசானாவின் தாய்க்குமட்டும்தான் புரியும்!!!

ஷரியாச் சட்டப்படி, பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் மரணதண்டனையிலிருந்து தப்பமுடியும். ஆனால், இலங்கை சனாதிபதி தொட்டு, அமெரிக்க சனாதிபதி அடங்கலாக அனைத்து மனித உரிமை அமைப்புக்களும் வேண்டியும் மன்றாடியும் பாதிக்கப்பட்டவரின் மனம் இரங்கவில்லைப் பாருங்கள்.

  • பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இன்னொரு குழந்தை பிறந்துமாயிற்று.
  • குற்றஞ்சாட்டப்பட்ட ரிசானா ஏழாண்டுகள் தண்டனை அனுபவித்துமாயிற்று.
  • ஆனால் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத் தாய்க்கு இரக்கம் என்பதை ஏன் இறைவன் கொடுத்திருக்கவில்லை?
  • 4மாதக் குழந்தைக்கு புட்டிப்பாலைக் கொடுக்கும்படி பணித்துவிட்டு ஊர்சுற்றச் சென்றவர்களுக்கு இரக்கம் இருக்குமா என்ன?

ரிசானா வந்து ஒருமாதங்கூட இல்லை. அரபுமொழிகூடத் தெரியாது. ஏதேனும் கள்ளநோக்கில் கொலைசெய்திருந்தால் என்று பார்த்தாலும், அதற்குரிய வாய்ப்புக்கள் அறவேயில்லை. பெரியபிள்ளை ஒன்று இறந்திருந்தால், ஏதேனும் களவெடுக்கும்போது பார்த்துவிட்டதென்றுகூடக் கூறலாம். ஆனால் எதுவும் அறிந்துகொள்ளும் ஆற்றலற்ற 4மாதக் குழந்தை. புட்டிப்பாலைக் கொடுக்கும்போதே இறந்துள்ளதால், தவறான முறையில் முன் அனுபவம் இல்லாது கொடுத்து மூச்சுத்திணறியதற்கு 100 வீத வாய்ப்பும் உண்டு. ஆனால் இவைபற்றிய சிந்தை பாதிக்கப்பட்ட முதலாளி குடும்பத்துக்கு இல்லை என்றால், ஷரியாச்சட்டத்துக்கு இல்லையென்றால் - அக்கணவன் - மனைவிக்கும் ஷரியாச்சட்டத்துக்கும் பண்பால் வேறுபாடில்லை என்றுதானே சொல்ல வேண்டும்.

அவளது கடவுச்சீட்டு உண்மையான தகவல் கொண்ட ஆவணம் அல்ல என்று இலங்கை அரசு உறுதிசெய்த பின்பும், அவளது கடவுச்சீட்டில் உள்ளபடி வயதைக் கருத்திலெடுத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதென்றால் மனிதாபிமானம் என்பது கொஞ்சம்கூட இல்லாத சட்டத்தை உடையநாடு என்பதை சவூதி உறுதிசெய்துள்ளது! வாழ்க வளமுடன்!

தன்மீது விழுந்த ஷரியாச்சட்டத்தின் கொடூரமுகத்திற்கு எதிரான எதிர்வினை எதையும் தன்னுடைய இறப்பிற்கு பின்னேனும் தான்சார்ந்த சமூகத்திடம் இருந்து பெறமுடியாத பாவியாக ரிசானா விளங்குகின்றாள். ரிசானாவின் மரணத்தை மூதூர் மக்கள் ஏற்கின்றனர் என்று அங்குள்ள மதத்தலைவர்கள் ஒன்றுசேர்ந்து அறிவித்துள்ளனர். அவர்களுக்கு என்ன? ரிசானாவைப் பெற்றதாய்க்கு இறைவன் பதில் சொல்லியே ஆகவேண்டும்!!! ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கின்றது. இலங்கை அரசு கண்டிக்கின்றது. பிரித்தானியா கண்டிக்கின்றது.மனிதவுரிமை அமைப்புக்கள் யாவும் கண்டிக்கின்றன. ஆனால் மதத்தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர். என்னே மனிதம்!!!

மலலா என்னும் பாக்கிஷ்தான் சிறுமியை இஸ்லாமியச் சட்டத்திற்கு எதிரானவள் என்று தலிபான்கள் சுட்டபோது, முழுப் பாக்கிஷ்தானும் விழித்துக் கொண்டது. ஆனால் ரிசானாவின் மூதூர் மதத்தலைவர்களிடம் சரணடைந்தது!!!

அவள் புண்ணியபூமி என்று கருதிய சவூதி - அவளது கழுத்தை அறுத்து கொன்றது தனது சட்டத்தால்! அவள் தாய்வீடு என்று கருதிய மூதூர் அவளைக் கைகழுவியது அரபுநாட்டுச் சட்டத்தின் புனிதத்தைக் காக்கும் கடமையுணர்வால்!

அதுமட்டுமா இதோ அடுத்த  செய்தி

  பெரும் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15வயது சிறுமியை மணந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 90 வயதான சவூதி அரேபியா நபர் ஒருவர். இந்த வயது முதிர்ந்த தாத்தாவுக்குக் கட்டி வைக்கப்பட்ட அந்த சிறுமி, 2 நாட்கள் பெட்ரூம் கதவை மூடிக் கொண்டு பயத்தில் வெளியே வராமலேயே இருந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி விட்டார்.

சவூதி அரேபியாவில் இந்த திருமணம் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தனது திருமணம் சட்டப்பூர்வமானதே என்று அந்த 90 வயது சவூதி அரேபிய நபர் கூறுகிறார். மேலும், அந்தச் சிறுமியை மணப்பதற்காக 17,500 டாலர் பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சிறுமி ஏமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும், சவூதியைச் சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர் ஆவார்.

ரிசானாவின் உயிரைமட்டுமல்ல 15 வயது சவூதிச் சிறுமியின் எதிர்காலத்தையும் சேர்ந்தே இச்சட்டம் நாசமாக்குகின்றது! அறிவுள்ளோர் சிந்திப்பார்களாக!

5 comments :

Anonymous ,  January 12, 2013 at 7:29 AM  

ஷரியா சட்டம் என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான கற்கால சட்டம். உண்மையில் ஷரியா சட்டம் என்பது மனிதர் அறிவுரீதியாக நாகரீகம் அடைவதிற்கு முன்னர் மனிதநேயம் அற்ற காட்டு மிராண்டி அரக்கர்களினால் பின்பற்றி வந்த கொடுரச்சட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இவ் நாகரிக, நவீன உலகில், இன்றும் அச் ஷரியா சட்டம் ஒரு சில அரபு நாடுகளில் பின்பற்றப்படுகிறது என்றால், அந்நாடுகளும், ஆட்சியாளர்களும், அந்நாட்டு மக்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை எவரும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வுலகில், கற்கால காட்டு மிராண்டி ஷரியா சட்டம் சரியா? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.

Anonymous ,  January 12, 2013 at 11:35 AM  

no any right to say about islamic rules.. see your country rules..till all wrong happens in there... shut

Anonymous ,  January 12, 2013 at 9:47 PM  

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு காட்டு மிராண்டி சட்டத்தினால் உண்மை, நீதி, நியாயத்திற்குக்கு எதிராக உங்களுக்கு கடும் பாதிப்புகள், இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் உங்கள் மனநிலை, உங்கள் கருத்துக்கள் எப்படியிருக்கும்? சிந்தித்துப்பாருங்கள்.

Anonymous ,  January 13, 2013 at 3:58 PM  

உங்களையே அடையாளப்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையிலுள்ள நீங்கள், ஷரியா சட்டம் பற்றி எதுவுமே தெரியாது, இவ்வாறு தான்தோன்றித்தனமாக சுருக்கம் எழுதி மற்றைய சகோதரர்களின் மனத்தை புண்படுத்தும் இக்கொடிய நோய் அக்கால அரக்கர்களின் செயல்களையே மிஞ்சிவிடுகிறதே>>>>>>>>>> முடிந்தால் சீராக கற்று, அறிக்கை விடுங்கள் அய்யா!
மேலும் இக்கட்டுரையை எழுதிய இக்கால அறிவு படைத்தவரே(?) நீங்களும் சற்று தீர விசாரித்து, அறிந்து எழுதவும்.
நன்றி,
இலங்கை அசாம்.

Anonymous ,  January 17, 2013 at 9:12 AM  

ஐயா முகவரியில்லாத கட்டுரையாளரே நீங்கள் என்னதான் சொல்லுறீங்கோ? சவூதி அரசாங்கத்தால் ஷரிஆ என்று அழைக்கப்படும் சட்டம் பிழை என்கிறிங்களா அல்லது இஸ்லாமிய ஷரிஆ சட்டம் பிழை என்கிறீங்களா? இஸ்லாமிய ஷரிஆ சட்டம் என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? ஆண்துணை இல்லாமல் எந்தவொரு பெண்ணையும் வேலைக்கு அமர்த்தக்கூடாது என்கிறது இஸ்லாமிய ஷரிஆ!
அதையும் மீறி சவூதி போன்ற இஸ்லாத்தை நூறு சத விகிதம் பின்பற்றுகிறோம் என்று சொல்லும் நாடுகளும் பெண்களை வேலைக்கு எடுக்கத்தான் செய்கிறாகள் அது யாரது குற்றம் அந்நாடுகளின் குற்றமா? அல்லது இஸ்லாமிய ஷரிஆவின் குற்றமா?
இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து உங்களை போன்றோர் இஸ்லாத்தையும் அதன் சட்டத்தையும் இழிவுபடுத்தலாம் என நினைப்பது நன்கு புரிகிறது.
நீங்கள் கூறுவது போன்று இஸ்லாமிய ஷரிஆ சட்டம் எடுத்தோம் கவுத்தோம் என்று ஒருவரையும் பலிக்கு பலி வாங்க சொல்லவில்லை.

உங்களுக்கு தெரிஎல்லன்னா இந்த லிகில் உள்ள வீடியோவை பாருங்கையா.
http://www.youtube.com/watch?v=7bEjii83KJQ

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com