Friday, September 14, 2012

மாகாத்மா காந்தியை அவமதித்த உதயன். மன்னிப்பு கேட்காவிட்டால் எரிக்கப்படும். எச்சரிக்கை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளியான 'மகாத்தமா ஆடிய மங்காத்தா' எனும் செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தியானது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் வெட்கி தலைகுனிய வைத்துள்ளதாகவும் அச்செய்திக்கு உதயன் பத்திரிகை மன்னிப்புக்கோர வேண்டுமெனவும் 'போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பு' கோரிக்கை விடுத்துள்ளதுடன் உதயன் மன்னிப்புக்கோர தவறும் பட்சத்தில் அப்பத்திரிகையை எரிப்பதற்கான போராட்டம் தொடரும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் முழுவடிவம்.

11.09.2012
திரு. ஈ.சரவணபவான் MP
பிரதம நிறைவேற்று அதிகாரி
உதயன் பப்ளிகேசன் பிறைவேற் லிமிற்றேட்.

மகாத்மா காந்தி ஆடிய மங்காத்தா

பத்திரிகை சுதந்திரம் என்பது நாட்டிற்கு தேவைதான். பத்திரிகைகளில் வரும் விடயங்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை வைத்துத்தான் செய்தி வெளியிட வேண்டும் என்றால் அது நிச்சயமாக பத்திரிகையாக இருக்கமுடியாது. ஆவணப்புத்தகமாகத்தான் இருக்கும். இதில் பத்திரிகைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று புதினப்பத்திரிகைஇ இரண்டாவது செய்திப்பத்திரிகை. மக்களின் மகிழ்வு பொழுதுபோக்கு உட்பட சில பொதுவான அம்சங்களை கருத்தில் கொண்டு விற்பனை இலாபம் நோக்காக மட்டும் செயற்படுவது புதினப்பத்திரிகை ஆகும். செய்திப்பத்திரிகை என்றால் உயர்மட்ட வாசகர்களது செய்தித்தேடல்இ அரசியல் தேடல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுமான அளவு ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படும் பத்திரிகைகளாகும்.

ஐரோப்பாவில் ஒரு பத்திரிகை 100 வருடங்களுக்கு மேலாக நல்ல முறையில் இயங்கிவந்தது. அந்த பத்திரிகை நிருபர் ஒருவர் செய்த தவறுக்காக மனம் வருந்தி பிரபலமான அந்தப்பத்திரிகை மக்களிடம் மன்னிப்பு கேட்டதோடு நின்றுவிடாமல் தனது பதிப்புக்களையும் நிறுத்தி பத்திரிகை தர்மத்தை காத்துக்கொண்டது.

இனி நாம் நேரடியாகவே விடயத்துக்கு வருவோம். மகாத்மாகாந்தியைப் பற்றி உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாக எமது கண்டனத்தை தெரிவிக்கவே நாம் இந்த அறிக்கையினை வெளியிடுகிறோம். ஆரம்பத்தில் நல்லதொரு வாசகர் வட்டத்தை கொண்டு சிறந்த செய்திப்பத்திரிகையாக விளங்கிய உதயன் பின்னர் புதினப்பத்திரிகையாக மாறி இப்போது இரண்டும் கெட்டான் நிலையில் விளம்பர பத்திரிகை போல் மாறிப்போயுள்ளது. இப்படி தங்களையே கெடுத்துக்கொண்டவர்கள் அதோடு நின்றால் போதாதா ?

20ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த விஞ்ஞானி எனப்புகழப்படும் ஆல்பட் ஐன்ஸ்டீன் மகாத்மாகாந்தி பற்றி குறிப்பிடும் போது 'இப்படி ஒரு மனிதன் உயிரோடு இந்தப் புவியில் வாழ்ந்தான் என்பதனை எதிர்கால சந்ததியினர் நம்பக்கூட மாட்டார்கள்' என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

படத்தைப் பிரசுரிப்பதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் எமக்குப் பரவாயில்லை. பத்திரிகை ஆசிரியரின் வக்கிர புத்தியையே இது எடுத்துக்காட்டுகிறது. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய திரு. சரவணபவான் தன்னுடைய சொந்தப்பத்திரிகையில் இவ்வாறான செய்தியினை பொறுப்பற்ற முறையில் வெளியிட்டு அகிம்சையைப்பின்பற்றும் தமிழ்மக்களுக்கு வெட்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.

எனவே இதற்குப் பொறுப்புக்கூறும் கடமை யிலிருந்து உதயன் ஆசிரியர் பீடமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (TNA) பாராளுமன்ற உறுப்பினர் திரு. சரவணபவானும் தப்பிவிடலாம் என்று எண்ணக்கூடாது.

இந்திய அரசாங்கத்திடம் இருந்தும் இந்நிய மக்களிடமிருந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக 50000 வீடுகள் நிவாரண உதவியாக கிடைக்கக்கூடிய இந்த வேளையில் இவ்வாறான சித்தரிப்புக்கள் தமிழ் மக்களுக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே நாம் கருதுகிறோம்.

எனவே மகாத்மாகாந்தி ஆடிய மங்காத்தா என்ற பெயரில் உண்மைக்குப் புறம்பான சித்தரிப்பு ஒன்றை வெளியிட்டு உலகில் அகிம்சையைப் பின்பற்றும் பலகோடி மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். மகாத்மாகாந்தியைப் பற்றி கேவலப்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிட்ட உதயன் பத்திரிகையும்இ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு (TNA) பாராளுமன்ற உறுப்பினர் திரு. சரவணபவானும் இந்த செயலுக்காக மனம்வருந்தி மன்னிப்புக்கேட்க வேண்டும்.

குறித்த அந்தப்படத்தில் உள்ளது மகாத்மாகாந்தி அல்ல என்று நாம் உறுதியாக நம்புகின்றோம் மகாத்மாகாந்தி போன்று வேடமணிந்து வேறு யாராவது மகாத்மாகாந்தியைக் கொச்சைப் படுத்த முயன்றிருக்கலாம். அல்லது கணனி முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். என்பதே எமது கருத்தாக உள்ளது. எமது மேற்படி கோரிக்கையை ஏற்று உதயன் ஆசிரியர் பீடம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் உதயன் பத்திரிகையை எரிக்கும் போராட்டம் நடாத்தப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி


இவ்வண்ணம்
வி. சகாதேவன்
தலைவர் : போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com