Monday, November 5, 2012

பேரணிகள் மீதான தடைகள் தொடர்பில் பஹ்ரைன் மீது ஐ.நா. குற்றச்சாட்டு

பேரணிகள் மற்றும் பொது ஒன்றுகூடல்கள் மீது கடுமையான தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது தொடர்பில் பஹ்ரைன் அரசாங்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பஹ்ரைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பான தனது இக்கருத்தை கடந்த வியாழக்கிழமை பான்கீமூன் தெரிவித்திருந்ததாக அவரது பேச்சாளர் மார்டின் நெசிர்கீ குறிப்பிட்டதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

கருத்து வெளிப்பாடு, சமாதான ஒன்றுகூடல் மற்றும் அமைப்புகள் என்பவற்றுக்கான சுதந்திரம் உள்ளடங்கலான சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென செயலாளர் நாயகம் பஹ்ரைனுக்கு வலியுறுத்தியுள்ளார்.

பேரணியாளர்கள் மீது தடைகளை விதித்து தாக்குதல்களை நடத்துவது பஹ்ரைனின் நிலைகளை மேலும் மோசமாக்கும் எனவும் ஐ.நா. செயலாளர் எச்சரித்துள்ளார்.

இத்தகைய தடைகள், நாட்டின் பதட்ட நிலையைத் தீவிரப்படுத்தும் எனத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், பஹ்ரைன் அரசாங்கம் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இத்தடைகளை அகற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த புதன்கிழமை, பஹ்ரைனில் அனைத்துப் பேரணிகளையும் பொது ஒன்றுகூடல்களையும் தடை செய்வதாக மேற்கொண்ட அரசாங்கத்தின் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாகக் கண்டித்திருந்தது.

அமைதிப் பேரணியாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் முன்னெடுப்பது கட்டாயமாகும் என்பதுடன், அதிகாரிகளினால் அனைத்துப் பேரணிகள் மீதும் தடைகளை எளிதாக திணித்து விட முடியாது எனவும் லண்டனை அடிப்படையாகக் கொண்டியங்கும் அவ்வமைப்பு குறிப்பிட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து பேரணிகளும் ஒன்றுகூடல்களும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான துஷ்பிரயோகம் என்ற அடிப்படையில் தடை செய்யப்படுகின்றன என அக்டோபர் 30ம் திகதி வெளியிட்ட அறிக்கையொன்றில் பஹ்ரைனின் உள்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியது.

கடந்த 2011 பெப்ரவரியில் ஆரம்பமான பஹ்ரைன் புரட்சி, ஆளும் அரசுக்கு எதிராகவும் ஜனநாயகம் கோரியும் இதுவரை பெரும் பேரணிகளை நடத்தியுள்ளது.

எனினும், பஹ்ரைன் அரசாங்கமோ இப்பேரணியாளர்கள் மீது கடும் தாக்குதல்களையும் நெருக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது. சவூதி ஆதரவு பஹ்ரைன் படைகள் மோசமான தாக்குதல்களை இவ்வமைதிப் பேரணியாளர்கள் மீது தொடுத்து வருகின்றது.

இதுவரை பல நூறு பொதுமக்கள் இப்போராட்டங்களில் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றும் பல நூற்றுக்கணக்கானோர் அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புரட்சியாளர்களுக்கு வைத்தியம் செய்ய முன்வந்த மருத்துவர்கள் மற்றும் தாதியர்களும் அடங்குவர்.

ஜனநாயக முறையிலான அரசாங்கமொன்றை தமது நாட்டில் நிறுவும் வரை தமது போராட்டம் தொடரும் என புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  November 5, 2012 at 5:14 PM  

Is he doing a proper job as an UN secretary....? Libya now in Syria,how the mass murders criminal activities by the western backed rebels going on.-UN is blind folded
by the west.Cry over Bahrain...Just only crocodile tears of U(N secretary.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com